Saturday, May 8, 2010

வழிகளும், வடுக்களும் உன் கேள்வியில்!

குழந்தைகள்...
 • இறைவனின் கரத்திலிருந்து ஊதி விடப்பட்ட நட்சத்திரத் துண்டுகள்.
 • குழந்தை வீட்டிற்குள் பறக்கும் விமானம். நம் உடம்பெல்லாம் அதன் ஓடுதளம்.
 • தரையில் தவழும் தங்கப்படகுகள், தளிர் நிலவுகள்.
 • ஆண்மையும் பெண்மையும் இணைந்து நடத்திய இரவுகளின் கண் விழிப்புகள்.
 • படுக்கையறைப் பள்ளிகள் வெளியிடுகிற ஆண்டு மலர்கள்.
 • கணவனும், மனைவியும் ஒரு குழந்தையைப் பிரசவிக்கிறார்கள். ஆனால் அந்தக் குழந்தை தான் தாய் தந்தை என்கிற புதிய இருவரைப் பிரசவிக்கின்றது.
 • குழந்தை பிறக்கும்போது அழுகிறது. அதுதான் அதன் முதல் தேடல். தொட்டிலிலிருந்து தூங்கி எழுகிறபோது அந்தப் பிஞ்சுக் கால்களின் சலங்கைச் சத்தம் அடடா... எவ்வளவு இனிமையானது! அதைவிட இனிமையானது அதன் மழலைச் சத்தம்.
 • மொத்தத்தில் குழந்தைகள் சொர்க்கம் தான் - குழந்தைகளாக இருக்கும் வரை.

பேசத்துவங்கும் குழந்தை உடனே கேள்வி கேட்கவும் துவங்குகிறது. கேள்விகளைப் பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும்.

கேள்விகள்.....

 • ஒவ்வொன்றும் இதய வாசலைத் திறக்கும் சாவிகள்.
 • கேள்விகள் முகவரி அட்டைகள். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகள் தானே சாக்ரடீஸ் என்ற தத்துவ ஞானியை உலகிற்கு அடையாளப்படுத்தின.
 • கேள்விகள் நடத்துகிற வேள்விகள்தான் "ஞானத்தை'' பரிசாகத் தருகின்றன.

கேள்விகள் விளக்குகள், இருட்டில் தானே விளக்குகள் வேண்டும். தெளிவிற்குத் தானே கேள்விகள் எழும். அதனால் கேள்விகள் வெளிச்ச விடைகளைத் தருகிற விளக்குகள். விடைகளிலிருந்தும் சில நேரங்களில் கேள்விகள் எழலாம். அதனால் கேள்வி கேட்பவர்கள் தொடர்ந்து பயணம் செய்கின்றவர்கள்.

கேள்வி இல்லாத மனிதர்களே இங்கு எவரும் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் நூற்றுக்கணக்கான கேள்விகள் பனிக்கட்டிகளாய் உறைந்து கிடக்கின்றன.

கேள்வி ஒரு சாவி... அதன் வழியாகத் திறக்கும் கதவுகளின் எண்ணிக்கை அதிகம்.

குழந்தைகளின் கேள்விகள் வியப்பானவை, விசித்திரமானவை.

ஒரு நிகழ்வு... முதல் முறையாக மழையைப் பார்க்கிறது ஒரு குழந்தை. அம்மாவிடம் கேட்கிறது -

"அம்மா, இது என்ன?''

"இது தான் மழை.''

"அப்படின்னா?''

"தண்ணீர்... சுத்தமான தண்ணீர் மேலிருந்து கொட்டுவது.''

"இது எங்கிருந்து வருது?''

"வானத்திலிருந்து வருது.''

"தண்ணி இங்கே கீழே தானே இருக்கு ... இது எப்படி வானத்துக்குப் போச்சு?''

"அது... கடல் இருக்குல்ல. அங்கே இருக்கிற தண்ணீர் சூரியனோட வெப்பத்தில் சூடாகி மேலே போய் மேகமாகிறது. மேகம் குளிர்ச்சியானதும் அது மழையாய்ப் பெய்யுது.''

"இந்த மாதிரி மேலே போயி கீழே வரணும்னு யாரு செஞ்சு வச்சாங்க?''

"இது இயற்கை.''

"இந்த இயற்கையை செஞ்சது யாரு?''

அது வரை பதில் சொன்ன அம்மா, அடுத்து பதில் சொல்ல திணறுகிறாள். குழந்தையின் புத்திக் கூர்மையைக் கண்டு 'என் செல்லமே' என்று தூக்கிக் கொஞ்சுகிறாள். மனசுக்குள் மகிழ்ச்சி மத்தாப்புகள் மலர்கின்றன, மகிழ்கிறாள்.

இப்பொழுது அப்பா கேட்ட இன்னொரு கேள்வி நிகழ்வு.

ஓர் அழகான தொட்டி. அதில் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஏராளமான மீன்கள் உற்சாகமாய் நீந்திக் கொண்டிருந்தன. தன் பையனை அழைத்து மீன்கள் நீந்திச் செல்லும் அழகைக் காண்பித்தார், அப்பா. வளைந்து நெளிந்து செல்லும் மீன்களை, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மகன்.

தந்தை மகனைப் பார்த்துக் கேட்டார் "இந்த மீன்கள் தண்ணீருக்குள் எப்படி உயிரோடு வாழ்கின்றது என்று தானே உனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று.

அதற்கு அவன் சற்று யோசித்து, "அப்பா வாழ்வதில் என்னப்பா ஆச்சரியம் இருக்கிறது? தண்ணீரில் வாழும் மீன் இந்தத் தண்ணீரிலேயே கொதித்துக் குழம்பாகி வாழ்வை முடித்துக் கொள்கிறதே, அதுதானப்பா ஆச்சரியம்!'' என்றான். மகனின் பதிலைக் கேட்ட அப்பா "அடடா!'' என்று ஆச்சரியப்பட்டார்.

இதுதான் குழந்தைகளின் கேள்விகளும், கேள்விகளுக்கான விடைகளும். குழந்தைகள் வளர வளர கேள்விகளின் எண்ணிக்கையும் விடைகளும் கூடிக் கொண்டே வருகின்றன.

விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகும் பயிற்சியை குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் கற்றுத் தந்தால்தான் ஆற்றலை முழுமையாக எட்டிப் பிடிக்கும். அப்படிக் கற்றுக் கொடுப்பவர்களே உன்னதமான பெற்றோர்கள்.

"ஒவ்வொரு மனிதனும் நான்குமுறை பிறக்கிறான்'' என்பார் சிந்தனையாளர் இறையன்பு. கருவாகும் போது முதற்பிறப்பு, கருவறை விட்டு வெளியேறும்போது இரண்டாம் பிறப்பு. தன்னை உணர ஆரம்பிக்கும் போது மூன்றாம் பிறப்பு, உணர்தலில் அடைவது நான்காம் பிறப்பு.

முதல் பிறப்பில் குழந்தை எதுவுமே தேட வேண்டியதில்லை. இரண்டாவது பிறப்பு என்பது வெளியே தேடத் தொடங்குவதன் ஆரம்பம். மூன்றாவது பிறப்பு உள்ளே தேடத் தொடங்குவதன் தொடக்கம். நான்காவது பிறப்பு தேடல் முற்றுப் பெற்றதன் அடையாளம்.

முதலிரண்டு பிறப்புகள் குழந்தைப் பருவத்திற்குள் அடங்கி விடுகிறது. மூன்றாவது பிறப்பு கூட்டுப் புழுவாக அவர்கள் கூம்புகிற பருவம். இதுதான் இன்றியமையாத இளமையின் பருவம்.

கேள்விகளால் விழிகளை வியக்க வைத்த குழந்தை வளர்கிறது. வாலிபத்தின் வாசலை அடைகிறது. அப்போதும் கேள்விகள் எழுகின்றன. எப்படித் தெரியுமா?

என்னை ஏன் ஒருத்தர் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க?
என்னைப் பத்தி என்னதான் நீங்க நினைச்சுக்கிட்டிருக்கீங்க?
என்னை ஏன் மதிக்கிறதே இல்லை?

இப்படி வாழ்க்கை ஏற்படுத்துகிற வலிகளிலிருந்து கணக்கற்ற வினாக்கள் மூன்றாம் கண்ணிலிருந்து பட்டுத் தெறிக்கிற நெருப்புச் சுடராய்த் தெறிக்கின்றன. இந்தக் கேள்விகள் இப்படியிருக்க, இன்னும் சிலரின் கேள்விகளோ...

நானா படிக்கிறேன்னு சொன்னேன்?
என்னை எதுக்காகப் படிக்க வச்சீங்க?

இப்படி அடுக்கடுக்காய்க் கேட்டு விட்டு கடைசியில்

என்ன எதுக்காகப் பெத்தீங்க?

இவையெல்லாம் பெற்றோர்களை நோக்கியே கேட்கப்படுகிற கேள்விகள். ஈட்டியாய்ப் பாய்கிற இந்தக் கேள்விகளைப் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்டிருப்பார்கள்.

பள்ளியிலோ கல்லூரியிலோ சேர்ந்த முதல் நாளன்று நீ என்னவாகப் போகிறாய்? என்று ஆசிரியர்கள் கேள்வி கேட்கிறபோது மகிழ்ச்சியோடு நான் டாக்டராகப் போகிறேன். நான் என்ஜினியராகப் போகிறேன். நான் கலெக்டராகப் போகிறேன் என்று சொல்லி கைதட்டு வாங்கியவர்கள்தான் இன்று இப்படிக் கேட்கின்றார்கள்.

படித்து முடித்து பட்டம் வாங்கியதும் பண்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டிய இளைஞர்களுக்கு இன்றைக்கு என்ன ஆனது? எனக்குள்ளும் கேள்விகள் எழுகின்றன.

வேலை கிடைக்காத நிலையை விட தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைதான் இந்த வினாக்களுக்கெல்லாம் காரணம்.

அன்பிற்கினிய இளைஞர்களே, ஒன்றை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள். வேலை என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்ல. சில வேளைகளில் நாமே உண்டாக்கிக் கொள்ள வேண்டியதுதான். எப்போதும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

நினைத்தது கிடைக்கவில்லை என்பதற்காக இந்தக் கேள்விகளா? அதையும் யாரைப் பார்த்து. வயிற்றில் சுமக்கும் போதே உங்களுக்காக சுவாசித்த அம்மா. புதையலைப் போல் பொத்திப் பொத்தி வளர்த்த அப்பா. இவர்களைப் பார்த்தா?

இளைய இளைஞர்களே. வார்த்தைகள் வலிமையானவை. படித்த கதையொன்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"மகனே, நீ மற்றவர்களை அதிகம் காயப்படுத்திப் பேசுகிறாய். குறைத்துக் கொள்ள வேண்டும்.''

"எப்படியப்பா?''

"நீ எவரையும் காயப்படுத்திப் பேசி விட்டால் ஒவ்வொரு முறையும் உடனே வீட்டின் முன்புறம் உள்ள மரத்தில் ஒரு ஆணி அடி.''

"சரிப்பா.''

வெகு சீக்கிரத்தில் அந்த மரம் முழுக்க ஆணிகள்.

மகன் பதறிவிட்டான். "அப்பா இப்ப என்ன செய்யுறது? எனக்கு அந்த மரத்தைப் பார்க்கவே பிடிக்கலை!''

தந்தை ஓர் ஆலோசனை கூறினார்.

"யார் யாரை நீ காயப்படுத்திப் பேசினாயோ அவர்களிடம் நல்ல விதமாகப் பேசு. அப்படி நீ பேசி விட்டால் ஒரு ஆணியை அகற்றி விடலாம்.''

இந்த ஆலோசனை வேலை செய்தது. மகன் மகிழ்ச்சியோடு ஓடினான். கோப்பட்ட எல்லோரிடமும் நல்லவிதமாகப் பேசினான். ஆணிகளும் குறைந்தன. மனபாரமும் குறைந்தன.

கதை முடிந்து விட்டது என்று நினைக்கிறீர்களா? இல்லை. ஆணிகள் முழுக்கவும் அகற்றப்பட்ட பின் துள்ளிக் குதித்து அப்பாவை அழைத்துப் போய் மரத்தைக் காட்டினான். அவர் அவனை மிகவும் பாராட்டினார். பின்பு அவனது பிஞ்சுக் கைகளைப் பிடித்து ஆணிகளை அகற்றிய இடங்களில் மரத்தில் வைத்து அழுத்தினார்.

'இப்ப எப்படி இருக்கு?'

மகனின் முகம் மாறியது. தந்தை அவன் தோள் மீது கையைப் போட்டுப் பேசினார். "ஆணிகளை நீ பிடுங்கியிருக்கலாம். ஆனால், அதனுடைய தழும்புகள் மறையாது''.

இது தான் கதை.

இனிய இளைஞர்களே, கேள்விகளால் உங்களைப் புண்படுத்திவிட்டேனா? புண்கள் ஆறிவிடலாம். ஆனால் தழும்புகள் ஆறாதது என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். சில கேள்விகள் நெருப்பாய் தகிக்கக் கூடியவை. காயங்களை ஏற்படுத்தக் கூடியவை. இனியேனும் கேள்விகளையும் வார்த்தைகளையும் கவனமாய்க் கையாளுங்கள். ஏனென்றால் அவை வலிமையானவை. அவற்றிலிருந்து நல்ல வழியும் பிறக்கும் சில நேரங்களில் வடுக்களும் உண்டாகும் .


பேராசிரியர்
க. ராமச்சந்திரன்

No comments: