Monday, May 3, 2010

ஓட்டம்... ஓட்டம்...

எவர் பின்னாவது, எதன் பின்னாவது ஓடுவதே இன்றைய வாழ்க்கையின் எழுதாத விதியாக இருக்கின்றது. இந்த ஓட்டத்திலிருந்து விலகிவிட்டால் பந்தயத்தில் தோற்றுப்போய் விடுவோமோ என்கிற அச்சம் பலருக்கும் பரவலாக இருக்கிறது.

வாழ்க்கையே ஒரு பந்தயமாக மாறிவிட்டதன் மோசமான எதிரொலி இது. அதனால் நம்மைச் சுற்றியுள்ள இயற்கையின் காட்சிகளையும் அதன் அழகினையும் காணமறந்து விட்டோம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கோடை விடுமுறை விடுவதன் நோக்கமே நம்மைச் சுற்றி யுள்ள இயற்கையையும், உறவுகளையும் பார்த்து மகிழ்ந்து மனதைப் புதுப்பித்துக் கொள்வதற்காகத்தான்.

காட்சிகளின் வழி படிமம் சார்ந்த கற்பனை உருவாகும். வளரும் இளைய தலைமுறையிடம் கற்பனை வளம் குறைந்து போனதற்கும், மனித நேயம் மறைந்து கொண்டிருப்பதற்கும் இன்றைய வாழ்க்கைக் கோட்பாடுதான் காரணம்.

இந்தப் பூமி ஆனந்தத்தின் எல்லை. இரவின் தனிமையிலிருந்து இமைகளின் திரைகளை விலக்குகிறேன். விழிகளின் வெளிச்சத்தில் புதிய விடியலைப் பார்க்கிறேன். அடடா... அதிகாலை நேரம் எவ்வளவு ஆனந்தமான நேரம்!

அழகிய பெண்களின் கன்னங்களைப் போல் சிவந்திருக்கும் பூக்கள். பூக்களில் தேன் எடுக்கும் ஈக்கள். பசுமை போர்த்தியிருக்கும் புல்வெளிகள். மகரந்தங் களைச் சுமந்து வரும் தென்றல் காற்று. சல சலத்து ஓடும் ஆறுகள்... ஆறுகளில் நீந்தி விளையாடும் மீன்கள். மண்ணில் கால் பரப்பி விண்ணைத் தொட நினைக்கும் உயர்ந்த மரங்கள். மரங்கள் நிறைந்த சோலைவனங்கள். வனங்களில் விளையாடும் விலங்கினங்கள். சிறகுகளை விரித்து வானத்தில் பறக்கும் பறவைகள். இவற்றின் ஊடே பொன்னிறக் கதிர்களால் பூமியைத் தொட்டு எழுப்பும் சூரியக் கதிர்கள்... அடடா அழகு. பூமியெங்கும் இயற்கையின் அழகு.

நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்
நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை

என்பார் 'அழகின் சிரிப்பில்' வசப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன்.

அழகு ஆராதனைக்கு உரியது மட்டுமல்ல வாழ்க்கையையும் அதுதான் அழகுபடுத்துகிறது. வாழ்க்கை முரண்களால் ஆனது. இரவு-பகல், இன்பம், துன்பம் இப்படி முரண்பாடுகளால் ஆனது. இவற்றுள் ஒன்று இல்லையேல் இன்னொன்றை ரசிக்க முடியாது.

மலருக்கு அழகைக் கொடுத்த இயற்கை முள்ளுக்கு உறுதியைக் கொடுத்தது. அழகு மென்மையானது. அதனாலேயே அது சீக்கிரம் வாடி உதிர்ந்து விடுகிறது. முள் உறுதியானது. அதனாலேயே அது அதிக நாள் வாழ்கிறது. மென்மை வன்மை இரண்டும் வாழ்க்கைக்குத் தேவை. அழகான மலர் மகிழ்ச்சியைத் தருகிறது. உறுதியான முள் பாதுகாப்பைத் தருகிறது.


வாழ்க்கை இதுதான். ஒரு முள் செடியும் ஒரு அழகான பூச்செடியும் பேசிக்கொண்டன.

"என்னைப் பார். நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் பார். என் மேனி முழுவதும் எவ்வளவு மினு மினுப்பு. சூரிய ஒளி பட்டதும் எப்படி ஜொலிக்கிறேன். அப்பப்பா...'' அழகு பூச்செடி இவ்வாறு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆடுவந்து மேய்ந்து விட்டுப்போனது. முட்செடி மட்டுமே மிஞ்சியிருந்தது.

அழகு ஆராதனைக்கு உரியதுதான். ஆனால் ஆணவம் மிகுந்த அழகு ஆபத்துதான். செடிக்கு மட்டுமல்ல. வாழ்க்கைப் பயணத்திலும்தான். இதுதான் அழகு கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம்.

அப்படியானால் அழகின் இலக்கணம்தான் என்ன?

ஒரு நாள்.... இரவு நேரம், ரவீந்திரநாத் தாகூர் ஆற்றில் படகு வீட்டில் இருந்தார். இப்படி அங்கே இருந்து கொண்டு படிப்பது, சிந்திப்பது அவருக்குப் பிடித்தமானது.

அன்று, எது அழகு என்பது பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். அதற்காகப் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அழகு மட்டும் அகப்படுவதாயில்லை.

புத்தகத்தை மூடினார். எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைத்தார். மெழுகுவர்த்தி அணைந்ததும் சட்டென்று நிலா வெளிச்சம் படகு வீட்டிற்குள் பரவத் தொடங்கியது. பரவசமானார்.

இதுதான் அழகின் அழைப்பா? அவர் வெளியே வந்தார். என்ன அற்புதமான காட்சி! நிலா ஒளியில் நதி நீர் வெள்ளியாய் மின்னிக் கொண்டிருந்தது. எங்கும் அமைதி. தூரத்திலிருந்து மெல்லியதாய்க் குயில் கூவியது. இப்போது அழகு என்பது என்ன என்று தாகூருக்குப் புரிந்து விட்டது.

அவர் அழகை தரிசித்துவிட்டார். உலகம் அழகால் ஆனது. ஒவ்வொரு படைப்பும் அழகு. ஆனால் நாமோ அழகைப் பார்ப்பதில்லை. அழகு என்றால் ஏதோ ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

நமக்கும் பார்க்கும் பார்வை இருந்தால் அழகை எதிலும் தரிசிக்கலாம். அழகு வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறது. அழகு வாழ்க்கையை சுத்தப்படுத்துகிறது. அழகு வெறும் ஆனந்தம் மட்டுமல்ல. அது ஒரு போதிமரம். அதனடியில் அமர்ந்து தரிசிப்பவன் ஞானம் அடைகிறான்.

தமிழ்க் கவிதையில் ஒரு புதிய வடிவம் ஹைக்கூ கவிதை. இது ஜப்பானியக் கவிதை வடிவம். பெரும்பாலும் இயற்கையை உள்ளடக்கமாகக் கொண்டது. மூன்று வரிகளால் ஆனது. ஜப்பானியக் கவிஞர் பாஷோவின் ஒரு புகழ் பெற்ற கவிதை.

இந்த வண்ணக் கிண்ணத்தில்

மலர்களை வைப்போம்

அரிசி தான் இல்லையே!

மூன்றாவது வரி அதிர்ச்சியைத் தருகிற வரி. இது தான் இந்தக் கவிதையின் சிறப்பு. அரிசி வைக்கிற கிண்ணம்தான். அரிசி இப்போது இல்லை. அதனால் என்ன? கிண்ணத்தை காலியாக வைத்திருப்பதைக் காட்டிலும் அதில் ஏதாவது வைத்து அடைகாப்பதைக் காட்டிலும் பூக்களை நிரப்பி வைக்கலாம் என்கிறார் கவிஞர். யதார்த்தமான வாழ்வின் அவலங்களையும் அதையும் தண்டிய அழகியல் உணர்வுகளையும் சித்திரிக்கின்றது இக்கவிதை.

இயற்கையின் இத்தகைய அழகியல் சர்ந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டால் சில சமயங்களில் பிரச்சினைகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளலாம். அழகு என்பது நமக்குள் இருக்கும் ஒரு வடிவம். ஒவ்வொருவரும் அழகான மனநிலையை வளர்த்துக் கொள்ள முடியுமானால் உடலையும் அழகுடன் வைத்துக் கொள்ளலாம்.

அழகான காட்சிகள், சிந்தனைகள் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடையும்படி செய்கின்றன. மேகங்களைத் துளைத்துக் கொண்டு வானில் உலா வரும் நிலாவைக் காணுகிறபோது ஒரு கணப்பொழுதில் வருத்தத்தை, மூளைச் சோர்வை, தசைகளின் தளர்ச்சியை தளர்த்தி விடுகின்றது.

ஷேக்ஸ்பியர் சொல்லுகிறார், "கடவுள் உனக்கு ஒருமுகத்தைத்தான் கொடுத்திருக்கிறார். இன்னொன்றை நீ தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்'' என்று. அந்த இன்னொரு முகத்தை உழைப்பும் அதன் வழி கிடைக்கும் வெற்றியும்தான் தருகிறது. நம்பிக்கையோடு ஒரு செயலைச் செய்கிறபோது அழகு தானாகவே வந்து சேர்கிறது.

இப்போது ஒரு கல் சிலையாக உருவான நிகழ்ச்சி...

நாம் ஒவ்வொருவரும் ஒரு கல். அந்த ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஓர் அழகான சிற்பம் இருக்கிறது. நாம் உளிகளின் அடிகளைத் தாங்கத் தயாராக இருந்தால் தான் அந்த அழகான சிற்பம் வெளிப்படும்.

ஒரு ஊரில் ஓர் அழகான சிலையைச் செதுக்கியிருந்தார்கள். சிலைக்கு தினந்தோறும் மாலைகள் அணிவித்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது ஒரு ஞானி, தன் பக்கத்தில் இருந்த சீடர்களைக் கூப்பிட்டு "இந்தச் சிலையும் சரி இதை அடைய ஏறிச் செல்லும் படிகளும் சரி. இரண்டுமே கற்கள் தான். ஆனால் சில கற்கள் படிக்கட்டுகளாகவும். ஒன்று மட்டும் சிலையாகவும் மாறக் காரணம் என்ன?'' என்று கேட்டார்.

அவர்கள் அனைவரும் மௌனமாக இருந்தார்கள். ஞானி தொடர்ந்தார். உளி கொண்டு செதுக்கும் போது சில அடிகளிலேயே உடைந்து விடும் கல் படிக்கல்லாகிறது. காரணம் அதன் உறுதியின்மை. எவ்வளவுதான் அடித்தாலும் அடிகளைத் தாங்கிக் கொண்டு சிலையாகும் வரை பொறுமையாக இருக்கும் கற்கள் சிலையாக உருமாறுகிறது.

ஆரம்ப சோதனைகளிலேயே மனம் உடைந்து விரக்தியடைந்தவர்கள் இப்படித்தான் பலரும் மிதித்துச் செல்லும் படியின் நிலையில் இருக்கிறார்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருப்பவர்கள் இந்தச் சிலையைப் போல் போற்றப்படுகின்றார்கள் என்று விளக்கினார் ஞானி.

குறிக்கோள் இருக்கும் வாழ்க்கைதான் அழகாகிறது. குறிப்பாக இளமையின் அழகு என்றும் அழகானது. இளமை என்பது என்ன?

வாழ்வின் நிறைவை நோக்கிப் பயணம் செய்வதை நிறுத்தாதவர் எவரோ அவரே இளமையானவர். அவர் இருபது வயது நிரம்பியவராக இருக்கலாம். அல்லது அறுபது வயதைத் தாண்டியவராக இருக்கலாம். நிறைவை நோக்கிப் போகிற முயற்சிதான் இளைஞர்களின் வாழ்க்கை. அந்த வாழ்க்கைதான் வாழ்வதை அர்த்தப்படுத்தும். அழகுபடுத்தும்.

இந்த வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களே, ஆரம்பத்தில் நிறத்தின் அழகு உங்களை ஈர்க்கிறது. அது சிறிது காலம்தான். குணநலன்கள்தான் முக்கியமானது என்று உணர்கிற போது உள்ளுக்குள் இருக்கும் அழகு வெளிப்படுகிறது. அழகை நேசிக்கும் குணத்தை வளர்த்துக் கொண்டு வழியெல்லாம் அழகின் விதைகளை விதைத்துக் கொண்டே சென்றால் இந்த பூமி எவ்வளவு இன்பமயமாக மாறும்!

பேராசிரியர்.க.ராமச்சந்திரன் 

2 comments:

soundarapandian said...
This comment has been removed by the author.
VAAL PAIYYAN said...

VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com