Monday, May 31, 2010

சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறும் தமிழக இளைஞர்

உலகின் மிக உயரமான மலை உச்சியான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தமிழக இளைஞர் சென்னையைச் சேர்ந்த எஸ்.சந்தோஷ்குமார் (வயது27) சாதனை படைத்துள்ளார். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்ததும் கையில் எடுத்து சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தியபடி தமிழ் வாழ்க என்று சத்தமாக முழக்கமிட்டுள்ளார்.

இந்த சாதனையை கேட்டு அவரது குடும்பத்தினர் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தமிழகமுமே பெருமை கொண்டது. இந்த சாதனை தமிழர் 'தினத்தந்தி'க்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

எனது பூர்வீகம் புதுச்சேரி. ஆனால், சென்னையில் வளர்ந்தேன். படித்ததும் இங்குதான். எனது அப்பா சங்கரன் துபாயில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. தங்கை அபிநயா துபாயில் இளங்கலை பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். பிளஸ் டூ வரை சென்னையில் படித்த நான், சிங்கப்பூரில் பி.இ. (எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பட்டம் பெற்றேன். எனக்கு இயல்பாகவே ஓட்டத்திலும், சைக்கிளில் நீண்டதூரம் செல்வதும் பிடிக்கும்.

சிங்கப்பூரில் உள்ள 'பார்கலேஸ் கேபிடல்' வங்கியில் திட்ட அதிகாரியாக வேலை பார்த்து வருகிறேன். அங்கிருந்தபோது வெளிநாட்டு நண்பர் ஒருவர் அறிமுகமானார். அவர் மூலம் மலை ஏற்ற பயணத்தில் ஆர்வம் ஏற்பட்டது. முதல் முதலில் அவருடன் சேர்ந்து 2006-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடல் மட்டத்தில் இருந்து 9188 அடி உயரத்தில் உள்ள 'ரிஞ்சானி' என்ற மலையில் ஏறினேன். மலை உச்சிக்கு செல்ல 2 நாட்கள் ஆனது.

அதையடுத்து சிங்கப்பூரில் மலையேற்ற பயணம் தொடர்பான பயிற்சி எடுத்து கொண்டேன். பிறகு 2008-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் 19340 அடி உயரத்தில் உள்ள 'கிளிமஞ்சாரோ' என்ற சிகரத்திற்கு 6 நாட்களில் சென்றேன். இதையடுத்து எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் 5 பேருடன் சென்றேன்.

கடல் மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த அடிவாரத்திற்கு 12 நாட்களில் போய் சேர்ந்தோம். அங்கிருந்து எவரெஸ்ட் சிகரத்தை பார்த்தபோது அதன் அழகில் மயங்கினேன். அந்த பனி மலையில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற வேகமும் அப்போதே ஏற்பட்டது.

12 ஆயிரம் கிலோ பொருட்களுடன்...

பின்னர் திபெத் நாட்டில் உள்ள உலகத்தில் 6-வது உயரமான பனிமலையில் (26900 அடி உயரம்) ஏறினேன். இந்த மலை உச்சிக்கு செல்ல 40 நாட்கள் ஆனது. அப்போதுதான் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி விட முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. அதைத்தொடர்ந்து கடல் மட்டத்தில் இருந்து 29035 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு ஆயத்தமானேன். நிறைய பணம் செலவாகும் என்பதால் விளம்பரதாரரும், உரிய பயிற்சியும் தேவைப்பட்டது. அப்பா, அம்மா, தங்கை, உறவினர்கள், நண்பர்கள் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேபாள நாட்டு தலைநகர் காத்மாண்டு போனேன். அடுத்தநாள் அங்கிருந்து இமயமலை அடிவாரத்தில் உள்ள லுக்லா கிராமத்திற்கு நான் உள்பட 7 பேர் போனோம். மற்ற 6 பேரும் ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். எங்களுடன் வந்த மற்றவர்களையும் சேர்த்தால் மொத்தம் 24 பேர்.

எவரெஸ்ட் போய் வர 60 நாட்கள்

எங்கள் அனைவருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இறங்கி வருவதற்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களின் மொத்த எடை 12 ஆயிரம் கிலோ. எவரெஸ்ட் மலை அடிவாரத்திற்கு (பேஸ் கேம்ப்) இந்தப் பொருட்கள் மாடுகள், ஆட்கள், ஹெலிகாப்டர் மூலம் எடுத்து வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து நாங்கள் சாட்டிலைட் போன், சோலார் சார்ஜர், சாப்பாடு, ஆக்ஸிஜன் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம்.

தினமும் 6 மணி நேரம் நடந்தோம். 12 நாட்களில் எவரெஸ்ட் மலை அடிவாரத்தை சென்றடைந்தோம். அதற்கு மேலே மொத்தம் 4 கேம்ப்கள் உள்ளன. பனிப்பாறைகள் அந்தப் பகுதியில் காக்காவை மட்டும் காண முடிந்தது. சில குருவிகளும் கண்ணில் தென்பட்டன. அப்போதுதான் பறவைகள் குறிப்பாக காகம் இவ்வளவு உயரத்திற்கு வருகிறதே என்று ஆச்சரியப்பட்டேன். கடுங்குளிர் வாட்டி வதைத்தது. ஆக்ஸிஜனும் குறைவாக இருந்ததால் உடல்நலம் பாதித்தது. ஆக்ஸிஜன் பாட்டில்கள் அப்போது கைகொடுத்தன. சூரியன் சுட்டெரித்ததில் எனது முகத்தில் காயம் ஏற்பட்டது. இருந்தாலும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிப்பது என்ற மனஉறுதியும், வேகமும் கொஞ்சமும் குறையவில்லை.

எதிர்கால லட்சியம்


எவரெஸ்ட் சிகரத்தை நெருங்க, நெருங்க மலையின் அழகு பிரமிக்க வைத்தது. நிலவும், நட்சத்திரங்களும் மிக அருகில் இருப்பதாக உணர்ந்தோம். எங்களுடன் வந்த 24 பேரில் 15 பேர் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தோம். அந்த மலை உச்சியில் ஏறியதும் தமிழன் என்ற உணர்வில் கையில் எடுத்துச் சென்ற 'தமிழ் வாழ்க' என்ற பேனரை நெஞ்சில் ஏந்தி 'தமிழ் வாழ்க' என்ற உரக்க முழக்கமிட்டேன். மற்றவர்களும் அவரவர் நாட்டின் பெயரைச் சொல்லி மகிழ்ந்தனர். எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவதற்கு 55 நாட்கள் ஆனது. 5 நாட்களிலே கீழே இறங்கி வந்துவிட்டோம்.

ஆசியாவில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்பட இதுவரை 3 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறிவிட்டேன். இவை தவிர அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா ஆகிய 4 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களில் ஏறி மொத்தம் 7 கண்டங்களில் உள்ள சிகரங்களிலும் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இவ்வாறு சந்தோஷ்குமார் கூறினார்.

சந்தோஷ்குமாரின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று அவரது தாய் அமுதாவும், பாட்டி மகாலட்சுமியும் கூறினார்கள். சந்தோஷ்குமாருக்கு முன்னதாக 1997-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பி.சண்முகவடிவேலு என்பவர் தனது 28-வது வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

அனிதா said...

உயிரைக் கொடுத்து தமிழை தமிழின் புகழை தமிழினத்தின் பெருமையை காப்பாற்ற துடிக்கும் போராளிகள் மத்தியில் இவனும் ஒரு போராளியாகவே போற்றப்படவேண்டியவன்.

சீமான் said...

சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் இவனொரு முன்னுதாரணம். உயிரை பணயம் வைத்து உயரே போனாலும் தமிழை உயர்த்தி பிடிக்க நினைத்த இவன் உயர்ந்த மனிதன்.