Thursday, June 24, 2010

உலக மொழிகளுக்கு தாய் போன்றது தமிழ் - கலைஞர் கருணாநிதி

'தமிழ் உலக மொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது'.

கோலமிகு கோவை மாநகரிலே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கும், அதன் தொடக்க விழாவிலே தலைமையேற்பதற்கும் கிட்டிய வாய்ப்பினை பெருமையாகக் கருதுகிறேன்.

இதுவரை உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன. முன்னர் நடந்த எட்டு மாநாடுகளுக்கும், இப்பொழுது நடைபெறுகிற இந்த மாநாட்டுக்கும் வேறுபாடு உண்டு. முன்னர் நடந்தவை "உலகத் தமிழ் மாநாடுகள்''. இப்பொழுது நடைபெறுவது "உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு''.

"உலகத் தமிழ் செம்மொழி'' என்பதில் உள்ள மூன்று சொற்களும் பொருள் பொதிந்தவை மட்டுமல்ல; பொருத்தமானவையும் ஆகும். தமிழ் உலகமொழி மட்டுமல்ல; உலக மொழிகளுக்கெல்லாம் தாய் போன்றது. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், "ஞால முதல்மொழி தமிழே'' என்று நிறுவிக் காட்டியிருக்கிறார்.

மூலத் தாய்மொழிச் சொற்கள் உலக மொழிகளில், சொல் வடிவில், உருத்திரிந்து, பொருள் அளவில் உருத்திரியாமல் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக உலக மொழிகளில் உள்ள அம்மா, அப்பா எனும் உறவுப் பெயர்கள்; நான், நீ, அவன் எனும் மூவிடப் பெயர்கள்; நீர், நெருப்பு, காற்று போன்ற இயற்கைப் பெயர்கள் போன்றவை தமிழோடு மிகவும் நெருக்கம் கொண்டவையாக உள்ளன. தமிழோடு தொடர்பில்லாத அடிப்படைச் சொற்கள் எவையும், உலக மொழிகளில் இல்லாததால் தமிழே உலக முதல் தாய்மொழி எனும் தகுதியைப் பெறுகிறது.

உலக மொழிகளில் மிகத் தொன்மைக் காலம் முதலே இயல், இசை, கூத்து என்னும் முத்தமிழ்; வளர்ச்சியை எய்தியதால், தமிழ் நிலையான தன்மையை அடைந்தது. இலக்கியம் தழுவிய கலை வளர்ச்சி, தமிழுக்கு நிலைத்து நிற்கும் ஆற்றலைத் தந்திருப்பதால், தமிழை உலகத் தாய்மொழி என அறியலாம்.

கி.மு.10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசனாகிய சாலமனுக்கு தமிழகக் கப்பல்கள் மயில் தோகையையும், யானைத் தந்தத்தையும், வாசனைப் பொருள்களையும் கொண்டு சென்றன; வடமொழியில் வேதங்களில் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் இருப்பதை ஆய்வறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்து அறிவித்தார். இதிலிருந்து வடமொழிக்கு முன்பே தமிழ் இருந்தது என்பதை அறியலாம்;

வால்மீகி ராமாயணத்தில் தென்னகத்தை ஆண்ட மூவேந்தர்களைப் பற்றிய குறிப்பும், பாண்டியரின் தலைநகரான கபாடபுரம் பற்றிய குறிப்பும் உள்ளன. இது லெமூரியா கண்டத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்த கபாடபுரம் பற்றியதாகும் எனக் கருதப்படுகிறது; கி.மு.4ம் நூற்றாண்டில் வாழ்ந்த சந்திரகுப்த மவுரியரின் அமைச்சரான சாணக்கியர் தன் அர்த்தசாஸ்திரத்தில் கபாடபுரத்தில் முத்துக்குளித்தலைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்;

