Monday, May 31, 2010

இன்றைய பத்திரிக்கைச் செய்திகள்

மிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானங்கள் :

இலங்கையில் போர் முடிந்து ஏறத்தாழ ஓராண்டுக்கு மேல் ஆகியும் - இலங்கையில் தேர்தல்கள் நடைபெற்ற புதிய அரசு அமைந்த பின்னருங்கூட - போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பியும்கூட - சொந்த வீடுகளில் சென்று வாழ முடியாத நிலை இன்னமும் நீடித்துக் கொண்டிருப்பதும் - ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தடுக்கப்பட்டு இன்னமும் முகாம்களில் வாழக் கூடிய சோகமான நிலைமை தொடர்ந்து கொண்டிப்பதும் நமக்கெல்லாம் மிகுந்த வேதனையையும், கவலையையும் அளிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இன்னமும் தற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்தப் பகுதிகளுக்குச் சென்றும் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உடனடியாக அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் செய்துதரப்பட வேண்டும்.


சர்வதேசப் பரிமாணங்களை அடைந்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய தேவையைப் பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாயை இலங்கைத் தமிழர்களுக்காக முறையாகப் பயன்படுத்திடத்தக்க திட்ட வரைவுகளை இலங்கை அரசு செய்திட இன்னமும் முன்வரவில்லை என்பது வேதனையிலும் வேதனையானச் செய்தியாகும்.

எனவே இந்திய அரசு மனமுவந்து இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாயை உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காகப் பயன்படுத்திட; இலங்கை அரசை இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டுமென்று இந்த உயர்நிலை செயல் திட்டக்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் 73,572 இலங்கைத் தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறுகுடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் அனைவரும் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தீர்மானித்து, மத்திய அரசை ஏற்கனவே கேட்டுக் கொண்டும் இதுவரையில் மத்திய அரசு அதுகுறித்து தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுவதோடு இனியாவது இந்தப் பிரச்சினையில் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை கையாண்டு துயருறும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவிற்கு அகதிகளாகச் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 இலங்கைத் தமிழர்கள் மலேசிய அரசினால் சிறைபிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் சிறைபட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்றிட கருணை உள்ளத்தோடு முன்வர வேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments: