Tuesday, June 1, 2010

'பாப்பராஸி'

'பாப்பராஸி' என்றால் அலறுவார்கள் சர்வதேசப் பிரபலங்கள். எந்த ஒரு பத்திரிகையையும் சாராமல் சுதந்திரமாகப் பணிபுரியும் போட்டோ ஜர்னலிஸ்ட்களுக்கு பெயர்தான்... பாப்பராஸி!

பிரபலங்களைத் துரத்துவதுதான் வேலை. பாப்பராஸிகளின் வாழ்க்கை ரொம்பவே சவாலானது. யாராவது பிரபலம் நாலு முறை தும்மினால், டாக்டருக்கு முன் பாப்பராஸிகளுக்குத் தெரிந்துவிடும். ஏனெனில், அவர்களைச் சுற்றியுள்ள டிரைவர், வேலைக்காரர், பக்கத்து வீட்டுக்காரர் எனப் பலரை தங்களின் சோர்ஸ்களாக மாற்றிவிடுவார்கள். ஒவ்வொரு பாப்பராஸிக்கும் ஏழெட்டு உதவியாளர்கள் உண்டு. பாப்பராஸிகளுக்கு எல்லா வாகனங்களையும் ஓட்டத் தெரியும். வி.ஐ.பி -க்கள் 100 கி.மீ. வேகத்தில் சென்றாலும் புகுந்து புறப்பட்டுப் பின் தொடர்வார்கள். அதிநவீன சேட்டிலைட் போன், லேப்டாப், ஹெலிகாப்டர் வரை வைத்து இருப்பார்கள். ஒரு முக்கியமான புகைப்படம் கிடைத்துவிட்டால், அதைக் கொடுத்துப் பத்திரிகைகளிடம் லட்சக்கணக்கான டாலர்கள் கறந்துவிடுவார்கள். 
 

ஜெர்மானிய அரசியல் தலைவர் பிஸ்மார்க் முகத்தில் கட்டுகளோடு வீட்டில் இறந்துகிடந்தார். போலீஸ் வருவதற்கு முன் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள் இரண்டு பாப்பராஸிகள். கட்டுகளை அகற்றிவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு பழையபடி கட்டு போட்டுவிட்டார்கள். மறுநாள் போலீஸ் கட்டுகளோடு படத்தை வெளியிட, தனியார் பத்திரிகை ஒன்று முகம் தெரிகிற படம் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தது. அந்த படத்துக்காக பாப்பராஸிகளுக்குக் கிடைத்த சன்மானம் 20 லட்சம் டாலர்கள்.
 

பாப்பராஸிகளின் எல்லை தாண்டிய தொல்லையால் நிகழ்ந்ததுதான் டயானாவின் மரணம். டயானாவை, அவரது காதலன் டோடி ஃபயத்தோடு போட்டோ எடுத்துவிட அலைந்து திரிந்தார்கள் பாப்பராஸிகள். 97 -ம் வருடம் ஆகஸ்ட் 31 -ம் தேதி அவர்களிடம் இருந்து தப்பிக்க, படுவேகமாகச் சென்றது டயானாவின் கார். கண்ட்ரோலை இழந்து கார் விபத்தில் சிக்கி, டயானா ரத்தவெள்ளத்தில் துடிக்க, அந்த நேரத்திலும் கடமை தவறாமல் போட்டோ எடுத்தார்கள் பாப்பராஸிகள். அந்த இடத்தில் ஆம்புலான்ஸுக்கு தடையாக இருந்த ஒன்பது பாப்பராஸிகள் கைது செய்யப்பட்டு பின்னர் விடிவிக்கப்படார்கள்.

இதன்பின், பெரும்பாலான நாடுகள் பாப்பராஸிகளின் செயல்பாடுகளை பல்வேறு சட்டங்கள் மூலம் சுருக்கிவிட்டன. நார்வே, ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் 'புகைப்படங்களை பத்திரிகைகள் பிரசுரிப்பதற்கு முன் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெறவேண்டும்' என்று சட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தது. ஆனால், அவர்கள் அடங்கவே இல்லை. பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பலமுறை தன் குழந்தையை அலட்சியமாகத் தூக்கி வருவதை படம் எடுத்து வெளியிட்டார்கள். அமெரிக்க நீதிமன்றம் தலையிட்டு பிரிட்னிக்கு எச்சரிக்கை விடுக்க, அதற்கடுத்து நல்ல தாயாக மாறிவிட்டார் பிரிட்னி.

சீனாவில் 'ஓரியண்டல் டெய்லி நியூஸ்' என்கிற நிறுவனம் வெளியிட்ட செய்தி 'நீதித் துறைக்கு எதிரானது' என்று சொல்லி கிரிமினல் வழக்குத் தொடுத்தது சீன நீதிமன்றம். கடுப்பான செய்தி நிறுவனம், நீதிபதியை ஃபாலோ பண்ண எக்கச்சக்க ஆட்களை அனுப்பிவைத்தது. தொடர்ந்து 72 மணி நேரம் நீதிபதியைப் படுத்தியெடுத்துவிட்டார்கள் பாப்பராஸிகள். டென்ஷனின் உச்சத்துக்கு போன நீதிபதி, மொத்தப் பேரையும் உள்ளே தூக்கிப் போட்டு ரிமாண்ட் செய்துவிட்டார்.

பிரிட்டனில் நடிகை சியன்னா மில்லர் மற்றும் பாடகி லில்லி ஆலன் இருவருமே 'பாப்பராஸிகள் தங்களைப் பின் தொடரக் கூடாது' என்று வழக்கு போட்டுத் தடை வாங்கி இருக்கிறார்கள்.


ஆனால், பாப்பராஸிகள் அசரவில்லை. கேமரா சகிதம் இப்போதும் மறைந்திருக்கிறார்கள்!                        

1 comment:

Jayadeva said...

இவங்களோட திறமைக்கு ஒரு சல்யூட். [டயானாவை சாகடிக்க இவங்கதான் காரணம் என்பது மனதுக்கு கஷ்டமான சேதி.]