Monday, April 12, 2010

உன் கதையை நீ எழுது!

தாகூர்...
புகழ் பெற்ற நோபல் பரிசு படைப்பான 'கீதாஞ்சலி'யை எழுதியவர். அந்தப் படைப்பில் ஓரிடத்தில், 'மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டுகிறபோது நீ என்ன செய்வாய்?' என்று கேட்பார். அதற்கு அவரே, 'வெறுங்கையோடு நான் அனுப்ப மாட்டேன். தட்டு நிறைய என் வாழ்க்கையை பரிமாறித் தருவேன்' என்று கூறி இருப்பார்.
இதுதான் வாழும் வாழ்க்கை. பயனுள்ள வாழ்க்கை. என் இனிய இளைஞனே, வாலிப தேசத்தின் வாசல்படிகளில் பயணித்துக் கொண்டிருப்பவனே வாழ்க்கை என்பது வட்டமடிப்பதல்ல என்பதை எப்போது நீ உணரப் போகிறாய்? நீ முத்துகள் நிறைந்த சமுத்திரம். ஆனால் நீயோ கிளிஞ்சல்களைப் பொறுக்க அலைந்து கொண்டிருக்கிறாய்.
டிக்... டிக்...டிக்... என்று ஒலிக்கும் கடிகாரத்தின் ஓசை என் காதுகளில் கேட்கிறது. உன் காதுகளிலும் ஒலிக்கலாம். இது கடிகாரத்தின் ஓசை மட்டுமல்ல. காலத்தின் ஓசை. காலனின் காலடி ஓசை. கடிகாரத்தின் ஓசையை நிறுத்தி விடலாம். ஆனால் நம் ஆயுள் கொஞ்சம் கொஞ்சமாய் உதிரும் காலனின் கைத்தடி ஓசையை யாராலும் நிறுத்த முடியாது.

இது வாழ்க்கையின் விதி. இதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இடை விடாது நகர்ந்து கொண்டிருக்கின்ற வாழ்வில் இளமைப் பருவம் மதிப்புமிக்க பருவம். உன்னை நீயே தேடிக் கொள்கிற இனிய பருவம்.
நீ பெற்றிருக்கின்ற உடல் உன் பெற்றோர் இட்ட பிச்சை. உன் சுவாசம் காற்றிடம் கடன் வாங்கியது. பசித்தபோதெல்லாம் மேகம் பூமிக்கு அனுப்பிய தாய்ப்பாலாம் தண்ணீரை குடித்தாயே, எப்போதாவது இதற்கு விலை கொடுத்திருக்கிறாயா? இல்லை அன்னை தெரசாவைப்போல் "இந்த பூமிக்கு நாம் செய்கிற தொண்டுதான் வாடகை'' என்று வாடகையாவது தந்திருப்பாயா? என்ன உறவு உன் உறவு? மரணக் காற்றில் அணைந்து போகும் அகலா?
விளக்கைப் போல் நீ அணைந்து போய்விடாதே. ஓர் ஊதுவத்தியைப்போல் கொஞ்சம் நறுமணத்தை இந்தப் பூமிப் பந்தில் சுழலவிட்டுப் போக வேண்டும்.
கலில் ஜிப்ரான்
"ஒரே ஒரு முறை நான் ஊமையாகிப் போனேன், நீ யார்? என்று என்னை ஒருவன் கேட்டபோது'' என்பார் கலில் ஜிப்ரான்.
அன்பான இளைஞனே. உன்னையும் ஒரு சுட்டுவிரல் நீட்டி நீ யார்? என்று கேட்கிறபோது ஊமையாகி நின்றுவிடாதே. தாகூரைப்போல் இந்தா என்று உன் வாழ்க்கையை அடையாளப்படுத்து. உன் அடையாளத்தை உன் முகவரியை நீ தான் எழுதியாக வேண்டும்.
மகான் ஸ்ரீரமண மகரிஷியின் 'நான் யார்?' என்ற வார்த்தை மிகப் பிரசித்தி பெற்ற வார்த்தை. உடல் என்கிறபோது இதை என் உடல் என்கிறோம். மனம் என்கிறபோதும் இது என் மனம் என்கிறோம். உயிர் என்கிற போதும் இது என் உயிர் என்கிறோம். அப்படியானால் இந்த 'என்' என்பது எதைக் குறிப்பிடுகிறது? இந்தத் தேடல்தான் அவரை ஆன்மீகத் தடத்தில் பதிவு செய்தது.
இவரைப்போல் உனக்குரிய இலக்கு எது என்பதை அறிந்து அதை நோக்கிய பயணத்தில் பயணப்படு. "தடம் பார்த்து நடப்பவர்கள் மனிதர்கள், தடம்பதித்து நடப்பவர்கள் மாமனிதர்கள்''.
தன் மீது மூடிய மண்ணை கீறிக் கொண்டு முட்டி மோதி விதைக்குள் இருந்து வெளி வருகிற விருட்சத்தைப் போல உனக்குள்ளிருந்துதான் நீ வெளியே வர வேண்டும்.
விரும்பினால் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கற்கலாம். ஆர்வமில்லாவிட்டால் அடுத்த அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது. இதோ ஒரு கதை-
சீன தேசத்தில் ஓர் அரசர். மாட்டு மாமிசம் அவருக்கு மிக மிக இஷ்டம். அவரே தினந்தோறும் மாட்டைத் தேர்ந்தெடுப்பார். அந்த மாட்டை தினமும் ஒரே வெட்டில் கோடாரியால் வெட்டிவிடுவார் கிடைபோடுபவர். தலைவேறு உடல் வேறு என இரண்டாகிவிடும். எந்த மாட்டையும் அவர் மறுமுறை வெட்டியதாக வரலாறே இல்லை.
அரசருக்கு ஒரே ஆச்சரியம். 'இந்தக் கோடாரியை தினந்தோறும் சாணை பிடிப்பாயா?' என்று கேட்டார்.
'இல்லை. சரியாக வெட்டுகிற பாணியில் வெட்டினால் கூர் மங்காது' என்றார்.
'அது என்ன, சரியான பாணி?' என்றார் அரசர்.
'முதல் நாள் இடது கை பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். அடுத்த நாள் வலது பக்கமாகச் சரித்துக் கொண்டு வெட்டுவேன். இப்படி மாறி மாறி வெட்டுவதால் இரு பக்கமும் சமமான கூர்மையுடன் இருக்கும். அது மட்டுமல்ல. வெட்டுகிறபோது கொடுக்கிற அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். அதனால் இடது வலது என்று மாறி மாறி வெட்டினால் கூர் தீட்டப்பட்ட மாதிரி ஆகிவிடும்'.
மாட்டை வெட்டுபவரிடம் 'இந்தக் கலையை எனக்குக் கற்றுத்தர முடியுமா?' என்று கேட்டார் அரசர்.
'மகாராஜா, அது என்னால் முடியாது. காரணம் எனக்கு யாரும் இதைக் கற்றுத் தரவில்லை. என் தாத்தா வெட்டும்போது தள்ளி நின்று பார்த்தேன். என் தகப்பனார் வெட்டும்போது அருகில் நின்று கவனித்தேன். அவர்கள் யாரும் எனக்கு எதையும் சொல்லித் தரவில்லை' என்றார்.
அரசர் அதற்கு அப்புறம் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் ஒன்றை உறுதியாகத் தெரிந்து கொண்டார். எதுவும் உள்ளிருந்து வர வேண்டும் என்பதுதான் அது.
இனிய இளைஞனே! காட்சிகளை மறந்து விடு. கருத்தை மட்டுமே எடுத்துக் கொள். இரவல் அறிவு எப்போதும் பயன்தராது.
முகம் பார்க்கும் கண்ணாடி ஓர் அற்புதக் கண்டுபிடிப்பு. அது மட்டும் இல்லையென்றால் நம் முகம் அழுக்காக இருப்பதை ஒரு போதும் அறிய மாட்டோம். உனது செயல்களை எடுத்துக் காட்ட கண்ணாடி அவசியம். சில வேலைகளில் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டும் கண்ணாடியாக ஒரு மூன்றாவது நபர் கிடைப்பதுண்டு. ஆனால் அது சரியான முறை அல்ல. நீங்களே உங்களை கண்ணாடியாக இருக்கப் பழகுங்கள். பிறருக்கு மகிழ்ச்சிïட்டுபவராக இருக்கப் பழகுங்கள். இதை அடைவது உன்னிடமேதான் இருக்கிறது.
வாழ்க்கை என்பதே உண்மையில் மனிதன் தன்னைத் தானே பிரசவிக்க முயலும் முயற்சிதான். சாம்பலிலிருந்து உயர்த்தெழும் பீனிக்ஸ் பறவையாய் உன்னிலிருந்துதான் நீ உன்னை பிரசவித்துக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு எதில் விருப்பமோ அதைக் கண்டுபிடியுங்கள். அதை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு விலங்குகளின் மேல் அளவற்ற விருப்பமா? அவற்றைப் படமாக வரைவதில் ஆர்வம் உண்டா? நீங்களும் ஒரு நாள் வால்ட் டிஸ்னியைப் போல் வரலாம்.
ஒரு சாதனையாளரின் சரித்திர சம்பவம்-
தனக்குள்ளிருந்த ஒருவனை பந்தைப்போல் தட்டியெழுப்பிய கால் பந்தாட்ட வீரர் ஓ.ஜெ.சிம்சன். அமெரிக்காவின் மாபெரும் கால்பந்தாட்ட வீரர். சுழன்றடிக்கும் சூறாவளிபோல் களத்தில் அவர் இறங்கினால் எதிரி அணி பஞ்சு பஞ்சாகப் பறந்துவிடும்.

இவர் பிறந்தது ஓர் ஏழைக் குடும்பத்தில். காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி கால்பந்து விளையாட்டினை ஒரு பார்வையாளராய் பார்க்கும் அளவுக்குக் கூட அவருக்கு வசதியில்லை. அப்போது கால்பந்தாட்டத்தில் புகழ்க்கொடி நாட்டிக் கொண்டிருந்தவர் பிரவுன் என்பவர்.
ஒரு நாள் அவர் வெற்றிக் கோப்பைகளோடு அரங்கத்தைவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது கால் முட்டி உயரம் கூட இல்லாத ஒரு சிறுவன், அவரது கால்களைக் கைகளால் சுரண்டிக் கூப்பிட்டான்.
பிரவுன் சிறுவனைப் பார்த்து, 'என்ன' என்றார்.
'சார், நான் உங்கள் ரசிகன்' என்றான்.
'ஓகே. அப்படியா?' என்று கேட்டுவிட்டு காரில் ஏறப்போனார் பிரவுன். மீண்டும் அதே சிறுவன், `சார் நீங்கள் ஆரம்பக் கட்டத்திலிருந்து இன்று வரை எத்தனை போட்டிகளில் விளையாடினீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை கோல்கள் போட்டீர்கள் என்ற முழுப் புள்ளி விவரங்களும் எனக்குத் தெரியும்' என்றான்.
'குட்' என்று புன்னகைத்துவிட்டு நகரத் தொடங்கினார். மீண்டும் அவரை நிறுத்திச் சொன்னான், 'உங்களின் அத்தனை சாதனைகளையும் ஒரு நாள் நான் முறியடித்துக் காட்டுவேன்'.
பிரவுன் அந்தச் சிறுவனை ஆச்சரியத்தோடு தட்டிக் கொடுத்துவிட்டு போய்விட்டார். அந்தச் சிறுவன் தான் இந்த சிம்சன்.
எப்படி இது சாத்தியமானது? ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது.
'நீ எதுவாக ஆக விரும்புகிறாயோ அதுவாகவே நீ ஆவாய்' என்பதின் ரகசியம் இந்த சரித்திர நிகழ்வில் இருக்கிறது.
இனிய இளைஞனே! காயங்கள் இல்லாமல் கனவு வேண்டுமானால் காணலாம். வலிகள் இல்லாமல் வெற்றி காண முடியாது. நீ இந்த உலகத்திற்கு வெறும் வெள்ளைத்தாளாகவே வருகிறாய். அதில் நீ தான் உன்னை எழுதிக் கொள்ள வேண்டும். சிலர் இந்தத் தாளில் கிறுக்குகிறார்கள். சிலரோ படிக்கப்பட்ட பின்னர் குப்பைக் கூடையில் எறியப்படும் கடிதமாகிறார்கள். சிலரோ வெற்றுத் தாளாகவே இருந்துவிடுகிறார்கள். சிலர் மட்டுமே காலத்தால் அழியாத காவியமாகிறார்கள். கவிதையாகிறார்கள்.
கவிதைகளை ரசிக்கும் பருவமல்லவா உன் பருவம். கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதை இது. உனக்கான கவிதை. உன்னை நீயே எழுத வைக்கும் கவிதை. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெற்றோர் இட்ட பெயரல்ல
உன் பெயர்
மேகத்திலிருந்து மழையைப் போல்
மலரிலிருந்து மணத்தைப் போல்
உன் பெயர்
உன்னிலிருந்து உதிக்கட்டும்
உன்னை நீ தான்
பிரசவிக்க வேண்டும்
ஆம். இதுதான் உண்மை. உன் கதையை நீயே எழுத வேண்டும்.

பேராசிரியர். க. ராமச்சந்திரன்

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Cool Boy said...

அருமையான படைப்பு..
இது போன்ற தரமான ஆக்கங்களை தொடர்ந்து உருவாக்க வாழ்த்துக்கள்..