Monday, June 14, 2010

முழுமையான வெற்றி எது?

இலக்கை அடைவது மட்டுமே வெற்றியா? குறைகளும், தோல்வியும் வெற்றிக்கு விதிவிலக்கானவையா? இயல்பை உணர்ந்து கொள்ளாமல் வெற்றி முழுமை பெறுமா? இதுபோன்ற அரிய வினாக்களுக்கான விடை இதோ...

முழுமையான வெற்றி எது?
ஒருவரின் உயர்வு என்பது அவரது உள்ளத்தைப் பொறுத்தே அமைகிறது. இதையே வான்புகழ் வள்ளுவன்

"வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு''
என்று பாடுகிறார்.

நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கின்றோம்? என்பதே நமக்கு முக்கியம். வெற்றிக்கு அவசியம்.

ஒப்பிடுவதால் வரும் பிரச்சினை

நாம் நம்மைப் பற்றி மதிப்பீடு செய்ய முயற்சிக்கும்போது நமது பலம், பலவீனங்களை அறிய முயற்சிக்காமல் மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகிறோம்.

உங்களுடன் உடன் படிப்பவர் அல்லது பணியாற்றுபவர் உங்களைவிட புத்திசாலி என்று நினைக்கிறீர்கள். உங்களது உயர் அதிகாரி திறமைசாலி என்று கருதுகின்றீர்கள். உங்களுடைய நண்பர் நல்ல கல்விமான் என்றும், பக்கத்து வீட்டுக்காரர் உங்களைவிட வசதியானவர் என்றும் எண்ணிக் கொள்கிறீர்கள். உங்கள் உடன்பிறந்த சகோதரர் உங்களைவிட அதிர்ஷ்டசாலி என்று எடைபோடுகிறீர்கள்.

இவ்வாறு உங்களைச் சுற்றி உள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் உங்களைவிட சிறந்தவர்கள் என்று கருதுகின்றீர்கள். இதனால் தன்னைத்தானே மட்டம் தட்டிக் கொள்கிறீர்கள். உங்களது ஒவ்வொரு செயலிலும் உங்கள் வளர்ச்சியும், மனமகிழ்ச்சியும் இருக்கின்றது என்பதை உணர மறந்துவிடுகிறீர்கள். உங்களது முயற்சியையும், வளர்ச்சியையும் நீங்களே பாராட்டத் தயக்கம் காட்டுகிறீர்கள். நீங்கள் நிர்ணயித்த இலக்கையே அடைய முடியுமா? என்ற சந்தேகம் வருகிறது. தொடர்ந்து அதிருப்தி தொற்றிக் கொள்கிறது.

இயல்பை புரிந்து கொள்ளுங்கள்

டான் மிகுல் ரூஸ் என்பவர் தன்னுடைய "நான்கு ஒப்பந்தங்கள்'' என்ற நூலில் இதைப்பற்றி தெளிவாக விளக்குகிறார். 'அவரவர்கள் தன்னைப்பற்றி கொண்டுள்ள கருத்துதான் அவர்களை அவர்களே நிராகரிக்கும்படி செய்கின்றது' என்று அதில் கூறுகிறார்.

நம்மை நாம் இயல்பாக ஏற்றுக் கொள்வதில்லை. பிறரது இயல்பினையும் நாம் புரிந்து கொள்ள முயல்வதில்லை. ஒரு சிறிய குறைகூட இல்லாதநிலை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஒன்றைப்பற்றி மதிப்பீடு செய்து குறையற்றது என்று கூறும்போதுகூட அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்தறிவது என்பது இயலாத ஒன்று. அறிவியல் உண்மைகள்கூட அதிகம் ஆராய்ச்சி செய்யச் செய்ய புதிய புதிய பரிமாணங்களை வெளிப்
படுத்துகிறது. ஆனால் நம் மனது குறையே இல்லாத நிலையை அடைய முடியவில்லை என்றே வருந்துகின்றது.

தோல்வியில் கற்றுக் கொள்ளுங்கள்

நமது தோல்விகளை கருத்தில் கொண்டு நாம் குறைகளை அதிகம் கொண்டவர்களாக உள்ளோம் என்று கருதுகிறோம். நமது வெற்றிகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அடைந்த வெற்றிகளை குறைத்து மதிப்பிடுகின்றோம்.

நமது தோல்வியில் நாம் கற்ற பாடத்தையும், புரிதலையும் கணக்கில் எடுத்துக் கொள்ள தவறிவிடுகின்றோம். நாம் முன்பு எப்படி இருந்தோம்? இப்போது எவ்வளவு வளர்ச்சி பெற்றுள்ளோம் என்பதை மதிப்பீடு செய்வதில்லை. இன்றைய நீங்கள் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளீர்கள் என்று கருதுவதில்லை.

தொடர்ந்து அறியும் ஆர்வம், முன்னேற்றப் பாதையில் பயணித்தல் ஆகியவையே குறைகளை களைய மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளாகும். குறைகளே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு நமக்குள் இருக்கும் குறைகளை நாம் வெளியே தெரியாமல் மறைக்கப் பார்க்கின்றோம்.

தோல்வி என்பது வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்க வேண்டிய ஒன்றுதான். தோல்வியால் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் தெளிவு பெறுகிறோம் என்பதை உணரத் தவறினால் வெற்றி கிடைப்பதில்லை.

முழுமை அடைதலே வெற்றி

நம்மைப் பற்றி குறை, நிறைகளுடன் கூடிய முழுமையான புரிதலே சரியான பாதையில் நடக்க அடித்தளம் அமைக்கும். முழுமை என்பது நம்மைப் பற்றியும், நாம் வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகிய அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டது. நம்மிடமுள்ள ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், எதிர்மறையான எண்ணங்கள் ஆகிய இரண்டையும் இயல்பு என்று ஏற்றுக் கொள்வதுதான் முழுமையின் இலக்கணம்.

சரியாக செய்ய வேண்டும் என்று ஒரு முயற்சியில் ஈடுபடும்போது எத்தகைய இடர்பாடுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதை முழுமை உணர்த்துகின்றது. ஆனால் வெற்றிக்காக முயற்சி மேற்கொள்ளும்போது நாம் ஏற்கனவே எதிர்கொண்ட தோல்விகளே மனதில் தோன்றுகின்றது. முழுமை என்பது குறைபாடுகள், தோல்விகளில் இருந்து எவ்வாறு புரிதலுடன் விடுபடவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

குறைகளும், நிறைகளும் இருக்கவே செய்யும். அதுவே உலகியல் இயல்பு என்று அறியும்போது ஒருவகை பதட்டமும் பயமும் நீங்கும். நமது குறை, நிறைகளை இனங்கண்டு நமக்குள் அனுமதிக்கும்போது நாமாகவே குறைகளை எவ்வாறு தவிர்ப்பது என்று அறியும் வாய்ப்பு ஏற்படும். இந்த முயற்சியே நம்மை சரியாக இனங்கண்டு மேம்படுத்திக் கொள்ள உதவும். குறை, நிறைகளுடன் நம்மை நாமே ஏற்றுக்கொள்ளும்போதுதான் மனம் அமைதியுடன் சிந்திக்கும் ஆற்றலைப் பெறும்.

நமது குறைகளை நாமே அங்கீகரிக்காமல் வெட்கப்பட்டுக் கொண்டு நம்மிடம் குறையே இல்லை என்று செயல்பட நினைப்பதோ அல்லது குறைகளை மறைக்க முயல்வதோ ஏற்புடைய வளர்ச்சியை ஏற்படுத்தாது. நம்மை நாமே இயல்பாக புரிந்து கொண்டு முழுமையாக செயல்படுவதே நம்மை உயர்த்தும்.

ஒரு குறையுமே இல்லாமல் குறையற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதைவிட முழுமையானவர்களாக இருக்க வேண்டும் என்ற முயற்சியே உங்களை நீங்களே பலவீனப்படுத்திக் கொள்ளாமல், பலப்படுத்திக் கொள்ள உதவும். வெற்றிக்கு அழைத்துச் செல்லும்!

ப.சுரேஷ்குமார்.

3 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல தன்னம்பிக்கை கட்டுரை.. தொடருங்கள்

செந்தில்குமார் said...

நல்ல கட்டுரை....

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்