Monday, June 14, 2010

சரித்திரம்

அக்பரின் 'ரொட்டித்துண்டு'
தயபூரை ஆண்ட உதயசிங் இறந்து போகவே, அவருடைய மகன் பிரதாப் சிங் ஆட்சிக்கு வந்தார்.

அக்பரை எதிர்க்க இவரிடம் போதிய பலமில்லை. இருந்தாலும் தனது கொள்கையை விடவில்லை. ராஜபுத்திர வீரர்களை ஒன்று திரட்டினார். அவர்களுக்குத் தகுந்த பயிற்சியைக் கொடுத்தார். அவர்களும் அதற்கு ஒத்துழைத்தனர்.

ஆரவல்லிக் குன்றுகளை ஒட்டியிருக்கும் காட்டுப்பகுதியில் பிரதாப் சிங் தலைமறைவாக இருந்தார். அக்பரைத் தாக்க, தக்கசமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். நாட்கள் கடந்து போனதில் கையிருப்பு காலியாகி வறுமை வாட்டியது. அதனால் அக்பரிடம் சரணடைந்து விடலாமா என்று கூட யோசித்தார்.

தந்தையின் நிலையை உணர்ந்து கொண்ட மகள் சம்பா, "அப்பா, நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. நீங்கள் அந்த கொடியவர்களுக்கு ஒருநாளும் அடிபணியக் கூடாது'' என்றாள்.

தந்தை அவளுடைய முகம் பார்த்தார். அறிவு ததும்பும் அந்த அழகிய முகம், பசியால் வாடுவதைக் கண்டு வருந்தினார். "அப்பா, உணர்ச்சி வசப்பட்டு, அக்பரிடம் சரணடைந்து பரம்பரை பரம்பரையாக நாம் கட்டி காத்து வந்த மரபை மண்ணோடு மண்ணாக்கி விடாதீர்கள்'' என்றாள், சம்பா.

"என்னிடம் இப்போது எதுவுமே இல்லையே, நான் உங்கள் பசியை இனி எப்படி போக்குவேன்'' என்று கலங்கிய தந்தையிடம், "அப்பா, கலங்காதீர்கள். என்னிடம் இரண்டு ரொட்டித்துண்டுகள் உள்ளன. அதில் ஒன்றை தம்பிக்கு கொடுக்கிறேன்'' என்றாள் சம்பா.

"சம்பா உனக்கு ஏதம்மா இந்த ரொட்டித் துண்டுகள்?''

"நான் சாப்பிடாமல் வைத்திருந்தது. இதோ எடுத்து வருகிறேன்''.

சம்பா குடிசையின் உள்ளே போய் ரொட்டித் துண்டுகளை எடுத்து வருகிறாள். அப்போது அங்கு ஒரு துறவி வருகிறார்.

"நான் மிகவும் பசியோடு இருக்கிறேன். சாப்பிட ஏதாவது இருக்குமா? சிறிய ரொட்டித்துண்டு இருந்தாலும் போதும்'' என்கிறார், துறவி. மகள் சம்பாவை பார்க்கிறார். அவளும் தலையசைக்கிறாள். அவளின் ரொட்டித்துண்டுகளை எடுத்து துறவியிடம் கொடுக்கிறாள்.

"ஐயா, உங்கள் நிலை எனக்குப் புரிகிறது.'' என்கிறார் துறவி.

"என் நிலை உங்களுக்குப் புரியாது. இந்த ரொட்டித்துண்டுகளை நீங்கள் பெற்றுக் கொண்டதற்கு என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. ஏன் தெரியுமா? அக்பர் சக்கரவர்த்தியே என்னிடம் கரம் நீட்டுகிறார். அவருக்கு இந்த ரொட்டித்துண்டுகளைக் கொடுப்பதால், இப்போது என் கரம் உயர்ந்து விட்டது. அவர் கரம் தாழ்ந்து விட்டது.'' என்று நெகிழ்ந்தார், பிரதாப் சிங்.

இதைக் கேட்ட சம்பா, "அப்பா உங்கள் பெருமையும், கவுரவமும் காக்கப்பட்டு விட்டது'' என்று கூறி கீழே விழுகிறாள். மரணம் அவளைத் தழுவுகிறது.

