Friday, April 23, 2010

இன்று ....

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் 

வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம்  (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.

யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
  • நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு (International Federation of Library Associations and Institutions)
  • அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் (International Publishers Association)
  • உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ் (Miguel de Cervantes), வில்லியம் ஷேக்ஸ்பியர், இன்கா டி லா வேகா (Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.

இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென்.ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள்.


****************************
புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்ட நாள்  


புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும். இது, 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான சென்னையில் கட்டப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.

1600 ஆம் ஆண்டில் வணிக நோக்குடன் இந்தியாவுக்குள் நுழைந்த பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனி சூரத்தில் அனுமதி பெற்ற வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதன் வணிகக் கப்பல்களையும், வாசனைப் பொருள் வணிகத்தில் அவர்களுடைய நலன்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, மலாக்கா நீரிணைக்கு அண்மையில் துறைமுகம் ஒன்றின் தேவையைக் கம்பனியினர் உணர்ந்தனர். மேற்குக் கடற்கரைப் பகுதியில் மதராஸ்பட்டினம் அல்லது சென்னபட்டினம் என அழைக்கப்பட்ட ஒரு நிலப்பகுதியை அவர்கள் அப்பகுதித் தலைவர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அதிலே ஒரு துறைமுகத்தையும், கோட்டை ஒன்றையும் கட்டத் தொடங்கினர். கோட்டை புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு புனித ஜார்ஜ் கோட்டை எனப் பெயரிடப்பட்டது. கடலையும், சில சிறிய மீனவர் ஊர்களையும் நோக்கிக் கொண்டிருந்த இக் கோட்டைப் பகுதி விரைவிலேயே வணிக நடவடிக்கைகளின் ஒரு மையமானது. இக் கோட்டை, இப் பகுதியிலே ஜார்ஜ் டவுன் என்னும் புதிய குடியேற்றப் பகுதி உருவாகக் காரணமாயிற்று. இது அங்கிருந்த ஊர்களையெல்லாம் தன்னுள் அடக்கி வளர்ந்து சென்னை நகரம் உருவாக வழி வகுத்தது. இது கர்நாடகப் பகுதியில் பிரித்தானியரின் செல்வாக்கை நிலை நிறுத்தவும், ஆர்க்காடு மற்றும் ஸ்ரீரங்கப்பட்டின அரசர்களையும், பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரரையும் கண்காணிப்பில் வைத்திருக்கவும் உதவியது.

6 மீட்டர் உயரமான சுவர்களைக் கொண்டிருந்த இக் கோட்டை, 18 நூற்றாண்டில் இடம்பெற்ற பல தாக்குதல்களைச் சமாளித்தது.

**********************************
சத்யஜித் ரே

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர்  சத்யஜித் ரே. இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை.

இன்று இவரின் 18 வது நினைவு நாள்.

No comments: