Saturday, June 12, 2010

வேண்டாமே வெற்றி போதை!

இளமை...

இந்த இளமைக்குள் இருக்கின்றது வாழ்வின் இனிமை. இனிமை நிறைந்த இளைஞர்கள் நிகழ் கால உலகிற்கு நெம்புகோல்கள். வளரும் தேசத்தின் வருங்கால வைப்புநிதிகள். வெளிச்சக் கீற்றுகளை பூமிக்குத் தருகிற பௌர்ணமிப் பிறைகள், புதியதோர் உலகு செய்யும் பூமியின் அச்சாணிகள்.

வாழ்க்கை குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் என்ற முத்தான மூன்று பருவங்களைக் கொண்டது. இந்த மூன்று பருவங்களில் இளமைப் பருவம் இன்றியமையாத பருவம். ஆற்றல்களின் ஊற்றுக் கண்கள் திறக்கின்ற உன்னத பருவம். உயிர்த்துடிப்பான பருவம்.

இழந்தால் சிலவற்றை மீண்டும் பெறலாம். ஆனால் கடந்துபோன காலங்களை மீண்டும் பெற முடியாது. ஒரு நிகழ்வு.

கூனல் விழுந்த ஒரு முதியவரைப் பார்த்து ஓர் இளைஞன் ஏளனமாக கேட்டானாம், "குனிந்த படியே எதைத் தேடுகிறீர்கள்'' என்று. அந்த முதியவர் சிரித்தபடியே சொன்னாராம், "தொலைந்துபோன என் இளமையைத் தேடுகிறேன்'' என்று.

அன்பான என் இளைஞனே!

தேடினாலும் கிடைக்குமா அந்த இளமை? இன்பம் என்று தவறாகக் கருதப்படும் ஒரு கண நேர கிளர்ச்சிக்காக விலை மதிப்பு மிக்க சொத்தான இளமையை இழந்து விடாதீர்கள். இளமை மிக அற்புதமானது. வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும்.

இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எது நிசம் என்பதை எட்டி விடு
எழுதியபடி தான் எல்லாம் நடக்கும்
விதிவசம் என்பதை விட்டு விடு

கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் என் காதுகளில் வந்து தேனாய்ப் பாய்கிறது. ஆம்! இளமை இப்போது உன் தோள்களில் இருக்கின்ற போதே சாதனைகளைச் செய்தாக வேண்டும். சாதனைகளின் வயது இப்போதுதான்.


  • மாவீரன் சிவாஜி பிஜப்பூர் சுல்தானுக்குச் சொந்தமான கோட்டையைப் பிடித்தபோது அவரது வயது 19.
  • ஹென்றி போர்டு முதன் முதலில் கார்களை உற்பத்தி செய்த போது வயது 22.
  • ஆங்கிலக் கவிஞன் கீட்ஸ் தமது இமாலயக் கவிதைகளையெல்லாம் எழுதி முடித்தபோது வயது 24
  • உலகப் புகழ் பெற்ற படைப்பான இழந்த சொர்க்கத்தையும், மீண்ட சொர்க்கத்தையும் ஊனமுற்ற நிலையில் 'பைரன்' எழுதி முடித்த போது வயது 30
  • நாடுகள் அனைத்தையும் தன் காலடிக்குள் கொண்டு வந்தபோது அலெக்சாண்டருக்கு வயது 32.
  • இயற்பியலுக்காக நோபல் பரிசைப் பெற்றபோது மேடம் கியூரிக்கு வயது 36.
  • பாட்டுத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்த பாட்டுக்கொரு புலவன் பாரதி வாழ்ந்து முடித்தபோது வயது 39.

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ இளைஞர்கள் சாதனையாளர்களாய் சரித்திரத்தின் ஏடுகளில் இடம் பெற்றிருக்கின்றார்கள். அதுபோல் நீயும் இடம் பெற வேண்டாமா? அவர்கள் பிறந்த பூமியில்தான் நீயும் பிறந்திருக்கின்றாய். உன் பெயரை உலகம் போற்ற வேண்டாமா?
 
"சாதிக்க வேண்டும் என்று உறுதி கொள். முயற்சியைத் தொடங்கு. சரித்திரம் உன் பெயர் சொல்லும்'' என்பார் இளைஞர்களின் விடிவெள்ளி விவேகானந்தர்.

வாலிபத்தின் வாசற்படிகளில் வாசம் செய்து கொண்டிருக்கின்ற இளைஞனே! நீயும் வெற்றியின் சிகரங்களைத் தொட வேண்டும். போதும் என்று ஒரு போதும் நினைக்காதே. போதாது... போதாது... எந்த வெற்றியும் உனக்குப் போதாது. போதும் என்ற மன நிலை உன் இதயத்தை முடக்கிவிடும்.

-------------------------------------------------------------

சிறகு கிடைத்தால் பறக்கலாமா?
ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் இருக்கிறது, எல்லை இருக்கிறது. மிதமான நிலையே இதமான நிலை. அதற்கு மேல் செல்வோமானால் அழிவும், ஆபத்தும்தான்.

கிரேக்கர்களின் பயணத்தில் டேவ்டலஸ் என்ற சிற்பியைப் பற்றிய கதை ஒன்று வெற்றியின் மயக்கத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது.

வயதான சிற்பியையும், அவன் மகனையும் எதிரிகள் சிறைப்பிடித்தனர். அவர்களை ஒரு பாதாளத்தில் தள்ளிவிட்டார்கள். அங்கே அந்தச் சிற்பி தன் மகனுக்கும் தனக்கும் மெழுகைக் கொண்டு சிறகுகள் செய்தான். இருவரும் சிறகுகளைப் பொருத்திக் கொண்டு வானத்தில் பறந்தார்கள்.

அண்மையில் உள்ள வேறு ஒரு நாட்டை அடைவதுதான் அவர்களின் திட்டம். சிற்பி தன் முதுமையின் அனுபவத்தால் தாழ்வாகப் பறந்தான். ஆனால், அவன் மகனுக்கோ, பறக்க முடிந்ததைப் பார்த்ததும் பரவசம். எனவே உயர உயரப் பறந்தான்.

சூரியனை நெருங்கியதும் உஷ்ணத்தால் மெழுகு உருகியது. சிறகுகள் சிதைந்தது அவன் கடலிலே விழுந்து இறந்து போனான். தந்தை சிற்பியோ, பத்திரமாக திட்டமிட்டபடி அண்டை நாட்டை அடைந்தார்.

"தேவைக்கு மேற்பட்ட வளர்ச்சியும் சரிவில்தான் முடியும்'' என்பார் சீனஞானி லாட்சு. அதைத்தான் இந்தக் கதை உணர்த்துகிறது. ஆம்! வெற்றியும் அது போலத்தான். வெற்றி மேல் வெற்றி அடையும் போது ஒரு கட்டத்தில் நின்று விட வேண்டும். அதை விட்டுவிட்டு கர்வ நடைபோட்டால் வெற்றியின் மகுடம் சரியத் தொடங்கும். தோல்விகள் தோள்களைச் சுற்றும்.

-------------------------------------------------------------

நீ தேடிக் கொண்டே இரு. இந்தத் தேடலில் முதல் இடம் என்பதே உனது கனவாக இருக்கட்டும். அந்தக் கனவை முயற்சியால் அடைவதே உனது இலக்காக இருக்கட்டும். ஆனால் இரண்டாம் இடத்தில் மட்டும் இப்போது இரு.

என்ன இது. முதலிடம் தானே இலக்கு! இரண்டாம் இடமா? என்று தோன்றுகிறதா? ஆம்! இரண்டாம் இடம்தான், இப்போது உனக்கான இடம். முதலிடம் என்பது முடிவானதுதான். அதற்கு மேல் பயணமில்லை. இரண்டாம் இடம் என்பதுதான் இளமைக்கான சரியான இடம். இதில் இன்னும் கொஞ்சம் இறங்கிப் பார்க்கலாம்.

