Saturday, May 8, 2010

தடைகளை மீறி ஜெயிப்பது எப்படி?

வளமான எதிர்காலத்துக்காக திட்டமிடாதவர்களே இல்லை. ஆனால் திட்டக் காலத்தில் எதிர்கொள்ளும் தடைகளை தகர்த்தவர்களே வெற்றி பெறுகிறார்கள்.

இலக்கை அடைவதற்கான செயல் திட்டம் தயாரித்தலும், இடையில் ஏற்படும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி பார்க்கலாம்.

ஒரு இலக்கை நிர்ணயித்த பின் அதை அடைவதற்கு தயாரிக்கும் செயல்திட்டம் மிகவும் முக்கியமானது. செயல்திட்டம் என்பது எதிர்காலத்தை தெளிவுபடுத்தும் வரைபடம் எனலாம். இலக்கை அடையும் வரை ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டிய நுட்பமான விஷயத்தையும் குறிப்பிடுவதே செயல்திட்டம்.

இதனால் செயல்திட்டம் எங்கு தொடங்குகின்றது, எங்கு முடிகின்றது, என்பதை கணிக்க முடியும். இலக்கை அடைய எத்தகைய திறன்களையும், அறிவையும் பெற வேண்டும் என்பதும் தெளிவாகும். செயல்திட்டத்தை உருவாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.

உங்களது தேவை- திறமை:

உங்களது எதிர்கால திட்டம் என்பது உங்களின் ஆசையை அடிப்படையாகக் கொண்டது. அதை நிறைவேற்றுவதற்கு நீங்கள் எவ்வாறு உங்களிடமுள்ள திறமையையும், ஆற்றலையும் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம்.
இசையில் ஆர்வம் இருந்தால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விஞ்ஞானியாக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? விளையாட்டு வீரராக அல்லது பயிற்சியாளராக ஆக வேண்டுமென்றால் எவ்வாறு திட்டமிட வேண்டும்? என்று இனங்கண்டு அதற்கேற்ப செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும்.

நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு:

ஒரு மாணவி உயிரியல் படிப்பை விரும்பினார். விலங்குகள் மேல் உள்ள விருப்பம் காரணமாக அந்த படிப்பை தேர்வு செய்தார். ஆனால் படிக்கும்போது பரிசோதனைக் கூடத்தில் விலங்கினங்களை ஆராய்ச்சிக்காக பயன்படுத்துவதைப் பார்த்தவுடன் அவரது மனதில் மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே வேறு பிரிவில் படிப்பைத் தொடர விரும்பினார்.

நீங்கள் கொண்டுள்ள மதிப்பிற்கும், நீங்கள் படிக்கும் படிப்பு அல்லது செயல்பாட்டிற்கு முரண்பாடு ஏற்பட்டால் உங்கள் மனதில் குழப்பம் ஏற்படும். ஆகவே நீங்கள் மனதில் கொண்டுள்ள மதிப்பு பாதிக்கப்படாத அளவில் உங்கள் செயல்திட்டம் அமைய வேண்டும்.

மாற்றத்தை கவனியுங்கள்:

வேலை உலகம் தொடர்ந்து மாறிக்கொண்டே செல்கிறது. ஒரே தொழில்நுட்பம் அல்லது பொருள் வாடிக்கையாளரை கவருவதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகள், பயன்பாடுகள் அதிகரிக்கும்போது வேலைத்திறன்களிலும், திறமையை வெளிப்படுத்துவதிலும் உரிய பயிற்சி தேவைப்படுகின்றது.

நீண்ட கால இலக்கை நீங்கள் திட்டமிடும்போது இத்தகைய மாற்றங்களையும் கருத்தில் கொண்டு செயல்திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

உதவுபவர்களின் பங்கு:

உங்களது செயல்திட்டத்தை நிறைவேற்ற பலரின் உதவி தேவைப்படலாம். இதில் பெற்றோர்களின் பங்களிப்பு பொருளாதார ரீதியாகவும், தொடர்ந்து ஊக்கப்படுத்துவதன் மூலம் மனோரீதியான உதவியாகவும் அமையும். குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களின் ஆதரவும் ஆக்கப்பூர்வமாக இலக்கை அடைய உதவும்.

துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை, பயிற்சி பெறுவதற்கு துறை சார்ந்த தொழில் கூடங்களின் ஒத்துழைப்பு அகியவையும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. வங்கிக்கடன் பெற்று கல்வியை தொடர்ந்தால் வங்கியின் பங்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தேர்வு செய்யும்போது வெறும் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பது இயலாது. அனுபவ அறிவும், துறை சார்ந்த தகவல்களையும் ஒருங்கிணைத்து புரிந்து கொண்டு வழிநடத்துபவர்களின் ஆலோசனை முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு துறையிலும் ஆழமான அனுபவ அறிவுடையவர்களை இனங்கண்டு அவர்களின் ஆலோசனையை பெறுவதும் செயல்திட்டத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் இடர்பாடுகள் இல்லாமல் இலக்கை அடைய முடியும்.

பகுதி நேர வேலை வாய்ப்புகள்:

உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி, பகுதிநேர பணிவாய்ப்புக்கள் போன்றவையும் இலக்கை அடைய உதவியாக இருக்கும். இவை அடைய வேண்டிய இலக்கு சார்ந்த அனுபவ அறிவைப் பெற்றுத்தரும்.

சில சமயங்களில் அனுபவ ரீதியாக உங்களுக்கு பிடிக்காத துறையை தேர்வு செய்திருப்பதாக உணர்ந்தால் மீண்டும் இலக்கை மாற்றி அமைத்துக் கொள்ள இத்தகைய பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் உதவும். நீங்களே உங்களது திறமையையும், ஆர்வத்தையும் அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும்கிடைக்கும்.

பிறருடன் தொழில் சூழலில் எவ்வாறு நட்புறவுடன் பழகுவது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு பணியாற்றும்போது கிடைக்கும் ஊக்கத் தொகையையும் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பொருளாதார ரீதியாக திட்டமிடவும் உதவும்.

கால மேலாண்மை:

செயல்திட்டத்தில் நேர மேலா ண்மை மிக முக்கியமானது. கால மேலாண்மை என்பது நீங்கள் எவ்வாறு காலத்தை செலவிடுகின்றீர்கள் என்பதை குறிக்கிறது.

ஒரு வாரம் உங்களது செயல்களையும், அதற்கு நீங்கள் ஒதுக்கும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போதெல்லாம் பயன்படும் வகையில் நேரத்தை செலவழிக்கின்றீர்கள், எப்போதெல்லாம் வீணாக பொழுது போக்குகிறீர்கள் என்று அறிந்து அதற்கேற்ப கால மேலாண்மையை செய்யலாம்.

யார் என்ன சொன்னாலும் அதற்காக நேரம் செலவிடக்கூடாது. அது தேவையற்றதாக நீங்கள் உணர்ந்தால் கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். அதற்காக தயங்க வேண்டியதில்லை. முக்கியமான, தேவையான விஷயங்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள்.

ஒரு செயலை செய்ய வேண்டுமென்றால் உடனே செயலை தொடங்குங்கள். தள்ளிப்போட வேண்டாம். ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்க ஒரு கால வரையறையை நிர்ணயித்துக் கொண்டு செய்து முடிக்கப் பழகுங்கள். இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள், திட்டமிடுங்கள், செயல்படுத்துங்கள். வெற்றி நிச்சயம்!

ப.சுரேஷ்குமார்.

No comments: