Saturday, April 3, 2010

மனதைத் திறக்கும் மார்க்கம்

மனம் ...
மனித மாளிகையின் மைய மண்டபம்.
இந்த மண்டபத்தை எப்படித் திறப்பது?


திறந்த கதவுகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. திறக்காத சில கதவுகளை எப்படித் திறப்பது என்பது தான் பிரச்சினை.

"தட்டுங்கள் திறக்கப்படும்'' என்றார் இயேசு பெருமான். ஒன்றை அடைய வேண்டுமானால் அதற்குரிய முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் இயேசு பெருமானுடைய இந்தப் பொன்மொழியின் பொருள்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு மார்க்கம் உண்டு. மார்க்கம் என்பது இலக்கை அடைவதற்கான வழிமுறைதான். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். எனவே, கதவுகளைப் பற்றிப் பிரச்சினை இல்லை. மனம் என்பது இங்கே கதவைக் குறிக்கும் குறியீடு. ஒரு மாளிகைக்கு எத்தனையோ வாசல்கள் இருக்கும். வாசல்கள் தோறும் கதவுகள் இருக்கும். இந்தக் கதவுகளை எப்படித் திறப்பது?

இதோ ஓர் ஓவியக் காட்சி...

புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டு ஓவியக்கலைஞர் வில்லியம் ஹோல்மன் ஹர்ட். இவர், இளைஞன் ஒருவன் பூந்தோட்டத்தில் ஒரு கையில் தீப் பந்தத்தைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் கதவொன்றைத் தட்டிக் கொண்டிருப்பதாக ஒர் அழகான ஓவியத்தை வரைந்திருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் அதைப் பார்த்ததும், "ஹோல்மன், இந்தச் சித்திரம் மிக அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு தவறு இருக்கிறது'' என்றார்.

"என்ன தவறு?''

"நீங்கள் வரைந்த கதவில் கைப்பிடி இல்லையே.''

"ஆமாம்... இது தவறல்ல. இந்தக் கதவு இதயத்தின் கதவு. இந்தக் கதவை ஒருவர் உள்ளிருந்து தான் திறக்க முடியுமே தவிர வெளியிலிருந்தல்ல.

உலகம் ஒர் அழகான நந்தவனம். இறைவன் தன்னை ஒவ்வொரு நிலையிலும் வெளிப்படுத்துகிறார். இதயக் கதவை நாம் உள்ளிருந்து திறந்தால்தான் இறைவனை, மகிழ்ச்சியை நமக்குள் அனுமதிக்க முடியும்'' என்றார்.

அன்பானவர்களே! விடைக்கான பதில் இப்பொழுது உங்களுக்குக் கிடைத்திருக்கலாம். ஆம், மனம் என்னும் மாளிகையை உள்ளிருந்து தான் திறக்க முடியும். மனதைத் திறக்கும் கருவியாக "யோகா'' என்கிற சாவி. யோகா என்றால் பொருந்துதல் என்று பொருள். எதைச் செய்கிறோமோ அதில் மனம் பொருந்தி சரியாகச் செய்வதுதான் யோகா. ஒரே நேரத்தில் எட்டுத் திசைகளிலும் எட்டு வைத்தால் எந்தத் திசையிலும் போய்ச் சேர முடியாது.

எந்த ஒன்றில் நாம் ஈடுபடுகிறோமோ அந்த ஒன்றில் நம் மனம், முழுதாக ஒன்றிவிட வேண்டும்.  

"ஒரு மனம் ஒன்றே எண்ணம் என்பது கைவரப் பெற்றால் இந்த உலகில் எதுவும் சாத்தியமே'' என்பார் இளைஞர்களின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர். 
அந்த மன ஒருமைதான் எதையும் சாதிக்கச் செய்யும் சக்தியைக் கொடுக்கும்.

தத்துவ ஞானி ஜேம்ஸ் ஆலன் சொல்லுகிறார். வாழ்வின் முக்கியமான இரண்டு உண்மைகள், திறந்த மனமும், தவறைத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவமும்தான்.

மனப்பக்குவம் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். தவறை ஒப்புக் கொள்ளத் துணிவு வேண்டும். அது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டும். அவர்கள்தான் பக்குவப்பட்ட மனிதர்கள். மனிதம் படைத்த மனிதர்கள்.

சிலர், "நான் நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்குப் பொல்லாதவன்'' என்று பெருமையுடன் பேசுவதைக் கேட்கின்றோம். எங்காவது பகையைப் பகையால் வெல்ல முடியுமா? தீயைத் தீயால் வெல்ல முடியுமா? தீயைத் தண்ணீரால்தான் அணைக்க முடியும். அது போலத்தான் பகையை அன்பினால்தான் வெல்ல முடியும். அதுதான் நிரந்தரம். அன்பு இதய வாசலைத் திறக்கிற இனியசாவி.

புகை எப்படி உடலுக்கு கேடு விளைவிக்கிறதோ அதுபோல் பகை மனதை அழிக்க எண்ணுகிறது. பகை என்று போனால் நாம் ஒன்று செய்ய, அவன் பதிலுக்கு ஒன்று செய்ய தலைமுறை தலைமுறையாகத் தொடரும்.

இதைத் தவிர்க்க சீன ஞானி லாட்சு ஒரு மார்க்கம் சொல்லுகிறார். "நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்கும் நான் நல்லவன்'' என்று. இதற்குத் தேவை மன மாற்றம். நம் எண்ணங்களில் ஏற்படும் மாற்றம். இந்த எண்ணங்கள்தான் பகைமையை மாற்ற முடியும்.

இதைத்தான் "பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே'' என்று தன் நெஞ்சத்தைப் பார்த்து அதாவது மனதைப் பார்த்து பாடுகிறார் மகாகவி பாரதி. மாற்றம் நம் மனதில், அதுவும் ஆழ்மனதில் ஏற்பட வேண்டும்.

மரம் வளர மண் விதையை அனுமதிக்க வேண்டும். மனம் வளர நல்ல எண்ணங்களை அனுமதிக்க வேண்டும். விதையைப்போல் நல்ல கதைகளிலும் கருத்துகள் உண்டு. கருத்தான ஒரு கதை;

நியாயமான வழியில் ஈட்டப்படும் வருமானம்தான் வாழ்க்கையில் என்றைக்கும் மகிழ்ச்சியைத் தரக் கூடியது. அப்படி ஈட்டிய பொருளில் செய்யும் செலவுகள்தான் நற்பலன்களைத் தரும் என்று அறிவுறுத்தினார் சூஃபி ஞானி.

அதற்கு ஒரு செல்வந்தர் உடன்படவில்லை. "எப்படி ஈட்டினால்தான் என்ன? சம்பாதிப்பது தானே முக்கியம்''என்று கேட்டார்.

அதாவது தவறான வழி என்று தெரிந்தே அதன் மூலம் சம்பாதிப்பதில் தவறில்லை என்கிறீர்கள். அப்படித்தானே அவரிடம் கேட்டார் ஞானி.

"ஆமாம்...'' என்று இறுமாப்போடு பதில் சொன்னார் செல்வந்தர். அவரைப் பார்த்து மெல்ல சிரித்த ஞானி அவரைச் சிறிது நேரம் காத்திருக்கும்படி சொன்னார். பிறகு உள்ளே சென்று ஞானி திரும்பி வந்த போது அவர் கையில் ஒரு குவளையில் பால் இருந்தது.

"ஐயா! இந்தப் பாலை அருந்துங்கள்'' என்று சொல்லி அந்தக் குவளையை செல்வந்தரிடம் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட செல்வந்தர் தன் வாயருகே கொண்டு சென்றார். உடனே முகச் சுளிப்புடன் குவளையை தூர வைத்து விட்டு, "என்ன இது? மண்ணெண்ணெய் நாற்றம் அடிக்கிறதே'' என்று அருவருப்புடன் கேட்டார்.

"ஆமாம்.'' ஞானி சொன்னார், "அடுப்புத்தீயில் இந்தப் பாலைக் காய்ச்சி இருந்தால் இப்படி நாற்றமடிக்காது. நான் மண்ணெண்ணெய் விளக்கின் மேல் பிடித்தபடி தானே சுட வைத்தேன்.''

செல்வந்தர் குழப்பத்துடன் ஞானியைப் பார்த்தார்.

"அடுப்பில் இருப்பதும் நெருப்புதான். சிம்னி விளக்கில் இருப்பதும் நெருப்புதான். ஆனால் அடுப்பில் சுட வைக்கும் போது ஏற்படாத துர்நாற்றம் இந்த விளக்கில் ஏற்படுகிறதே. அதே போலத்தான் நியாயமாக சம்பாதிப்பதும் அநியாயமாக சம்பாதிப்பதும். தவறான வழியில் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யும்போது குற்றவுணர்வால் ஆழ்மனம் வருந்தும். ஆகவே அந்தச் செலவின் முழுமையான பலனை திருப்தியாக அனுபவிக்க முடியாது.''

ஞானியார் சொல்லச் சொல்ல செல்வந்தரின் ஆழ் மனம் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது. ஆன்மா விழித்தெழுந்து விட்டால் நமக்குள் எல்லாமே உறக்கம் கலைந்து எழுந்துவிடும். செல்வந்தரின் மனக்கதவு திறந்தது.

மனம் ஒரு செழிப்பான தோட்டம் போன்றது. அது நன்கு வளர வேண்டுமானால் அதைத் தினமும் நன்கு பேண வேண்டும். தூய்மையற்ற எண்ணங்கள் மற்றும் செயல்களாகிய களைகள் மனம் என்னும் தோட்டத்தில் வேரூன்றுமாறு ஒரு போதும் விட்டுவிடக் கூடாது. மனதின் வாசலில் நின்று காவல் காக்க வேண்டும். அதை ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல எண்ணங்கள் நுழைய, தீய எண்ணங்கள் தூரப் போகும். மனம் தூய்மை அடையும்.

அறிஞர் டென்னிசன் "என்னுடைய மனம்தூய்மையாக இருப்பதால்தான் நான் பத்து மனிதர்களுடைய பலத்தை உடையவனாக இருக்கிறேன்'' என்றார். இத்தகைய வலுவான தூய மனதைப் பெற இதோ சில எளிமையான வழி முறைகள்.
  • ஒரு நெருங்கிய நண்பருக்கு எதிர்பாராமல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
  • நல்ல புத்தகம் ஒன்றை எப்போதும் கைவசம் வைத்திருங்கள்.
  • உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் ஈடுபடுங்கள். அல்லது நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்யுங்கள்.
  •   உங்களுக்குப் பிடித்த இசைக் கருவியை இயக்கிப் பாருங்கள்.
  • உங்களுடைய அறையெங்கும் மெல்லிய இசையை பரவச் செய்து ரசியுங்கள்.
  • இதுவரைக்கும் போகாத ஒரு ஓட்டலுக்குச் சென்று உணவை ருசித்துச் சாப்பிடுங்கள்.
  • கஷ்டப்படும் நண்பர் ஒருவருக்குக் கடிதம் எழுதுங்கள்.
  • நோயுற்றிருக்கும் நண்பரை நேரில் சந்தித்து நலம் விசாரியுங்கள்.
  • மூச்சுப் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.
  • உங்களுக்குக் கிடைத்த புகழ் மாலைகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
இந்தப் பயிற்சிகளெல்லாம் உங்கள் மனச்சோர்வைப் போக்கி மனதை புதிய பாதையில் புத்துணர்வுடன் நடக்கச் செய்யும். திறந்த மனம்தான் வளர்ச்சியின் அறிகுறி. மனதைத் திறங்கள். மகிழ்ச்சி பொங்கட்டும்.
பேராசிரியர் க. ராமச்சந்திரன்

2 comments:

கருவாச்சி said...

realy very nice

muthu said...

நல்ல பதிவு. பிறருக்கு கைம்மாறு பார்க்காமல் உதவும் பொழுது நம்முடைய மனம் மகிழ்ச்சி அடையும். நாங்களும் சென்னையில் ஏழைப் பட்டதாரிகளுக்கு உதவும் பொருட்டு இலவசக் கணினிப் பயிற்சி கொடுத்து வருகிறோம். இணைப்பு http://payilagam.com/free-software-training-courses-in-chennai யாராவது இருந்தால் தெரியப்படுத்துங்கள்.