ஆண்டு தோறும் பத்தாம் வகுப்பு, 2 பொதுத் தேர்வு முடிவுகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. முதலிடத்தைப் பெற்றவர்களின் புகைப்படங்களும் அவர்களின் சாதனைச் சம்பவங்களும் பேட்டியாக வெளிவருகின்றன. படிக்கின்ற போது வியப்பால் விழிகள் விரிகின்றன. எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்கள் என்று?. பிறகு இவர்களை கூர்மையாகக் கவனித்தால் வியப்பில் விழிகள் இன்னும் விரிகின்றன.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்தவர்கள் என்ன ஆனார்கள்? என்று பார்த்தால் கேள்விதான் மிஞ்சுகிறது. அவர்கள் இருக்கும் இடம் தெரியாமலேயே போய் விடுகிறார்கள். என்ன காரணம்? என்ன காரணம்?

தலையில் சூடிய அந்த வெற்றி மகுடம்தான். "இனி என்னை யாரும் அசைக்க முடியாது என்று ஒரு தலைவன் எண்ணும்போது அங்கே வீழ்ச்சியின் வித்து விதைக்கப்படுகிறது'' என்பார் ஜேம்ஸ் ஆலன். அந்த நிலைதான் வெற்றி பெற்ற அந்த இளைஞர்களின் இதயங்களிலும் ஏற்படுகிறது.

வெற்றி பெற்றுவிட்டால் அதைப்பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார்கள். என்னை எவராலும் அசைக்கமுடியாது என்ற ஆணவமும் கர்வமும் அப்போதுதான் ஏற்படுகின்றது. அந்த நேரத்தில் சூழ்
நிலையை அனுசரித்துப் போக வேண்டும் என்று மனது நினைப்பதில்லை.

காரணம் இளமையின் துடிப்பு. அதனால்தான் மாவீரன் நெப்போலியன் சொன்னான். "வெற்றிபெறும் நேரம் தான் வாழ்வின் அபாயகரமான நேரம''ë என்று. ஒவ்வொரு வெற்றியாளரும் அதைப்புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் வெற்றியாளர்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குப்பைமேட்டில் இரண்டு கோழிகள் சண்டையிட்டன. பலசாலி கோழியானது இன்னொன்றை தோற்கடித்து அந்த மேட்டிலிருந்து விரட்டியடித்தது. எல்லாக் கோழிகளும் அதைப் பாராட்டின. வெற்றி பெற்ற கோழிக்குப் பக்கத்திலிருப்பவர்களுக்கும் தன் பலத்தைக் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.

அருகிலிருந்த வீட்டின் கூரைமீது ஏறி நின்று கொண்டு 'என்னைப் பார்த்தீர்களா? என்னைப் போல் பலசாலியான கோழி உலகத்திலேயே எங்கும் இல்லை' என்று கொக்கரித்தது. அப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு பருந்து அதன் மீது பாய்ந்து கல்விச்சான்று விட்டது.

லியோ டால்ஸ்டாயின் கதை இது. வெற்றி மேல் வெற்றி என்று ஆர்ப்பரித்தது ஆபத்தானது என்பதை இந்தச் சின்னக் கதை சித்தரிக்கிறது.

அன்பிற்குரிய இளைஞனே! இளமையின் இடம் இரண்டாம் இடம். இதை எதிர்மறையான எண்ணம் என்று எண்ணிவிடாதீர்கள். சாலைகளைக் கடக்கும் பொழுது இரு புறமும் பார்த்துச் செல்ல வேண்டும். சாதனைகளைக் கடந்து செல்லுகிறபோது நாலாபுறமும் பார்த்துச் செல்ல வேண்டும். காரணம் உன் பயணத்தின் தூரம் இன்னும் அதிகம் இருக்கின்றது. அதனால் இரண்டாம் இடம்தான் இப்போதைக்குச் சரியானது. எப்போது ஜெயித்தாலும் இப்படி நினைத்துக் கொள்ள வேண்டும். 'இது முடிவல்ல துவக்கம்தான்' என்று. அதோ! வெற்றியின் முதற்படி உனக்காகவே காத்திருக்கின்றது.

3 comments:

ராசராசசோழன் said...

நல்ல கருத்துக்கள்... அருமையான பதிவு...

Software Engineer said...

வணக்கம், என்னுடைய முதல் பதிவு போட்டு இருக்கிறேன். தயவு செய்து பாருங்கள், பிடித்தால் ஓட்டு போடுங்கள்!
http://kaniporikanavugal.blogspot.com/

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்