Saturday, June 26, 2010

வரலாறு எம்மை விடுதலை செய்யுமா?

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த மூத்த குடிமக்கள் - முடியுடனும், கொடியுடனும் ஆண்ட வீர வரலாறு படைத்தவர்கள் - 'கங்கை கொண்டான் கடாரம் வென்றான்' என்று போற்றப்பட்டவர்கள் - சிறப்பான நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் - ரோமாபுரி போன்ற மேற்கத்திய நாடுகளுடன் வாணிபம் செய்தவர்கள் - காதலுக்கும், வீரத்திற்கும் இலக்கணம் வகுத்தவர்கள் - போர்க்குணம் கொண்டவர்கள் - போர் முறை தெரிந்தவர்கள்! என தமிழர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

காலங்காலமாக இந்த வரலாற்று நிகழ்வுகளை பதியவைத்து - திருப்திப்படும் தமிழ் சமுதாயம் இன்னும் அதை தொடர்வதுதான் வேதனை. 'காகம் பறக்காத ஊருமில்லை - தமிழன் போகாத (வாழாத) நாடுமில்லை' என்ற ஒரு முதுமொழியும் உண்டு. உலகம் முழுவதும் பத்து கோடி தமிழர்கள் வாழ்கிறோம் என்று பெருமை பேசினாலும் முழு உரிமையுடன் - சுதந்திரமாக வாழ்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். தனித்துவத்தை இழந்து - ஏதோ ஒன்றைச் சார்ந்து வாழப் பழகிக்கொண்ட ஓர் இனமாக தமிழினம் இன்று மாறியுள்ளது என்பதுதான் உண்மை.

இன - மொழி ரீதியாக தனித்துவம் - சுதந்திரம் - இறையாண்மையுடன் 240  நாடுகள் தனி நாடுகளாக இருக்கின்றன. இவைகள் ஐக்கிய நாடுகள் சபையிலும் அங்கம் வகுக்கின்றன. ஜனத்தொகையில்  100 கோடியிலிருந்து 10 லட்சம் வரை பெரிய - சிறிய நாடுகளாகவும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன. ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடியான தமிழனுக்கு இன்றுவரை ஒரு நாடில்லை என்பதுதான் கசப்பான வரலாற்று பதிவு. இந்த வரலாற்றுப் பதிவைச் சற்று பின்னோக்கி பார்ப்போமானால் தமிழரின் வரலாற்று உண்மைகள் புரியும்.

1948 ம் ஆண்டு ஆங்கிலேயரின் பிடியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றபோது தனி நாடு பெறும் முதலாவது சந்தர்ப்பம் தமிழர்களின் கையிலிருந்து நழுவிப்போனது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் சிற்பி ஜின்னா போன்ற தலைவர்கள் இலங்கைத் தமிழர் மத்தியில் இல்லாதது தமிழர்களின் சாபக்கேடு. 1947 ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பாகிஸ்தானை இந்தியாவிடமிருந்து பிரித்துத் தனிநாடாக தர வேண்டும் என்ற ஜின்னாவின் உறுதியான - பிடிவாதமான வேண்டுகோளை ஆங்கிலேயர்களால் நிராகரிக்க முடியவில்லை. இறுதியில் காந்தி, நேரு போன்ற இந்திய தலைவர்களால் கூட ஜின்னாவை சமாதானப்படுத்த முடியாமல் பாகிஸ்தானை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று.

இந்த முன்னுதாரணத்தை அப்போதிருந்த இலங்கைத் தமிழர் தலைவர்கள் பின்பற்ற தவறிவிட்டனர். சேர். பொன். அருணாசலம், சேர். பொன். இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் இருந்தும் - சிங்களத் தலைவர் டி.எஸ்.சேனாநாயக்க விரித்த வஞ்சக வலையில் சிக்கித் தடுமாறினார்கள். ஜின்னா போன்று தமிழ் தலைவர்கள்களும் தமிழுக்கென்று தாயகத்தை கேட்டுவிடக் கூடாது என்ற ஒரே நோக்கோடு திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்கள். தேன் தடவிய வார்த்தைகளால் திணறடித்தார்கள். ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுத்தர உங்களால்தான் முடியும் - லண்டனில் பேச்சுவார்த்தை நடத்த சரியான தலைவர்கள் நீங்கள்தான் என்று முதன்மைப்படுத்தி சிங்களத் தலைவர்கள் பேசப் பேச தமிழ் தலைவர்கள் அருணாசலமும் - இராமநாதனும் தடம் புரண்டே போனார்கள். தமிழ் மக்களை மறந்தார்கள். கொழும்பில் உள்ள தங்களது சொத்துக்களும் - சுகவாழ்வும் பறிபோய்விடக் கூடாது என எண்ணினார்கள். மொத்தத்தில் தங்கள் நலன்களுக்காக சிங்களர்களும் தமிழர்களும் இலங்கையில் சேர்ந்து வாழலாம் என்று ஒரு தவறான முடிவை எடுத்தார்கள்.

சிங்கள தலைவர்களின் நம்பிக்கை துரோகம் பின்னால் வெளிச்சத்திற்கு வந்தபோது, தமிழர்கள் நிலைகுலைந்தே போனார்கள். 1958 - 1977 - 1983 ம் ஆண்டுகளில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்கள் அதனால் ஏற்பட்ட மரணங்கள் - காயங்கள் ஆற்ற முடியாத வடுக்களாக தமிழர்களின் மனதில் ஆழப் பதிந்தது. இது சிங்கள அரசுக்கு எதிரான ஒரு ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிகழ்வுகள் இலங்கை தேசத்தையே புரட்டிப்போட்டன. அகிம்சைப் போராட்டம் தோல்வியில் முடிய - சிங்கள அடக்குமுறைகளுக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் உலகத் தமிழர்களையே திரும்பிப் பார்க்க வைத்தன. அடிப்பட்ட தமிழர்கள் திரும்பி அடிக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. புறநானூற்றில் எழுதப்பட்ட தமிழர்களின் வீர வரலாறு இலங்கைத் தீவின் தமிழர் மண்ணில் மீண்டும் நிகழத் தொடங்கியது. கற்காலத்தில் வாள் - வில் - அம்புடன் போரிட்ட தமிழர் வீரமும் தற்காலத்தில் நவீன துப்பாக்கிகளுடன் - சிங்கள இராணுவத்துக்கு எதிராக இலங்கைத் தமிழ் இளைஞர்கள் போரிட்டதும் ஒப்பீட்டளவில் வரலாற்றுச் சிறப்பை பெற்றிருந்தன. இது தமிழர்களின் பண்டைய வீரத்தை நினைவு படுத்துவதாகவும் இருந்தன. அதிலும் புலி இலச்சனை (சின்னம்) பதித்த கொடியை கையில் ஏந்தி போராடியது - சோழ மன்னர்களை நினைவுப்படுத்துவதாக இருந்தது. பண்டைய தமிழர்களின் வீரம் பல நூற்றாண்டுகளாகியும் மறைந்துவிடவில்லை என்பதையும் இலங்கைத் தமிழர் போராட்டம் எடுத்துக்காட்டியுள்ளது.

இருப்பினும் உலக வரை படத்தில் தமிழனுக்கு ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற 10 கோடி தமிழர்களின் கனவு - கனவாகவே முடிந்து போனது. குறுகிய காலத்தில் எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திற்கும் கிடைக்காத ஆதரவு இலங்கைத் தமிழர் போராட்டத்திற்கு கிடைத்தது. தமிழர்கள் மட்டுமல்லாது சர்வதேச சமூகமும் தங்கள் ஆதரவை கொடுத்தது. ஆனால் தமிழர்களுக்கு எதிரான புறச் சூழ்நிலைகள், குறிப்பாக அவர்களுக்கிடையான ஐக்கியமின்மை போன்றவை அவர்களது போராட்டத்திற்கு எதிராகவே திரும்பியது. சிங்கள அரசு அதைபயன்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாததிற்கெதிரான போராட்டமாக திரித்து - அயல் நாடுகளிலிருந்து வரவழைத்த - தடை செய்யப்பட்ட இரசாயனக் குண்டுகளை வீசி பல முனைத்தாக்குதல் மூலம் போராட்டத்தை அழித்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில் போராட்ட வீரர்களும் - பொது மக்களும் (பெண்கள், குழந்தைகள்) உட்பட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த தமிழர்கள் சிங்கள இராணுவ கனரக வாகனங்களால் ஏற்றி - நசுக்கப்பட்டு முள்ளி வாய்க்காலில் புதைக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் ஏற்பட்ட தமிழர்களின் மரண ஓலங்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை கேட்டது. ஆனால் அயல்நாட்டுக்கு மட்டும் கேட்காமல் போனதுதான் வேதனை.
 பாலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட யூதர்களை மீளக் குடியமர்த்தி இஸ்ரேல் நாட்டை உருவாக்கியது இங்கிலாந்து.

கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு விரட்டப்பட்ட வங்க மக்களுக்காக பாகிஸ்தானுடன் போர் தொடுத்தது. வங்காள தேசத்தை பெற்றுக் கொடுத்தது இந்தியா.

இந்த இரண்டு நாடுகளாலும் கைகழுவி விடப்பட்ட இலங்கைத் தமிழர்கள் - மேற்குலக நாடுகளிலும் - தமிழகத்திலும் அகதிகளாக வாழ்கிறார்கள். இவர்களை - இலங்கை தமிழ்மண்ணில் மீழக்குடியமர்த்தி அவர்களின் தாயகத்தை பெற்றுக் கொடுப்பது இரு நாடுகளின் தார்மீக கடமையாகும்.

போராட்டத்தில் சிந்தப்படும் இரத்தம் எந்த இனமானாலும் அதன் நிறம் சிவப்புதான். இலங்கைத் தமிழர்களின் இரத்தமும் சிவப்புதான். யூதர்கள் - வங்காளிகள் இரத்தமும் சிவப்பென்றால் தமிழர்களின் இரத்தமும் சிவப்புதான். இதில் பாரபட்சம் ஏன்?
இறுதியாக கோவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், தமிழ் வளர்ச்சிக்காக பல திட்டங்களை தீட்டி தீர்மானங்களை முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் எடுக்கப்போகிறார்கள். இந்த நேரத்தில் தமிழ் வளர்ச்சி மட்டுமின்றி தமிழ் சமுதாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். இதை இந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் 10 கோடி தமிழர்களின் விருப்பமாகும்.

என்.ஆர்.சோமு

2 comments:

முத்துவேல் said...

நீங்கள் செய்வது மட்டுமே வரலாறு ஆகும் !

http://peraasiriyar.blogspot.com/2010/03/blog-post_5546.html

ராசராசசோழன் said...

இதை தாங்க பல பதிவுல கருத்தா போட்டேன் "தமிழனை கொன்று விட்டு தமிழை வளர்க்க முடியாது"

உங்க பதிவு நிச்சயம் பல பேரைச் சென்றடைய வேண்டும்...நல்ல பதிவு...