Wednesday, June 2, 2010

கவிதைச்சரம்


'சொர்க்கத்தை தரிசித்த தினம்'

ரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்.

சிறு மலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களைக் குவித்து
மூடித் திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களைப் பற்றுங்கள்.

கடக்கும்போது
எதிர்புறத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச் சொல்லுங்கள்.

மறுமுனையை அடைந்ததும்
'இனி நீயாக போய்விடு'
என்று சொல்லிக்
கிளம்பிவிடாதீர்கள்.
பள்ளி வரையோ
வீடு வரையோ அழைத்தால்
போய் வாருங்கள்.

அலுவலகத்துக்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவைக்
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.

உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும் வரை குறைத்துவிடுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லிவிடுங்கள்
இடையிடையே
'ம்ம்...ம்ம்...' எனச் சொல்லுங்கள்.

விண்மீன்கள்தான் எனக்கு
விளையாட்டுப் பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து      
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

சில முத்தங்களைக் கொடுத்தால்
எச்சிலைத் துடைத்துவிடாதீர்கள்
காய்வதற்குள் வீடு வந்து
நாட்குறிப்பில்
'சொர்க்கத்தை தரிசித்த தினம்'
என மறக்காமல்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

நாவிஷ் செந்தில்குமார்   


கவனம் ஈர்க்கா தீர்மானம்
ரசு மகளிர் கல்லூரியின்
சருகுகள் நிறைந்த மரத்தடியில்
எதிரெதிரே அமர்ந்தபடி
உணவு அருந்திக்கொண்டிருந்த
தூரத்துச் சுடிதார் பெண்களின்
காதில் விழாத சம்பாஷனை.

ஓவர்டேக் செய்து
கடந்த பேருந்தின்
நடத்துநருக்கும்
எங்கள் ஓட்டுநருக்கும் இடையில்
வணக்கம் செய்தும்
நொடிப் பொழுதுகளில்
சில சொற்கள் பரிமாறியுமாய்
நிகழ்ந்த நடுச்சாலை நட்பு.

வயல்வெளியில்
நடுவில் இருந்த
பம்புசெட் அறைச் சுவரின்
நெளிவுகளுக்கு ஏற்ப
ராம்கோ சிமென்ட்
விளம்பரத்தை வரைந்திருந்த
பெயின்ட்டரின் ஓவிய நேர்த்தி.

எங்கோ தயாராகி
யாரோ பயன்படுத்தி வீசி எறிய
காற்றில் அடித்துவரப்பட்டு
புழுதி படிந்த சாலையோர
கருவேல முட்பதரில்
வெண்ணிறப் பழம்போலத்
தொங்கிக்கொண்டு இருக்க
நேர்ந்துவிட்ட
கேரி பேகின் வாழ்வுப் பயணம்.

இவை ஏதொன்றும்போல
கவனத்தை ஈர்க்கும்படியாக
இல்லை
இந்தப் பேருந்து
நெடும்பயணத்தில்
படிக்கவென்று எடுத்து வந்து
மடியில் விரித்துவைத்த
புத்தகத்தின் வரிகள்!

எஸ்.பாபு  
 

2 comments:

nidurali said...

கவிதை, கட்டுரை, வீடியோ WOW

சுப்பு said...

சரி, அப்படியே செய்யுறோம்.