துறவி வேடத்தில் வந்த அக்பர், "பிரதாப் சிங்! உன்னை யாராலும் வெல்ல முடியாது. சம்பா போன்ற மகளை பெற்றெடுத்த நீ உண்மையிலேயே பாக்கியவான். நான் வருகிறேன்'' என்று விடைபெற்றார்.

அதன்பிறகு, பலம் குறைவான ஆயுதங்களை வைத்தே மேவாரின் பெரும்பகுதிகளை பிரதாப் சிங் கைப்பற்றினார் என்பது வரலாறு.


**********************

காதலை உருவாக்கிய 'பாதை'
ராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பிறகு ஆட்சி செய்தவர் அவரது மகன் சாம்பாஜி. அப்போது மகாராஷ்டிர அரசு வீழ்ச்சியுற்றிருந்தது. அது அவுரங்கசீப் படையெடுப்பதற்கு வசதியாக இருந்தது.

சாம்பாஜி வீரமானவர் தான் என்றாலும், இவர் தன் நண்பர் கலுஷா என்பவருடன் சேர்ந்து தீய வழிகளில் சென்று வாழ்க்கையை உல்லாசமாக கழித்து வந்தார்.

ஒருமுறை அவர் சங்கமேசுவரம் என்ற இடத்திற்கு வந்தார். இவர் அங்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டார் தளபதி முபாரக்கான். அவர் சாம்பாஜியை எதிர்பாராத விதமாகத் தாக்கி, கைது செய்தார். பிறகு அவரை பிஜப்பூர் அருகில் உள்ள தோலார்பூர் என்ற இடத்தில் முகாமிட்டு இருந்த அவுரங்கசீப்பின் பாசறைக்கு கொண்டு வந்தார்.

அவுரங்கசீப் அவரை தனது அரசவைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரிடம், "எனக்கு நீ அடிபணிந்து விட்டால், மகாராஷ்டிராவிற்கு எனது ராஜப்பிரதிநிதியாக உன்னை நியமிக்கிறேன்'' என்றார். ஆனால், சாம்பாஜியோ அதற்கு மறுத்து விட்டார். "உன்னை அடிபணிய வைக்காமல் நான் விடுவதில்லை'' என்று சவால் விட்டார், அவுரங்கசீப். "நான் வணங்காமுடி. ஒருபோதும் உனக்கு தலைவணங்க மாட்டேன்'' என்று அவருக்கே சவாலை திருப்பினார், சாம்பாஜி.

அவுரங்கசீப் இவரை எப்படி அடிபணிய வைப்பது என்று தீவிரமாக யோசித்தார். அதன்படி, சாம்பாஜியை ஒரு சிறையில் அடைத்தார். அந்த அறையின் கதவுகளை எடுத்து விட்டு, அதற்குப் பதிலாகச் சுவரை எழுப்பி, ஒரு ஆள் மட்டும் குனிந்து வரும் அளவில் சுவரில் சிறு துவாரத்தை அமைத்தார். அறையில் சாம்பாஜியை அடைத்து விட்டு அவரை வெளியே வருமாறு கட்டளையிட்டார்.

'சாம்பாஜி எப்படியும் தலைகுனிந்து தான் அந்த துவாரத்தின் வழியாக வெளியே வர வேண்டும். அப்போது நாம் துவாரத்தின் எதிரில் நின்று கொண்டால் போதும். அவர் தலை நம் காலடியில் விழுந்து வணங்கும்' என்று நினைத்தார்.

சாம்பாஜி வெளியே வருவதற்கு தயாரானார். அவுரங்கசீப் துவாரத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், முதலில் வந்தது தலை அல்ல. கால்கள். சாம்பாஜி, தன்னை அவர் எதிரில் குனிய வைக்கவே இவ்வாறு செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டார். இதனால், அவர் எதிர்பாராத வகையில் வெளியே வந்து, மேலே பார்த்தவாறு தலைகுனியாமல் எழுந்து நின்றார். சாம்பாஜியின் தலை வணங்காத வீரத்தைக் கண்டு அனைவரும் வியந்தனர். அந்த வியப்பு அவுரங்கசீப்பின் மகள் பானுபேகத்தையும் விட்டு வைக்கவில்லை. அவரது வீரத்தையும், தலைவணங்காத தன்மையையும் கண்டு ஆச்சரியப்பட்டாள். அதுவே அவளுக்குள் ஒருதலைக்காதலாக மாறியது.

No comments: