Saturday, June 26, 2010

உதவும் கரங்கள் உன்னதமானவை

தமிழ்...

செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிற உன்னதமான மொழி. இரண்டாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த இலக்கண, இலக்கியங்களையும், பண்பாட்டுக் கூறுகளையும் கொண்ட உயர்ந்த மொழி. இந்த உயர்ந்த மொழி பேசும் தமிழ் மண்ணில் உலகத் தமிழர்கள் ஒன்று கூடியிருக்கின்ற இனிய நேரம் இது. இந்த நேரத்தில் புறநானூறு என் கைகளில் புரள்கிறது.

புறநானூறு... சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்', 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' போன்ற உயர்ந்த சிந்தனைகளைப் பதிவு செய்திருக்கின்ற வரலாற்றுப் பெட்டகம்.


புரட்டுகின்றேன். பக்கங்களைப் புரட்டுகின்றேன். ஒரு பக்கத்தில் கண்கள் நிலைகொள்கின்றன. நக்கீரர் எழுதிய ஒரு பாடல் என்னைப் புரட்டிப் போடுகின்றது. வாழ்க்கையில் நாம் ஈட்டுகிற செல்வத்தின் பயன் என்ன என்ற கேள்விக்கு விடை சொல்கிறது இந்தப் பாடல்...

தென்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நாடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே


பாடலின் கருத்து இதுதான்: உலகம் முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் ஓர் அரசனுக்கும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் கொடிய விலங்குகளை வேட்டையாடி வாழும் கல்வியற்ற ஒரு வேடுவனுக்கும் உண்கிற உணவு ஒரு நாழிதான், மேலாடை, கீழாடை என்கிற இரண்டு ஆடைகள்தான். இது அனைவருக்குமே பொதுவானது.

ஆனால் ஒருவன் பெற்ற செல்வத்தின் பயன் பிறருக்குக் கொடுப்பதுதான். தான் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணினால் அவன் பல நன்மைகளை இழக்க நேரிடும் என்கிறது இப்பாடல்.

பாடலில் வருகின்ற 'உண்பது நாழி உடுப்பவை இரண்டே', 'செல்வத்துப் பயனே ஈதல்' போன்ற வரிகள் வாழ்க்கையின் மகத்துவத்தை உணர்த்துகின்ற உன்னத வரிகள். கேள்விக்கான விடையைச் சொல்லுகின்ற வரிகள்.

மற்றொரு பக்கத்தைப் புரட்டுகிறேன். மழையைப் போல் கொடுக்கின்ற கரங்களுக்குச் சொந்தக்காரனாக மன்னன் பாரி தென்படுகிறான்.

பாரி... கடையேழு வள்ளல்களுள் ஒருவன். தன்னை நாடி வந்த புலவர்களுக்கு முன்னூறு ஊர்களைப் பரிசாகத் தந்தவன்.

ஊர் கொடுத்ததற்காக இந்த உலகம் அவனைப் பாராட்டவில்லை. முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த அந்தக் கருணை உள்ளத்தைத்தான், உதவிய கரங்களைத்தான் பாராட்டுகின்றது.
  
'மனிதனாகப் பிறப்பது பெரிய விஷயமல்ல. மனிதனாக வாழ்வதே மிக முக்கியம்' என்கிறார் கலீல் கிப்ரான். மனிதனாக வாழ்வது எப்படி என்கிறீர்களா? பிறருக்கு உதவும் உள்ளம் உடையவர்களே மனிதர்கள். முழுமையான மனிதர்கள்.

சக மனிதர்களை உண்மையாக நேசிக்கின்றபோதும், அன்போடு அவர்களை அரவணைத்துக் கொள்கிற போதும் வெளிப்படுகிற அழகைவிட வேறு எதுவும் அழகானதல்ல.

'என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தருவேன்' என்று ஆதரவுக் கரம் நீட்டிய இயேசுபெருமானும்...

'உலகம் ஒரு வாடகை வீடு. இதில் நாம் செய்கின்ற சேவைகள் உலகத்துக்குத் தரும் வாடகை' என்ற சிந்தனையால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்புக்கரம் நீட்டிய அன்னை தெரசாவும்...

சுதந்திர தேசத்தின் விடியலுக்காக வியர்வையையும் ரத்தத் துளிகளையும் சிந்திய மகாத்மா காந்தியடிகளும்...

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார்பெருமானும் பிறர் துயர் தீர்ப்பதையே பெருந்தொண்டாகக் கருதி உதவிக் கரங்கள் நீட்டியதால்தானே இன்றளவும் உத்தமர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!

சுற்றியிருக்கின்ற இயற்கையைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். ஓடிக் கொண்டிருக்கின்ற நதி பிறரின் தாகத்தைத் தணிக்கிறது. வளர்ந்திருக்கிற மரம் பூக்களையும், காய்களையும், கனிகளையும், நிழலையும் பிறருக்குத் தருகின்றது.

நாம் பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் இயற்கை இப்படி நமக்குப் பாடம் புகட்டுகின்றது. உதவி என்பது எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? பூ மலர்வது போல் சப்தமில்லாமல், அனைவருக்கும் வெளிச்சம் தரும் விளக்கைப் போல் பேதமில்லாமல் இருக்க வேண்டும். பெறுவதில் இல்லை, மகிழ்ச்சி. தருவதில்தான் இருக்கின்றது. உங்களிடம் உள்ள சிறந்ததை உலகத்துக்குக் கொடுங்கள், உலகம் சிறந்ததை உங்களுக்குக் கொடுக்கும்.

நாம் நமக்காக மட்டும் வாழ்வதில் அர்த்தமில்லை. அடுத்தவருக்கு ஆறுதலாக உதவிக்கரம் நீட்டுவதில்தான் இருக்கிறது. அந்தக் கரங்களின் அரவணைப்பில் அவர்களின் வாழ்க்கை திசை மாறலாம்.

ஓர் ஊரில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் எப்போதும் எவருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. ஆனால் தான் இறந்தபிறகு தன் சொத்துகள் எல்லாவற்றும் ஊருக்கே சொந்தம். அதில் தான் தர்மங்களைச் செய்து கொள்ளலாம் என்று எழுதி வைத்தார்.

---------------------------------------------------------
  
வாழ்வு தந்த வாய்ப்பு!

மாலை நேரம். வயதான ஒருவர் மாதா கோவிலில் அமர்ந்து பியானா வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஓர் இளைஞன் வந்தான். இளைஞனைப் பார்த்ததும் முதியவர் பியானோவின் சாவியை எடுத்துக்கொண்டு எட்டு வைத்து நடக்கத் தொடங்கினார். இளைஞன் அவரை விடுவதாக இல்லை. தன் கைகளை நீட்டி, "ஐயா... தயவுசெய்து சாவியைத் தாருங்கள்!'' என்று கேட்டான். தயங்கிய அவர் பின்னர் சாவியை எடுத்து இளைஞனிடம் கொடுத்தார்.

வாங்கிய உடனே அவன் பியானோவின் அருகில் சென்றான். சிறிதுநேரம் கழித்து சாவியைப் பியானோவில் செலுத்தி, அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து இசைக்கத் தொடங்கினான். அதற்கு முன் இந்த உலகமே பியானோவில் இருந்து அப்படியொரு இசையைக் கேட்டிருக்காது. அதன் இனிமை மாதா கோவிலை நிறைத்தது.

இப்படித்தான் 'ஜோகன் செபாஸ்டியன் பாஹ்' என்ற இசை மேதைக்கு முதல் முறையாக இசையுலகத்தை அசைத்துப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்து. அவரை உலகமே வியந்து பார்த்த வேளையில் அந்த முதியவர் தனது கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி கூறினார்...

"ஒருவேளை நான் மட்டும் பியானோ சாவியை அந்த இளைஞனுக்குத் தராமல் இருந்திருந்தால் அவனுக்குள் இருந்த இசைத் திறமை வெளிப்படாமல் போயிருக்குமே!''

----------------------------------------------------------

ஆனால் அதன் பிறகும் அவரை யாரும் மதிக்கவில்லை. அவர் செயலைப் பாராட்டவும் இல்லை. அவர் மீது வெறுப்பையே காட்டிக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் ஒரு ஞானி அந்த ஊருக்கு வந்தார். அவரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் பணக்காரர்.

ஞானி சிரித்துக் கொண்டே அவருக்கு ஒரு கதையைக் கூறினார்...

"பன்றி ஒன்று பசுவைப் பார்த்துக் கேட்டது. 'நான் இறந்தபிறகு சுவையான இறைச்சியையும், மதிப்புமிக்க கொழுப்பையும் தருகிறேன். நீயோ பாலை மட்டும் தருகிறாய். ஆனால் உன்னைத்தான் எல்லோரும் போற்றுகின்றார்கள். வழியில் நீ சென்றால் உன்னைத் தொட்டு வணங்குகின்றார்கள். என்னைக் கண்டால் கல்லெடுத்துத் துரத்துகின்றார்கள். என்ன காரணம்?'

உடனே பசு சொன்னது, 'நான் வாழும்போதே மற்றவர்களுக்குப் பயன்படுகிறேன். நீயோ இறந்தபிறகு மட்டுமே பயன்படுகிறாய். அதனால்தான்!' என்றது'' -துறவி கதையைக் கூறி முடிக்க, புரிந்துகொண்டார் பணக்காரர்.

இதைத்தான், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று செம்மொழித் தமிழுக்குச் சிறப்புச் சேர்க்கும் திருக்குறள் கூறுகிறது. வாழ்கிறபோதே உதவி செய்பவன்தான் வாழ்பவன். பிறருக்கு உதவாது வாழ்பவன் இறந்தவனாகவே கருதப்படுவான்.
  
ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

என்கிறது குறள்.

அன்பான இளைஞர்களே,

பிறருக்குக் கொடுக்கும் எண்ணத்தை இதயத்திலே வளர்த்துக்கொள்ளுங்கள். பிறர் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைக்க உங்கள் கைகள் நீளட்டும். துயரங்களைத் தாங்க, சோகச் சுமைகளைச் சுமக்க உங்கள் தோள்கள் தயாராகட்டும். அன்பால் உலகத்தை அரவணைத்துக் கொள்ளுங்கள். இது உங்களின் காலம். காலம் உங்கள் கைகளில் இருக்கும்போதே உதவுங்கள். ஏனெனில் உதவும் கரங்கள் உன்னதமானவை!

No comments: