Saturday, April 17, 2010

வேரின் உழைப்பு; செடியின் சிரிப்பு !

வகுப்பறை . . .
எதிர்காலச் சமுதாயம் கூர் தீட்டப்படும் பயிற்சிப் பட்டறை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓசையில்லாமல் ஆற்றல்கள் பல உறங்கிக் கிடக்கின்றன. அதனைத் தட்டி எழுப்புகிற வகையில் செய்யப் படுகின்ற பணி ஆசிரியப் பணி. அதனால் தான் ஆசிரியப் பணி `அறப்பணி` என்று போற்றப்
படுகின்றது.

ஒருநாள் பாடத்திட்டத்தோடு, கவிதை எழுதுவது எப்படி? என்ற பயிற்சி வகுப்பை நடத்திக் கொண்டிருந்தேன். கவிதை என்பது அளவில் இல்லை, ஆழத்தில் இருக்கிறது. ஒரு ஒற்றை வரி கூட அழகான கவிதையாகாலாம். எடுத்துக்காட்டாய் 'மழை' என்ற தலைப்பு. ஒற்றை வரியில் சொல்வதனால் "மேகம் பூமிக்கு அனுப்புகிற தாய்ப்பால்'' என்று எழுதலாம் என்றேன்.

சரி, இப்பொழுது உங்களுக்கான ஒரு தலைப்பு, 'பூ'. இதற்கு ஒற்றை வரிக் கவிதை சொல்லுங்கள் என்றேன்.

"பூ செடியின் சிரிப்பு'' என்று ஒரு மாணவர் சொன்னார். அடடா! அழகாக இருக்கிறதே! என்று பாராட்டினேன்.

எனக்குள் சிந்தனைச் சிறகுகள் விரிந்தன. பூத்துக் குலுங்கும் பூக்களைக் கண்டால் புன்னகைத்து நிற்பேன். குறிஞ்சிப் பூக்களை மட்டுமல்ல நெருஞ்சி மலர்களையும் ரசிப்பேன். தெருவோரம் பூக்கும் பூக்களில் கூட புன்னகை உண்டு. நூறு வருடம் வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே பிறக்கிறான். சில நாட்களே வாழப் போகும் பூக்கள் சிரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுதான் பூக்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கிற வாழ்க்கைப் பாடம். மரணத்தின் வாசல்படிகளில் இருக்கும்போதும் மகிழ்ச்சியான மணத்தை பிறருக்குத் தந்து கொண்டே இருக்கின்றன பூக்கள். அவை போதி மரமாய் ஞானத்தைத் தருகின்றன.

செடி எப்படி சிரிக்கின்றது?

வேரின் உழைப்பு தானே செடியின் சிரிப்பு! வேதனை வேர்கள் பூக்கும் போதுதானே சாதனை மலர்கள் சாத்தியமாகின்றன.

அதோ! ஓர் ஆலமரம். பூமிக்குள் விழுதுகளை அனுப்பி திசையெங்கும் கிளைகளைப் பரப்பி காலங்காலமாய் விரிந்து நிற்கிறதே. எப்படி?

பூமியைக் கீறி, வேர்களைத் திசையெங்கும் பரப்பி நீரைத் தேடிய அந்த வேர்களின் விடாப்பிடியான உறுதிதானே அதன் வளர்ச்சிக்குக் காரணம்? அந்த வேர்கள் உழைக்க மறுத்திருந்தால் இந்த மரம் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்குமா! அதோ வளர்ந்திருக்கிறதே செடி. அந்தச் செடிகளில் பூக்கள்தான் பூத்திருக்குமா?

உழைப்புதான்... எல்லாமே உழைப்புதான். வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லோருமே உழைத்தவர்கள்தான். உழைத்தவர்கள் எல்லோருமே உயர்ந்தவர்கள்தான்.

உழைப்பில் ஒரு சுவை இருக்கிறது. அதை அனுபவித்தவர்கள் ஒரு போதும் சோம்பேறியாக இருந்ததில்லை. இருப்பதில்லை. வியர்வை வெளியேறுகிறபோது உடம்பு குளிர்ச்சி அடைகிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. பணி நிறைவடைகிறபோது உண்டாகும் அழகிய பொருள்களால் இதயம் நிரம்புகிறது. உழைப்பின் உன்னதம் இதுதான்.

ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-


கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன்.

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.

இப்படியே நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

இனிய இளைஞனே! எல்லையில்லா ஆற்றல் பெற்றவனே! இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம். பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும். எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். உழைத்து உருகும் மேகமே மழையாய்ப் பொழியும். உருகா மேகம் புகையாய்ப் படியும்.

"மின்மினிப் பூச்சிகள் பறக்கும் போதுதான் சுடர் விடுகின்றன. அதுபோல் மனிதனும் உழைக்கின்ற போதுதான் வெற்றியின் விலாசத்தை அடைகின்றான்" என்பார் அறிஞர் பெய்லி.

வெற்றியைப் பெற உழைப்பைச் செய்யுங்கள். பத்து விரல்களையும் மொத்தமாய்ச் சேர்த்து உவகையுடன் உழைத்தால் வெற்றி தானே தேடிவரும்.

வேர்கள் மண்ணிற்குள் புதைந்திருப்பதற்காக வருந்துவதில்லை. வேர்களின் சந்தோசம் கிளைகளின் சலசலப்பு. இனியும் தாமதிக்காமல் எங்கெங்கே நீர் உள்ளதோ அங்கெல்லாம் உங்கள் வேர்கள் நீளட்டும். தேடலே உங்கள் வேர்கள். உங்களின் தாகமே வேர்களுக்கு வழிகாட்டும். பாறைகளையும் பிளந்து செல்லும் சக்தி வேர்களுக்கு உண்டு.

"வெள்ளத்தனைய மலர் நீட்டம்'' என்பார் வள்ளுவப் பெருந்தகை. ஆழத்தில் இறங்குங்கள், நீங்கள் எவ்வளவு ஆழங்களில் இறங்குகின்றீர்களோ, அவ்வளவு உயரமாய் வளருவீர்கள்.

No comments: