Monday, May 24, 2010

சுயமதிப்பீடு செய்வதே வெற்றிக்கு வழி!

ஒருவருக்கு தன்னைப் பற்றிய தெளிவு இருந்தாலே அவர் வெற்றி பெறுவது உறுதி

ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். பிறர் நம்மை எப்போதும் கவனிக்க வேண்டும் என்றே மனம் விரும்புகின்றது. நம் செயல்கள் நல்லவை, கெட்டவை என்பதைவிட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற வகையிலேயே நாம் செயல்படுகின்றோம். தனித்துவத்தை நிறுவ முயற்சிக்கிறோம்.

ஆனால் மற்றவரை ஈர்ப்பது மட்டும் தனித்துவமல்ல. நம்மை நாமே கவனிப்பதும், அவசியமற்றவற்றை அறிந்து தவிர்த்தலும், தேவையானவற்றை அறிந்து தெளிவதுமே தனித்துவம்.

தனித்துவம் அறிதல்..

நம்மால் தனித்து செயல்பட முடியும். ஆனால் சமுதாயத்துடன் இணைந்தே செயல்பட்டு பழகிய மனதால் தனித்து இயங்க முடிவதில்லை. சமூக அங்கீகாரம் என்பது ஒருவகை பாதுகாப்பு உணர்வைத் தரும் என்று நாமாகவே தவறாக எண்ணி ஏற்படுத்திக் கொண்டது என்பது சற்று யோசித்தால் தெளிவாகும்.

தனித்திருப்பதும், விழித்திருப்பதும் நமது இயற்கையான சுபாவம். ஆனால் பிறர் நம்மை எவ்வாறு நினைக்கின்றார்கள்? என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நமது தனித்தன்மையை இழந்துவிடுகின்றோம்.

நாம் தனிமையின் இனிமையை உணராமல் எந்திரகதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்படிச் செயல்படுவதால் நாம் விரும்பிச் சேர்த்த அனைத்தும் நம்மிடம் இருக்கும். ஆனால் அவற்றை ஏன் விரும்பினோம், விரும்புகிறோம் என்று நமக்கே புரியாது. இந்தநிலை மாற வேண்டுமென்றால் நம்மை நாமே அறிய முயல வேண்டும். நமது தனித்தன்மையை நாம் இனங்காண வேண்டும்.

நீங்கள் தனித்துவம் பெற்றவர். உங்களைப் பற்றி அறிவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. உங்களது விருப்பு, வெறுப்புகள், திறன்கள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், மதிப்பு ஆகியவையே உங்களைப் பற்றி அறிய உதவும். இப்படி தன்னை அறிவதற்கு கால அவகாசம் தேவைப்படலாம். பல்வேறு நிலைகள் அதற்கு துணையாய் நிற்கும். அவற்றைப் பற்றி பார்ப்போம்.

மதிப்பீடு செய்தல்:

உங்களைப்பற்றி மதிப்பீடு அடிப்படையில் பட்டியலிடுவது ஒருவகையான அறியும் முறையாகும். இப்படி ஏன் மதிப்பீடு செய்ய வேண்டும், என்னைப் பற்றி எனக்குத் தெரியாதா என்று கேட்கிறீர்களா?

நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டதாக நினைத்துக் கொண்டிருப்பது ஒரு சிறுபகுதிதான். அதனால்தான் பலர் தாங்களாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாதைகூட தங்களுக்கு மனநிறைவை தரவில்லை? என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே சரியான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டுமென்றால் உங்களைப் பற்றி சாதாரணமாக எண்ணுவதைவிட சற்று ஆழமாக மதிப்பிட வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது.

உங்களைப் பற்றி அறிய உளவியல் வல்லுனர்களால் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் உங்களை மதிப்பீடு செய்யும்போது உங்களது திறமை, குணாதிசயங்கள், விருப்பம், ஆளுமைத்திறன், மனோபாவம் ஆகியவற்றை அறிய முடியும். அதில் உங்களுக்கு கிடைக்கும் மதிப்பீடு உங்களின் ஒவ்வொரு முடிவையும் விவரிக்கும் வகையில் இல்லாமல் போனாலும் ஓரளவு உங்களைப் பற்றி அறிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட உதவிகரமாக இருக்கும்.

முறைப்படுத்தப்பட்ட மதிப்பீடு:

பள்ளி- கல்லூரிகளில் சேர்க்கை நடக்கும்போது திறனறிதல் தேர்வுகள் நடைபெறும். தேர்வு நடத்தாமல் திறனறிதல் கேள்விகள் கேட்கப்படுவதும் உண்டு. விமானி, சட்டப்படிப்பு, ஆர்க்கிடெக்சர், மேலாண்மை படிப்பை பயில எத்தகைய திறன்கள் தேவை போன்றவற்றை அறிய இத்தகைய தேர்வுகள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.

இதுபோன்ற வினாக்களை நீங்களே தொடுத்து உங்கள் திறன்களை மதிப்பீடு செய்து கொள்ளலாம். உங்களது ஆர்வம், புத்திசாலித்தனம், ஆளுமைத்திறன், மதிப்பு ஆகியவற்றை அறிய இத்தகைய முறைப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை பயன்படுத்தலாம்.

ஆர்வம் அறிதல் தேர்வு:

உங்களது ஆர்வத்தை அறிவதற்கான தேர்வு முறை இதுதான்... பல செயல்களை குறிப்பிட்டு நீங்கள் எதை விரும்பிச் செய்வீர்கள்? என்று கேட்டால் ஒன்றை தேர்வு செய்வீர்கள். அதுவே உங்களது ஆர்வத்தை காட்டுகின்றதாக அமையும். இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

ஒருவருக்கு விளையாட்டு சம்பந்தமான விஷயங்களை அறிவதில் அதிக ஆர்வம் இருந்தது. அவர் எப்போதும் விளையாட்டு மைதானத்தில் இருப்பார் அல்லது விளையாட்டு சம்பந்தமான இதழ்களை படித்தல், தொலைக்காட்சியில் விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகளை பார்த்தல் போன்றவற்றில் ஆர்வம் காண்பித்தார். அவர் சிறந்த பேச்சாற்றல் மிக்கவராகவும் திகழ்ந்தார்.

இத்தகைய திறன்களை ஒருங்கிணைத்த ஒரு வேலையைப் பெற்றால் வாழ்வு நன்றாக இருக்கும் என்று விரும்பினார். இப்போது அவர் விளையாட்டு தகவல்களை சேகரித்து ஒளிபரப்பும் தொலைக்காட்சிப் பிரிவில் பணியாற்றுகிறார். அத்துடன் விளையாட்டு சார்ந்த தகவல்களை நாளேடுகளிலும் அவ்வப்போது எழுதி வருகின்றார். விருப்பத்தை அறியும் மதிப்பீடு தேர்வு அவரது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள நன்கு உதவியது.

திறனை மதிப்பீடு செய்யும் தேர்வு:

ஒன்றின் மீது விருப்பம் உள்ளது என்று அறிந்தவுடன் அடுத்து அறிய வேண்டியது அந்த விருப்பத்தை நிறைவேற்ற நம்மிடம் போதிய திறமை உள்ளதா? என்பதைத்தான். இதை அறிய என்ன செய்யலாம்...

ஒருவர் கட்டிட கலை வல்லுனராக ஆக வேண்டும் என்று விரும்பினார். அவரது திறனை மதிப்பீடு செய்யும்போது அவரது கணிதத்திறன் குறைவாக இருப்பதை அறிந்தார். ஆகவே தனது திறனின் அடிப்படையில் வடிவமைப்போடு தொடர்புடைய 'கிராபிக்ஸ்' துறையை தனது வேலைத்தளமாக ஆக்கிக் கொண்டார்.

மற்ற திறன்களை மதிப்பிடுவது பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்!


ப.சுரேஷ்குமார்.

No comments: