Thursday, June 3, 2010

தமிழ்த்தாயின் தலைமகனுக்கு 87-வது பிறந்த நாள்

'தமிழ்நாட்டின் மேன்மைக்காக தன்னை அர்ப்பணித்தவன் உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் தொடர்ந்து தொண்டறம் செய்திட நடந்து கொண்டிருக்கிறான்'

முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த "குவா குவா'' எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வதோடு; அது கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்து; திராவிட இயக்கமெனும் தொட்டிலில் கேட்ட தன்மானத் தாலாட்டை; இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் "வாழ்க தமிழ்!'' "வெல்க தமிழர்!'' என முழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்; 87 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த எழுச்சி முழக்கம்; இன்றைக்கும் சோர்வு தட்டாமல் இந்தப் பார் மகிழ ஒலித்துக் கொண்டிருக்கிறது! தேரூரும் திருவாரூரிலிருந்து கிளம்பி, திருக்குவளையின் வேரார்ந்த அந்த கீதம்; இன்றைக்கும் அதற்கு வேதம்!

ஆனால், வேதங்கள், இதிகாச புராணங்களை விரித்துரைத்து மாந்தரிடையே பேதங்களை வளர்த்திடும் போக்கு; பாலப்பருவத்திலேயே அந்த இளைஞனுக்கு பகையான ஒன்று! அதனால்தான் அந்த ஊர் சலவைத் தொழிலாளி பட்டு என்பவரின் பாராட்டும், சீராட்டும் பெற்று வளர்ந்தான் - பாசமுடன் பழகி நட்போடு தொடர்ந்தவர்களோ; பழங்குடி இனத்தினரான ஆதி திராவிட மக்கள்தான்! சிங்கப்பூர் சவுராளி ராமச்சந்திரனின் "பார்பர் ஷாப்'' தான் அவனுக்கு பகுத்தறிவுப் பாசறை!

அவனது பொது வாழ்க்கையின் அதிகாலைப் பருவத்தில் அவன் ஏற்றிய கொடிகளில் பெரும் பாலானவை - அடித்தட்டு மக்கள் வாழ்ந்த தெருக்களில் அல்லது அவர்கள் வீட்டு முகப்புகளிலேதான்!

அந்த மக்கள் என்றால்தானே நோய் நொடிகளுக்குக் கூட இளக்காரம் -அவர்களை வாட்டும் குறைகளில் ஒன்று; வறுமையை விடக் கொடியது - பார்வையில் ஏற்படும் பழுது; என்பது அவன் மனத்தைப் பாடாய்ப்படுத்தியது.

காலிழந்த நொண்டியெனில், மற்றவர் தோளில் ஏறிக்கொண்டு நகர முடியும் - பேச இயலாதவர் எனில் எழுதிக்காட்ட முடியும்- காது கேளாதோர்க்கும் அதுவே பொருந்தும், இல்லாவிட்டால் கையால் "ஜாடை'' காட்டிட இயலும் - ஆனால் கண் பார்வையற்றோர்; ஒரு காட்சியைப் பிறர் வர்ணிக்கக் கேட்கும்போது கூட; அய்யோ; தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் தானே ஆழ்வர்.

அதனால்தான் இயலாதோர்க்கு - ஏழையெளியோர்க்கு - உதவிட வேண்டுமெனில் - வந்துற்ற வாய்ப்பைக் கொண்டு அவர்கட்கு கண்ணில் ஒளி வழங்கிடும் கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி;

கண்ணொளி வழங்கும் திட்டத்தைப்
பரவலாக வகுத்தான்.
அதனைத் தொடர்ந்து இரவலர்
எவரும் இருத்தலாகாது என
உரைத்து அவர்கட்கு மறு வாழ்வு
இல்லங்கள் அமைத்தான்.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண அண்ணன்
காட்டிய வழியில் எத்தனையோ
திட்டங்கள் வடித்தான்.
மாற்றுத் திறனாளிகள்,
மலம் எடுப்போர்,
கை ரிக்க்ஷா இழுப்போர்,
அரவாணிகள் -
என அனைவர்க்கும் மனித உரிமை தந்திட; அவன் தயங்கியதில்லை.

சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில் அவன் ஒரு தளகர்த்தன்!

ஐந்து முறை மாநிலம் ஆளுகின்ற முதல்-அமைச்சராகவும் - பதினோரு பொதுத் தேர்தல்களில் வென்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் - 50 ஆண்டுகள் சட்டப்பேரவையில் வாழ்வில் ஒரு பகுதியை வழங்கி; தன்னை வளர்த்த அந்த பேரவைக்கு என எழில் மாடத்தை நிறுவி - தமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன்-

தமிழ் மொழி எங்கும், எதிலும் ஏற்றம் பெறவும் - தமிழர் எத்துறையிலும் வல்லவர், நல்லவர், மிகுந்த அறிவும், மேன்மைசால் ஆற்றலும் உள்ளவர் என எந்நாளும், எந்நாட்டவராலும் போற்றப்படவும்;

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''

"யாதும் ஊரே யாவரும் கேளிர்''


என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்.

இதோ 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும் - எத்தனையோ வரலாற்று ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூலகம் போன்ற இல்லத்தையும் - நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக; ஆம்; மாந்தர்தம் நோய் நொடி தீர்க்கும் திருப்பணிக்காக - இதோ பொதுவில் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கின்றான்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சி.கே.ரெங்கநாதன், இயக்குநர் ராமநாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை நியமித்து இந்த அறக்கட்டளையைத் திறம்பட நடத்திடுவர் என்ற உறுதியோடு இருக்கிறான்.

கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் - உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் - தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்!

வாழ்க தமிழ்!
வளர்க திராவிட இன உணர்வு!


இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

  ***********************************************

42 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தநாளில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பெரியார் - அண்ணா - எம்.ஜி.ஆர் வாழ்த்து

இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியின் 87-வது பிறந்தநாள். கடந்த 42 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அவரது 45-வது பிறந்த நாளன்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பெரியார்

'பொது மக்களுக்காக பொதுத்தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் பொது மக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களை பாராட்ட, பெருமைப்படுத்த பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையே ஆகும். கலைஞர் கருணாநிதி விஷயத்தில் பாராட்டத் தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன.

கலைஞர் தனது பள்ளி மாணவ பருவத்தில் இருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-30 ஆண்டுகளாக பொதுத்தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாகிய சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியை ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சிக்கு உண்டான எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து அந்தக் கட்சியை நல்ல வண்ணம் உருவாக்கிய அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனம் ஆக்கி, இன்று மகா வன்மை படைத்த காங்கிரசை எதிர்த்துத் தோல்வியடையச் செய்த முக்கியஸ்தர்களில் ஒருவராயும் இருக்கிறார். கலைஞர் அறிவில் சிறந்தவர். நிர்வாகத்தில் சிறந்தவர். பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்ததில் சிறந்தவர்'.

இவ்வாறு பெரியார் கூறியுள்ளார்.

அண்ணா

'தமிழகத்தின் சிறப்பெழிலை உயிர்ப்பித்து இயற்கை அழகை நம்முன் நடமிடக் காட்டி பல வண்ணக் காட்சிகளை நம் பார்வைக்குக் கொணர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளின் அணி வகுப்பைத் தொகுத்துரைத்துப் பழம்பெரும் வாழ்வின் நாடித்துடிப்பை நல்லோர் புகழ நாற்புறமும் சூழ்ந்த அந்நாள் நல்லறிவை தனது வளமிகு செழுந்தமிழ்ச் சொல் திறத்தால் படைக்கும் தனியாற்றல் படைத்தவர் தம்பி கருணாநிதி. அவரின் வாதத் திறன் சுவைக்க இனிமையானது மட்டுமல்ல- எடுத்துரைக்கக் கேட்கும் போது மயிர்க்கூச்செறிகிறது.

உணர்ச்சிக்கு உரு அமைப்பது ஒரு எழுத்தாளனுக்கு எளிதான காரியமல்ல. கருணாநிதி யாரையும் விஞ்சுகிற அளவில் ஒப்புவமையற்ற நடையழகு காட்டும் எழுத்தாளர். தமிழ் இலக்கியத்துக்கு நற்பணி ஆற்றியுள்ள கலைஞர்.

கீர்த்திமிக்க அவர் புகழ் திசையெட்டும் பரவுக-வாழ்க!'

இவ்வாறு அண்ணா கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர்.

இதேபோல், மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., 1971-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கருணாநிதியின் 48-வது பிறந்த நாளில் 'கலைஞர் ஒரு ரோஜா மலர்' என்று வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார். அதன் விவரம் வருமாறு:-

தனியொரு ரோஜா மாலையாவதில்லை. ஒரே ஒரு இதழ் மலராவதில்லை. கழகத்திற்காக பல்வேறு தியாகங்களைச்செய்து, லட்சோப லட்சம் தொண்டர்களின் தலைவராக இருக்கிறார் கலைஞர்.

மலர்களைப் பெண்களோடு ஒப்பிடுகிறோம். ரோஜாவை மலர்களின் ராணி என்று சொல்வார்கள். மாலைக்கு ரோஜா காரணமானது போல, கழகத்தின் வளர்ச்சிக்குக் காரணமான கலைஞரையும் ரோஜா என்று குறிப்பிடலாம்.

எல்லோருக்கும் பிறந்தநாள் வருகிறது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரது பிறந்தநாட்கள்தான் சமுதாயத்தின் கவனத்தை கவரும் சிறப்பைப் பெறுகின்றன. அத்தகைய பெருஞ்சிறப்பைக் கலைஞரின் பிறந்த நாள் பெற்று வருகிறது. இவர் இந்நாளில் தான் பிறந்தார் என்பதை எண்ணும்போதே இதயத்தில் மகிழ்ச்சி பொங்கும் விதமாக சிலருடைய பிறப்புக்கள்தான் அமைகின்றன. தமிழ் சமுதாயம் பெருமைப்படும் சிறப்பு மிக்க பிறப்பு, நமது கலைஞரின் பிறப்பு.

நாள்தோறும் இந்த நாட்டு மக்களுக்காக, பேரறிஞர் அண்ணா அவர்கள் வகுத்த பாதையில் மகத்தான சாதனைகளைச் செயல்படுத்தி வரும் வேகத்தால் கலைஞரின் பிறந்தநாள் ஆண்டுக்கு ஒருமுறையல்ல; பலமுறைகள் வருவதுபோல் மனதில் பசுமையாக இருந்து வருகின்றன.

இதுபோன்ற பிறந்த நாட்கள் நூற்றுக்கணக்கில் தொடரட்டும். கலைஞரின் சிறப்புக்கள் பெருகட்டும். புகழும், பெருமையும் வளரட்டும்.

வாழ்க கலைஞர். வெல்க பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகள்.

இவ்வாறு எம்.ஜி.ஆர். கூறியுள்ளார்.

    ***********************************************
முதல்-அமைச்சர் கருணாநிதியின் 87-வது பிறந்தநாளையொட்டி, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வாழ்த்து கவிதை

"வெற்றி மகள் ஓய்வின்றி உன் கதவை தட்டட்டும்''

அக்னியில் குளித்தாலும்...

காலத்தச்சன் கைபுனைந்து இயற்றிய ஞாலததேரில் ஞான உலா வருகின்ற வையத்து சூரியனே, வைகறையின் ஓவியமே இமயத்தில் மெய்கீர்த்தி எழுத வந்த காவலனே, நூற்கடல் குடித்து நுண்மைகள் எடுத்து பாற்கடல் போல பந்தி வைக்கும் பாவலனே.

சொக்க வைக்கும் சொல்லழகும் சொற்போரில் மற்ற வரை சிக்க வைக்கும் பேரழகும் சீதனமாய் பெற்றவனே, கற்றவர் விழுங்கும் கற்பக கனியே கருத்துக்கே எட்டாத கற்பனையின் அற்புதமே வித்தக விரலுக்கும் வெண்கல குரலுக்கும் இலக்கணமாய் ஆன இலக்கிய சித்தனே.

தூக்கத்தை துறந்த தொண்டுக்கு பித்தனே ஊக்கத்தின் உட்பொருளே உழைப்பின் பொழிப்புரையே வள்ளுவனின் எழுத்தாணி இளங்கோவின் எழுத்தாணி கம்பனின் எழுத்தாணி கலந்த எழுத்தா-நீ. என்றறீஞர் திருக்கூட்டம் இறும்பூது எய்திடவே அன்று முதல் எழுதி வரும் அறிவுலக ஆசானே.

தமிழாய் பிறந்தவனே தாயிற் சிறந்தவனே இமையாய் தமிழ்குலத்தை எப்போதும் காப்பவனே, அக்னியில் குளித்தாலும் அருவியிலே குளிப்பது போல் அரசியல் போர்க்களத்தில் அதிசயமாய் நிற்பவனே.

வாழ்விக்கும் புண்ணியன்

எத்தனையோ தாக்குதல்கள், எத்தனையோ பேரிடிகள், அத்தனையும் வரமாக்கி அதன் மீது நடப்பவனே ஆதிக்க சக்திகளின் அன்றாட சதிவேலை, மூளையை கொண்டு முறியடிக்க கற்றவனே, சுற்றி வரும் விரோதங்கள், சூழ்ந்து வரும் துரோகங்கள், வெற்றி வரும் பாதைக்கு வித்தாக கொண்டவனே.

பெரியாரை முன்பற்றி அண்ணாவைப் பின்பற்றி சரியாத சாம்ராஜ்யம் சமைத்து தந்தவனே. பாராட்டை ஒரு போதும் தாலாட்டாய் கருதாமல் போராட்ட சக்திக்கு புத்துயிராய் கொள்பவனே, கோழைக்கும் வீரம் கொப்பளிக்க செய்பவனே, ஏழைக்கு வாழ்வளிக்க இறைவன் போல் வந்தவனே, திட்டங்கள், சட்டங்கள் செய்வதிலே வல்லவனே எட்டாத உயரத்தில் லட்சியத்தால் பறப்பவனே கொடி கண்ட மன்னவனே குடிபோற்றும் நல்லவனே அடி பிறழத்தெரியாத ஆணரசே-என் தலைவா.

தமிழ்நாட்டு வரலாறுதனைத்சுற்றி வருமாறு சாதனைகள் பல நூறு சாதித்து விட்டாய்-நீ.

உன்னை தவிர ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின் செல்லேன்-என்று மொத்த தமிழகமே முன்வந்து உன் அணியில் சங்கமிக்கும் காட்சி சரித்திர காட்சியன்றோ. இது போதும் எனச்சொல்லி எவரையும் ஒதுக்காமல் வருவோரை எல்லாம் வாழ்விக்கும் புண்ணியனே. ஒரு வேளை எதிர்கட்சி ஒன்றுமே இல்லாமல் மாநிலத்தை நீயாளும் மார்க்கம் பிறந்திடுமோ?

மிகையில்லை தலைவா, மீண்டும் உன் ஆட்சிக்கு பகையில்லை தலைவா பாரதமே உன் பின்னால். தேனுக்கு விளம்பரம்-தித்திப்பு. தென்றலுக்கு விளம்பரம் இனிமை, வானுக்கு விளம்பரம் கதிர் வெளிச்சம், வாரிக்கொடுக்கும் வள்ளலே உனக்கு விளம்பரம்-உன்னோடு பிறந்த உழைப்பு தானே. உழைப்போர் திலகமே உன் பிறந்த நாள் மண் செழிக்க வந்த மழை பிறந்த நாள், பண் செழிக்க வந்த பதம் பிறந்த நாள், கண் செழிக்க வந்த கலை பிறந்த நாள்.

வெற்றி திருமகள்

தென்னாடுடைய தலைவா, எந்நாட்டவர்க்கும் இறைவா உன்னை வணங்காமல் ஒரு பொழுதும் உறங்க முடியாது-என்னால் வாழிய நீ பல்லாண்டு. இதயத்தில் ரோஜாவை பதிய மிட்டவனே. எண்ணத்தில் வாசனையை வழிய விட்டவனே. வாழிய நீ நூறாண்டு.

காற்றாண்டு வருகின்ற உலகத்தில்-உன் நூற்றாண்டு விழாவை காண வேண்டும் நாங்கள். மந்திர சொல்லுக்கும், மகுடி வார்த்தைக்கும் சுந்தர தமிழுக்கும் சொந்தக்காரனே. கரும்புகள் கொண்ட கணுக்களை போல தழும்புகள் கொண்ட தமிழ் அண்ணலே. நீ கடமையே பெரியதென்று கற்களிலும் படுத்துள்ளாய், முட்களிலும் படுத்துள்ளாய், அதனால் தான் அறிஞர்கள், கவிஞர்கள் சொற்களிலும் இன்று சுகமாய் படுத்துள்ளாய். சோர்வுக்கு விடை தந்த சுந்தரனே.

எவரையும் அசைக்கும் உன் எழுத்ததிகாரம் இன்று போல் தொடரட்டும். எவரையும் மயக்கும் உன் சொல்லதிகாரம்-இன்று போல் ஒலிக்கட்டும். ஏழைக்கு வாழ்வளிக்கும் பொருளதிகாரம் இன்று போல் செழிக்கட்டும் செந்தமிழர் வாழ்வுக்கு செம்மொழி தந்த சிலப்பதிகாரமே-உன் சிறப்பதிகாரம்.

இன்றுபோல் அந்த இமயம் வரை எட்டட்டும் வாழிய வாழிய எனமுரசம் கொட்டட்டும். வெற்றி மகள் ஓய்வின்றி உன் கதவை தட்டட்டும். மேலவையால் மேற் புகழும் மேன் மேலும் கிட்டட்டும்.

இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

4 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

நல்ல தகவல்கள்

Anonymous said...

தமிழுக்கு தமிழினத்திற்கும் அவமானம் தந்த ஒருவனுக்கு தமிழ்த்தாயின் தலைமகன் என்று பட்டம் சூட்டுவது ஏற்புடையதா?? வால்பிடி தமிழர்களே நிமிர்ந்து வாழ விரும்பாத தமிழர்களே யோசியுங்கள். அவமானம்.

யாரோ

Anonymous said...

தமிழுக்கு தமிழினத்திற்கும் அவமானம் தந்த ஒருவனுக்கு தமிழ்த்தாயின் தலைமகன் என்று பட்டம் சூட்டுவது ஏற்புடையதா?? வால்பிடி தமிழர்களே நிமிர்ந்து வாழ விரும்பாத தமிழர்களே யோசியுங்கள். அவமானம்.

யாரோ

venkat said...

இந்த மனித மிருகம் பிறந்ததே தவறு, அதிலும் இவனைப் பற்றி இந்த தே....பையனை வாழ்த்த வேறு வேண்டுமோ?