Tuesday, June 15, 2010

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."


(புறநானூறு - பாடல்: 192
பாடியவர்: கணியன் பூங்குன்றன்)

பொருள் விளக்கம்
கேளிர்= உறவினர். புதுவதன்று = புதியதல்ல
முனிவின் = வெறுப்பின் காரணமாக
புணை = தெப்பம். திறவோர் = ஆன்றோர்
இலம் = இல்லாமை. (இல்லையென்ற பொருளில் இங்கு வரும்)

மூன்று கூறாக ஆவதற்கு முன்பிருந்த
முகவைப் பெரு மாவட்டத்தில் மூதறிஞர் பண்டிதமணி
கதிரேசன் செட்டியார் பிறந்தார் எனக் கேள்வியுற்றுக்
களிப்புடனே மகிபாலன்பட்டிக்குச் சென்றிருந்தபோது
பூங்குன்றமெனப் பழையநாள் இலக்கியமாம்
புறநானூற்றுக் குறிப்பில் இருந்த ஊரின் பெயர்தான்
மகிபாலன்பட்டியாக
மாறிற்றென்று, பெரும்புலவர்
மாணிக்கனார் உரைக்கக் கேட்டு
மகிழ்ச்சியிலே திளைத்துப் போனேன்.

கணியன் பூங்குன்றனார் எனும் அவ்வூர்க் கவிஞன்
கற்குகையொன்றில் செதுக்கியுள்ள கவிதையினைக்
காண வாரீர் என அழைத்திடவே; சென்று கண்டேன்! - அந்தப்
பழம்புலவன் கரங்கொண்டு செதுக்கியதோ - அன்றி
பார்புகழும் அப்பாட்டைப் பின்வந்தோர் செதுக்கியதோ?
யார் செயலாய் இருந்திடினும் அப்பாட்டில்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும்
அறைகூவல்தனை அற்றைநாளில் ஒரு தமிழன்
நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி
விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்
விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும் - புதிய

வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து
வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான்!

பூத்தமிழில் வண்டாகப் புணர்ந்து கலந்து - இந்தப்
பூமிக்கே பொதுக்கவிதைக் கனியொன்றைத் தந்த கவிஞன்
பூங்குன்றந்தனில் பிறந்த புலவன் கணியன்தான் என்கின்றபோது

புல்லரித்துப் பூரித்துப் போகுதம்மா; நம் எண்சாண் உடம்பு!
அந்நாளில் புலவரெல்பிம் அகிலத்தை ஆளுகின்ற

அரசர்களின் அவைக்களத்தில் அரிய தமிழ்க் கவிகள்பாடி
ஆனையென்றும் சேனையென்றும் ஆயிரம் பொற்கிழிகள் என்றும்
மானியங்கள் மற்றும் பல பரிசில் என்றும் மலைமலையாய்ப் பெற்றிடுவர்!

இந்நாளில் சில புலவர்போல் வாழ்வார்க்கு வாழ்த்துரைத்து
இன்னலுற்று அவர் தாழ்வாராயின் அக்கணமே சிறகடித்து
அற்றகுளத்துப் பறவைபோல அடுத்தகுளம் பார்க்கின்ற
இயல்புடையார் அப்போதும் சிலர் இருந்திடத்தான் செய்தார்கள்!
கணியூர்ப் பூங்குன்றனோ; அவர்கண்டு கவலைமிக்க கொண்டதனால்
அணிமணிகள் தமிழில் செய்து அரசர்க்கும் வள்ளல்கட்கும்
பூட்டி மகிழ்வதிலே ஆர்வமொரு கடுகளவும் காட்டாமல் இருந்திடவே;
நீட்டி முழக்கிச் சிலபேர்; "அரசை அணுகிப் பரிசு பெறப்
பாடல்களை இயற்றிடுக!" எனக் கேட்டபோது-கணியன்;
பக்குவமாய் விடையளித்து அவர் விருப்பமதைத் தட்டிக் கழித்தான்!

"நாடு பற்றிப் பாடுகின்றீர்-நன்று! நன்று!
நாடாளும் மன்னர் பற்றிப் பாடுகின்றீர்- அதுவும் நன்று!
நாடுதனை மீட்பதற்கும் புதிதாகப் பறிப்பதற்கும்
கேடுகளைச் சுமந்து விழுப்புண்கள் ஏந்துகின்ற
பீடுநடை வீரர் பற்றிப் பாடுகின்றீர் - மிகவும் நன்று!
ஏடுகொள்ளா இலக்கியங்கள் காதலையும் களம்புகுவோர் காதையையும்"
எடுத்தியம்பும் காரணத்தால் என்வழியைத் தனிவழியாய் ஆக்கிக்கொண்டு

எல்லா ஊரும் எமது ஊரே
எல்லா மனிதரும் எமது உறவே
- என
எழுதத் தொடங்குகின்றேன்" என்றான்!

நற்றிணையில் வருகின்ற காதல் பாட்டொன்றைக் கூடக்
கற்றறிவாளன் கணியன் பூங்குன்றன் எழுதுங்கால்
"மருந்துக்கு உதவுகின்ற மரத்தின் பட்டைகளை மட்டுமின்றி - அந்த

மரத்தையே வேரோடு பிடுங்குவதோ?" எனக்கேட்டு,
பய்னபடுவன எதனையும் பாதுகாக்க வேண்டுமெனப்
பாங்காக அறிவுரையைப் பகருகின்றான் உலகிற்கு!
"ஒரே உலகம்" எனும் கொள்கைதனை - மனிதரெல்லாம்
"ஒரே குலம்" எனும் தத்துவத்தைப் புவியில்;
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திற்கு

முன் தோன்றிய மூத்த குடிப் பிறந்த தமிழ்க்
கணியன் பூங்குன்றன், கவிதை நடைச்
சொல்லூன்றி நிலைநாட்டுகின்றான்!
விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து
கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து;
"நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள்
நமது செயல்களேயன்றி பிறரல்ல"
என்று
நயம்படி உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்!

அம்மட்டோ?

வேதனைகள் விரைந்து தொடர்வதும் - அவை
விலகித் தொலைந்து போவதும் கூட
நாம் ஏற்றிடும் செயல்களால்
என்றே
நன்கு கணித்து நவில்கின்றான் கணியன்!
"பிறந்த உயிர்கள் இந்த மண்ணில்
இறந்து மறைதல் புதிதல்ல;
இன்பமொன்றுக்காகவே வாழ்க்கை என்பதும்
துன்பம் வந்திடின் வாழ்வை வெறுப்பதும்
உறுதி கொண்ட மாந்தர்தம்
உளத்திற்கேற்ற உயரிய செயலுமல்ல!
ஆற்றொடு போகும் தெப்பம் போல்
ஆடியும் அசைந்தும் அமைதி கண்டும்
ஆருயிர்ப் பயணம் அவனியில் நடக்கும்! எனவே
ஆன்றோர் காட்டிய அரிய வினைகளைத் தொடர்க!

செழிப்பில் திளைத்தோர்க்கு சிரம் தாழ்த்தலுமில்லை;
சிறியோர் எனப்படுவோரை இகழ்ந்துரைத்தலுமில்லை!"


இவ்வாறு;

உலக ஒற்றுமை, ஒரு குலக் கொள்கை,
உயிரின் தன்மை, உயரிய வினைகள் - வாழ்வில்
உற்ற துன்பமும் உவகையின்பமும் ஒன்றெனக் கருதுதல்,
உயர்ந்துள்ள செல்வர்க்குப் பணியாமை - வீணில்
உழன்றிடும் சிறியோரை இகழாமை; எனப் பல
வண்ணமிகு மலர்கள் கொண்டு - உயர்
எண்ணங்களைத் தொடுத்தளிக்கும் பெரும்
உள்ளம் காணுகின்றோம் இந்தக் கவிதையினில்; புது
வெள்ளம் போல் இக்கருத்து பரவட்டும் காசினியில்!
ஆனால் ஒன்று;
ஊரெல்லாம் இணைந்து ஓருலகாய் ஆவதென்பதும்
உறவுகொண்டே மனித குலம் ஒன்றே எனத் திகழ்வதும்
உயரிய குறிக்கோளாம் என்றுரைத்த புலவன் கூட
தனது ஊரை மறவாமல் பூங்குன்றமென இணைத்தே
கணியன் பூங்குன்றன் எனும்
கவிஞனாய் உலவியதைக் கவனமுடன்
எண்ணிப் பார்த்தால் - அந்த மாமனிதனையும்
மண்ணின் பற்று விடவில்லை என்பதுதான் உண்மையன்றோ?


கலைஞர். மு. கருணாநிதி
( நன்றி: சங்கத் தமிழ் )
குறிப்பு:
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக கலைஞர் எழுதிய செம்மொழிப் பாடலை கேட்ட பலர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் வரியினை ஏ.ஆர்.ரகுமான் பாடும் போது 'கேளிர்' என்பதை 'கேளீர்' எனப் பாடுவதாகவும், இதனால் அந்த பாடல் வரியின் அர்த்தமே மாறிப்  போவதாகவும் சில தமிழ் அறிஞர்கள் கவலை தெரிவித்தனர். தவறினைத் திருத்திக்கொள்வோம்.

1 comment:

balag said...

a few lines are missing in between. heres the full poetry.

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே