Saturday, June 19, 2010

சிரித்தால் சிகரத்தைத் தொடலாம்

பீர்பால்...

மொகலாயப் பேரரசர் அக்பர் பாதுஷாவின் அரசவையில் விகடகவியாக இருந்தவர். உயர்ந்த பண்பாட்டோடு சிறந்த சிந்தனைகளையும், நகைச்சுவையுடன் அறநெறிக் கருத்துகளையும் வழங்கியவர். அதனால் அரசரின் அந்தரங்க ஆலோசகராகவும் திகழ்ந்தவர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது இவரது கதைகள். காரணம் நகைச்சுவைதான். அனைவரையும் ஈர்க்கின்ற ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. இதோ இவரது ஒரு கதை:

கோடைக் காலம்...

அக்பர், இளவரசர், பீர்பால் மூவரும் உலவச் சென்றனர். சிறிது துÖரம் சென்றதும் புழுக்கம் தாளாத அக்பர் கனமான தன் மேல் அங்கிகளைக் கழற்றிப் பீர்பாலிடம் கொடுத்துத் தூக்கி வரச் சொன்னார். அதையே தூக்கி வரச் சிரமப்பட்ட பீர்பாலிடம் இளவரசரும் தனது அங்கிகளைக் கழற்றிக் கொடுத்தார். இருவரின் ஆடைகளையும் சுமந்து கொண்டு வந்த பீர்பாலைக் கண்டதும் அக்பருக்கு பொதி சுமக்கும் கழுதையின் ஞாபகம் வந்து விட்டது. அக்பர் கேலியாக, "என்ன பீர்பால், ஒரு கழுதையின் சுமையைச் சுமந்து வருகிறீர்கள் போலிருக்கிறதே?'' என்றார்.

மன்னர் தன்னைக் கழுதை என்று சொன்னதை நினைத்துப் பீர்பால் வருத்தப்பட்டாலும் அதை மறைத்துக் கொண்டு சாதுர்யமாக, "தவறு மன்னா, நான் இரண்டு கழுதைகளின் சுமையை அல்லவா சுமந்து கொண்டு வருகிறேன்!'' என்றார்.

தான் பீர்பாலை கழுதையாக்கப் போக, அவர் தங்கள் இரண்டு பேரையும் கழுதைகளாக்கி விட்டாரே என்று நினைத்து அக்பர் கோபப்படவில்லை. மாறாக பீர்பாலின் புத்திக் கூர்மையைப் பாராட்டினார். இதுதான் நல்ல நகைச்சுவை.

நகைச்சுவை உணர்வு இருக்கும் இடத்தில் கோபம் வரவே வராது. கோபம்தானே நோய்களுக்குக் காரணம்? அதனால்தான், "வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்'' என்ற பழமொழியும் தோன்றியது. பழமொழிகள் ஒவ்வொன்றும் முன்னோர்களின் அனுபவ மொழிகள் அல்லவா?

சிரிப்பு ஒரு எளிமையான தியானம். அதனால் உடனடியாக உடலுக்கு ஓய்வு கிடைக்கின்றது. நன்றாகச் சிரிக்கும்போது மனச்சோர்வு ஓடி விடுகின்றது. சிரிக்கின்றபோது சக்தி கூடுகின்றது. கோபப்படும்போது சக்தி விரயமாகின்றது. சிரிக்கின்றபோது குழந்தையாகி விடுகின்றோம். இயல்பாய் வளரும் செடியில் பூ பூத்ததும் அழகாகி விடுகின்றது. அது போல் முகத்தில் புன்னகைப் பூக்கள் பூக்கின்ற போது அழகு கூடுகின்றது.

சிரிப்பு முகத் தசைகளுக்கு மிகச்சிறந்த பயிற்சியளிக்கிறது. சிரிக்கும்போது கூடுதல் ரத்த ஓட்டத்தால் முகம் சிவக்கிறது. கண்கள் ஈரமாகின்றன. கண்களில் ஒளி நிரம்பிப் பிரகாசிக்கச் செய்கின்றன. முகத்தில் காந்த சக்தி வெளிப்படுகின்றது. அது அலை அலையாகப் பரவி எதிரிலே இருக்கின்றவர்களையும் ஈர்க்கின்ற சக்தியை உள்ளுக்குத் தருகின்றது.

மற்றவர்களை உங்களால் ஈர்க்க முடியும்போது வெற்றி பெறுவது என்பது கடினமா? ஆம், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல நகைச்சுவை உணர்வும் அவசியம் தேவை. மற்றவர்களுடன் கலந்து செயல்படவும், கூச்சமின்றி வெளிப்படையாகப் பழகவும், தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்புகளையும் மேம்படுத்துவதற்கும் சிரிப்பு மேலும் துணை செய்கின்றது.

வாழ்க்கை முரண்களால் ஆனது. இரவு பகல், நன்மை தீமை, வெற்றி தோல்வி, இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு மறுபக்கம் இருப்பது போல துன்பத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. அதுதான் இன்பம்.

துன்பத்தை சிரிப்பினால்தான் வெல்ல முடியும். அதனால்தான் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி சொல்லும் வள்ளுவப்பெருந்தகை, துன்பம் வரும் போது சிரி என்கிறார். அதாவது, 'இடுக்கண் வருங்கால் நகுக' என்கிறார்.

துன்பத்தில் சிரிப்பவனைக் கண்டால், 'அழ வைக்கலாம் என்று வந்தோம், இவனோ சிரிக்கிறான். இவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துத் துன்பம் தூரப் போய்விடும்' என்கிறார்.

உருதுக் கவிஞர் 'அதம்' இதையே இப்படிக் கூறுகிறார்...

சோகத்தில் ஏன்
சிரிக்கிறாய் என்கிறாயா?
இருள்சூழும் போதுதானே
விளக்கேற்ற வேண்டும்!


அடடா... எவ்வளவு அற்புதமான கவிதை! இருள் துன்பம் போன்றது. அந்த இருளை விரட்ட விளக்கு ஏற்றுகின்றோம். அதுபோல துன்பத்தைப் போக்க புன்னகை தீபத்தை இதயத்தில் ஏற்ற வேண்டும் என்கிறார்.

"மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். ஆனால் அது இங்கேதான் இருக்கிறது. உங்களைச் சுற்றியே... உங்களுக்குள்... உங்கள் இதயத்தில்தான் இருக்கிறது'' என்பார் மார்க்கஸ் அரலியஸ்.
'நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் எப்போதோ தற்கொலை செய்து இருப்பேன்' என்றார் மகாத்மா காந்தியடிகள். ஆம். வாழ்வதற்கான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவது நகைச்சுவை.

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அவர் ஒரு காரில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்றார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயி நேராக வந்து அவரது காரை வழிமறித்தார். அப்போது அவர், "இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்து விட்டது சரிதான். அதனால் எனக்கு என்ன பயன்?'' என்று கேட்டார்.

நேரு அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "ஒரு நாட்டின் பிரதமரையே வழிமறித்து உங்களால் இப்படிக் கேட்க முடிகிறதே இது ஒன்று போதாதா?'' என்றார்.

எவ்வளவு பெரிய தலைவர் அவர்! எவ்வளவு இதமாகப் பதிலளித்திருக்கின்றார்! அவரது பதிலைப் படிக்கின்றபோது மனதிற்குள் சிறு புன்னகைக் கீற்று அரும்பி உதட்டில் மலர்கிறது. இதுதான் சிந்தனைகளைக் கிளறுகின்ற அறிஞர்களின் ஆற்றல்.

அன்பான இளைஞனே!
இளமைப் பருவம் மகிழ்ச்சி நிறைந்த பருவம். படிப்பு, விளையாட்டு என்று ஒருபுறம். சிரிப்பும் கலகலப்புமாய் மறுபுறம். ஆனால் போட்டிகளும் நெருக்கடிகளும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் சிரிப்பை பலர் இழந்து விடுகின்றனர். இளமைக்குள் உள்ள இயல்பான நகைச்சுவை உணர்வு அழிந்து போகக் கூடாது.

குறிப்பாக மாணவர்களிடம் நகைச்சுவை உணர்வுகளை ரசிக்கக் கற்றுக் கொடுத்தால் எதிர்காலத்தில் அவர்கள் சாதிக்க விரும்புகின்ற சாதனைகளை எளிதாகச் சாதிப்பார்கள். சாதிக்கத் தூண்டுவதில் ஆசிரியர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

எந்த வகுப்பில் ஆசிரியர் நகைச்சுவையுடன் பாடம் நடத்துகின்றாரோ அந்த வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். அவர்களுக்குப் பாடம் சுமையாகத் தெரியாது. சுகமாக இருக்கும். 'கற்றலில் இனிமை' என்ற திட்டம் இதைத்தான் செயல்படுத்துகின்றது.

வகுப்பறை, குறிப்பாகத் தமிழ் வகுப்பறை எப்போதும் கலகலப்பாக இருக்கும். காரணம் அங்கு சிரிப்பு வெடிகள் வெடித்துக் கொண்டே இருக்கும்.

உங்கள் மனதை இனி புன்னகைப் பூக்களால் நிரப்புங்கள். மனது காலியாக இருக்கும்போதுதான் கவலைகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். ஒன்றை சரியாகக் குறித்துக் கொள்ளுங்கள். "நீங்கள் சிரித்தால் சுற்றியிருப்பவர்களும் உங்களோடு சேர்ந்து சிரிப்பார்கள்; அழுதால் நீங்கள் மட்டும்தான் தனியாக அழவேண்டியிருக்கும்".

சிரிப்பு ஒரு மந்திரசக்தி. இனியேனும் நாளும் நலமுடன் வாழ்வதற்கும் வெற்றி பெறுவதற்கும் நன்றாகச் சிரியுங்கள்.


பேராசிரியர் க. ராமச்சந்திரன்

1 comment:

Anonymous said...

Dear Sir,

Really very nice article. Lough make freedom and joyful.

Best Regards,
P.Dhanagopal