கி.மு. 350ல் வாழ்ந்த வடமொழி இலக்கணப் பேரறிஞரான காத்தியாயனார் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்; பாரதப் போர் பற்றி வரும் குறிப்பில், புறநானூற்றில் பாண்டவர் ஐந்து பேருடன், 100 துரியோதனாதியர்களும் போரிட்டபோது இந்த இருபக்கப் படைகளுக்கும் பெருஞ்சோறு கொடுத்த காரணத்தால் உதியஞ்சேரலாதன் - சேரன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் என்று அழைக்கப்பட்டார்; பாரதப் போர் நடைபெற்ற காலம் கி.மு.1500 எனப்படுகிறது. அப்படியானால் இந்தச் சேரனின் காலம் கி.மு.1500 ஆக இருக்க வேண்டும். இவையனைத்தும் தமிழ் இனத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையையும் புலப்படுத்தும்.

பேரறிஞர்களான ஜான் மார்ஷல், ஈராஸ் அடிகள், சர் மார்ட்டிமர் வீலர், கமில் சுவலபில் போன்றோர் திராவிடர்களே "சிந்துவெளி நாகரிகத் தோற்றத்தின் உரிமையாளர்கள்'' எனவும்; அவர்களின் மொழி திராவிடமொழி தான் எனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

சிந்துவெளி நாகரிகம் இரு திராவிடப் பண்பாடு; திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தமிழ்ப் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது; சிந்துவெளிக் குறியீடுகளைப் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தொன்மங்களோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம் என்று கடந்த 40 ஆண்டுகளாகச் சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டுவரும் டாக்டர் ஐராவதம் மகாதேவன் கூறியிருக்கிறார்.

இன்று "கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'' பெறும் பின்லாந்து நாட்டுப் பேராசிரியர் அஸ்கோ பர்ப்போலா - சிந்துவெளிப் பண்பாடும், அதன் எழுத்தும் திராவிடக் குடும்பத்தைச் சார்ந்தவை என்னும் கருதுகோளை ஆய்வுச் சான்றுகளோடு முன்வைத்து, அத்துறையில் தொடர்ந்து அரும்பணியாற்றி வருகிறார். சிந்துவெளியினர் திராவிடமொழி பேசுபவர்களே என்பதற்கான தகுந்த ஆதாரங்களை அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

அகநானூறு, புறநானூறு போன்ற கடைச் சங்க இலக்கியங்கள் கிடைத்ததன் பயனாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; தொல்காப்பியம் கிடைத்ததால், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நமக்குக் கிடைத்தது; சிந்துவெளி எழுத்துச் சான்றுகளின் பயனாக, ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் கண்டறியப்பட்டுள்ளது.

பண்டைத் தமிழர்கள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் பயணம் செய்து, உச்சயினி, கலிங்கப்பட்டினம், காசி, பாடலிபுரம் முதலான இடங்களிலும், கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா), தாக்கோலம், கிடாரம், சாவகம் (கிழக்கிந்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகம் செய்தார்கள்.

தமிழக வாணிகர் அயல்நாடுகளுக்குச் சென்று வாணிகம் செய்தது போலவே, அயல்நாட்டு வாணிகரும் தமிழகத்திற்கு வந்து வாணிகம் செய்தார்கள். அக்காலத்தில், வாணிகத்திலே உலகப் புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்திலே, அயல்நாடுகளிலிருந்து கப்பலோட்டி வந்த வேறு மொழிகளைப் பேசிய மக்கள் தங்கியிருந்ததைச் சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும் எடுத்துரைக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகரும், யவனர்களும், சேரநாட்டின் முசிறித் துறைமுகத்திற்கு வந்து வாணிகம் செய்தனர். இத்தகைய வாணிகத்தின் மூலமாகவும், பல்வேறு மொழிகளின் தொடர்புகளின் காரணமாகவும், தமிழ், உலக நாடுகளில் எல்லாம் அறியப்பட்ட மொழியாயிற்று. அதன் தொன்மையாலும், தனித்தன்மையாலும், முதன்மைச் சிறப்பினாலும், தமிழ் - உலக முதல் தாய்மொழியாக - உலகத் தமிழாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மொழி செம்மொழியாகக் கூறப்படுவதற்கு இன்னின்ன தகுதிகள் வேண்டுமென்று வரையறுக்கப்பட்டுள்ளது. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப் பண்பு, நடுவுநிலைமை, தாய்மைத்தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கிய வளம், உயர்சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை ஒரு மொழி பெற்றிருந்தால் தான், அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல; இந்தத் தகுதிகளுக்கெல்லாம் மேலான மேன்மையான தகுதிகளைப் பெற்ற மொழி தான் தமிழ்மொழி என்பதை தமிழகத்திலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல இந்தியாவிலே பிற மாநிலங்களிலே உள்ள தமிழறிஞர்கள் மட்டுமல்ல. தமிழைக் கற்றுத்தேர்ந்த உலக அறிஞர்கள் எல்லாம் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

தமிழ் செம்மொழியே என முதன்முதலில் குரல் கொடுத்தவர் தமிழறிஞர் வி.கோ.சூரியநாராயணசாஸ்திரி என்னும் பரிதிமாற் கலைஞர் ஆவார். தமிழ் செம்மொழி என்று முதன்முதலில் சொன்ன வெளிநாட்டவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். அயர்லாந்து நாட்டில் ஷெப்பர்ட்ஸ்காலனி என்ற இடத்தில் வாழ்ந்த அவர் அங்கிருந்து குடிபெயர்ந்து தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் இடையான்குடி என்ற ஊரில் தனது இறுதிக் காலம் வரையில் வாழ்ந்தவர். அந்த அளவுக்கு மண்ணின் பற்று, மொழியின் பற்று கொண்டவராக அவர் விளங்கினார்.

தமிழ்-செம்மொழி என்னும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச்சங்கம் தலைநகர் தமிழ்ச் சங்கங்கள் போன்ற அமைப்புகளும், சென்னை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகத்திலே உள்ள பல்கலைக்கழகங்களும், மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், ச.அகத்தியலிங்கம், வா.செ.குழந்தைசாமி, ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, அவ்வை நடராஜன், பொற்கோ போன்ற தமிழறிஞர்களும், டாக்டர் சுனித்குமார் சட்டர்ஜி, டாக்டர் கமில் சுவலபில், டாக்டர் ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற வெளிமாநில, வெளிநாட்டு அறிஞர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

எனினும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழகத்தில் ஓங்கி ஒலித்து வந்த அந்த குரல்; காட்டில் காய்ந்த நிலவாய், கடலில் பெய்த மழையாய் கவனிப்பாராற்று போயிற்று. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தது. அதற்கு பின்னர் தான்; தமிழைச் செம்மொழியெனப் பிரகடனப்படுத்த வேண்டுமென்ற தி.மு.க.வின் கோரிக்கை ஏற்கப்பட்டது. 12.10.2004 அன்று தமிழ் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

ஒரு நூற்றாண்டு காலமாக எழுப்பப்பட்டு வந்த குரல்- குன்றின் மேலிட்ட விளக்காக ஒளி வீசத்தொடங்கியதற்குப் பிறகு - தமிழ் செம்மொழி என்ற பிரகடன அறிவிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டதையொட்டி-நடைபெறுகிற முதல் மாநாடு இது என்பதால்; தமிழின் பெயரால், உலகத்தமிழ்செம்மொழி மாநாடு என்ற திருப்பெயரால் இந்த மாநாடு கோவை மாநகரிலே நடைபெறுகிறது.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகும், இளமையும் அணுவளமும் குறையாமல் இந்த அவனியிலே வாழ்ந்து வரும் தமிழ்மொழியை; இனி எதிர்காலத்திற்கான தேவைகளை மதிப்பிட்டு - கணினித்தமிழ், அறிவியல் தமிழ் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும்; இலக்கியம், ஒப்பிலக்கியம், மொழியியல், மொழி பெயர்ப்பியல், வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப்புறவியல், போன்ற பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வுகளை ஊக்கப்படுத்திடவும், சிந்து சமவெளி முதல் ஆதிச்சநல்லூர், கொடுங்கடல் கொண்ட குமரிக்கண்டம் வரை தொல்லியல் துறையில் இதுவரை மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலும்மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை வகுத்திடவும்; இந்த மாநாடு இப்போது கொங்கு பூமியிலே நடைபெறுகிறது.


"வடக்கு பெரும்பாலை வைகாவூர் தெற்கு
குடக்குப்பொருப்பு வெளிக்குன்று - கிடக்கும்
களித்தண்டலைமேவு காவிரிசூழ் நாட்டு
குளித்தண் டலையளவும் கொங்கு''


என்று ஒரு காலத்தில் கொங்கு நாட்டு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருந்தன. தமிழகத்தின் சரித்திரத்தில் - சங்க காலம் தொடங்கி இன்று வரை - தனி இடம் பெற்றிருப்பதும் - என்னை முதன்முதலாக சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்ததுமான குளித்தலை உள்ளிட்டதும் - கொங்கு நாடாகும். ஆம் குளித்தண்டலையளவும் கொங்கு.

தமிழகத்தில் பாரி, ஓரி, காரி, பேகன், ஆய், அதியன், நள்ளி என்னும் எழுவரை மட்டும் வள்ளல்கள் என வரையறுத்துக் கூறினர் சங்க காலத்துச் சான்றோர்கள். இவ்வெழுவர்க்குப் பின்னர், அவ்வெழுவர் போல ஈதற்கு யான் உளேன் என்ற வள்ளல் குமணனோடு, சங்க கால வள்ளல்கள் எண்மராவர். அவ்வெண்மரில், பேகன், அதியமான், ஓரி, குமணன், ஆகிய நால்வர் கொங்கு நாட்டினர். அது மட்டுமல்ல கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங்கிழான், விச்சிக்கோ, தாமான் தோன்றிக்கோன், மோகூர்ப்பழையன் ஆகிய சங்க காலத் தலைவர்களும், பழையகோட்டைச் சர்க்கரை, மும்முடிப்பல்லவராயர், காடையூர்க்காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மசக்காளிமன்றாடியார், வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன், பாரியூரான், உலகுடையான், அகளங்கன், இம்முடிச்சோழியாண்டான், தீரன்சின்னமலை, கொல்லிமழவன் போன்ற பிற கால சங்கத்தலைவர்களும் கோலோச்சிய பூமி கொங்கு பூமி.

அஞ்சி அத்தை மகள் நாகையார், அதியன் விண்ணத்தனார், அந்திஇளங்கீரனார், ஆலத்தூர்க்கிழார், ஆவியார், இரும்பிடார்த்தலையார், எருமைவெளியானார், கருவூர்க்கண்ணம்பாளனார், கருவூர்க்கிழார், கருவூர்க்கோசனார், கருவூர்ச்சேரமான்சாத்தனார், குடவாயிற்கீரத்தனார், கொல்லிக் கண்ணனார், செங்குன்றூர்க்கிழார், பெருந்தலைச்சாத்தனார், பொன்முடியார் போன்றசங்க காலப் புலவர்கள் பாடிப்பைந்தமிழ் வளர்த்த பூமி கொங்கு பூமி.

இத்தகைய புலவர்களும், புரவலர்களும், தன்னேரிலாத் தலைவர்களும் உலாவிய புகழுக்கும், பெருமைக்கும் உரியது கொங்கு பூமி. அதன் கோலமிகு மாநகரம் கோவை. அந்த மாநகரில் அனைத்து வகையிலும், அழகும், பொருத்தமும் நிறைந்த இடத்தில் - உலகத்தமிழ்செம்மொழி மாநாடு தொடங்குகிறது.


உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலைமையில் வெற்றி முரசு கொட்டிட உளறுவாயனும் தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறான்.



தமிழ்ச் செம்மொழி மாநாட்டுப் பாடல் கேட்போமா.....

No comments: