Wednesday, May 26, 2010

ஈஸ்டர் தீவு

ஈஸ்டர் தீவு ஒரு தனித்தீவு. அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா, மேற்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் மரபியல் நியதி (genetic code) வேறுபடும். அதன்படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ ஜெனடிக் கோட்டுடன் ஒத்துப்போனது பொலினேசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி இதுவாகும்.

இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின.

பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரானோ ரரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் (கற்சிலைகள்) செதுக்கப்பட்ட கற்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன. எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள்.

'மூதாதையர்களின் வாழும் முகங்கள்' இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மொவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்).

எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ, அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன, ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தார்கள். கூடவே மொவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது.

எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். கூடவே தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய அல்ல அடிமைகளாக. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது.

ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள். சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள். குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சகமனிதனின் வன்மம், தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது.

1 comment:

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com