Friday, April 9, 2010

தேர்தல் முடிவு சொல்லும் பாடம் - இலங்கைப் பாராளுமன்றம் 2010

லங்கையில் போர் ஓய்ந்தும் ஓயாத துயரத்தோடு, ஈழத் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்கள் மீது திடீரென்று திணிக்கப்பட்ட பாராளுமன்ற தேர்தல் 2010, சிற்சில தனி நபர் வன்முறைகளையும் தாண்டி நல்ல படியாக நடந்து முடிந்திருக்கிறது.  

தம்மினக் காவலர்கள் என்று தாங்கள் நம்பிய ஒரு குழுவின் ஜனநாயக மறுப்புகளுக்குள் வாழ்ந்து பழகிய ஈழத் தமிழினம், இன்று சற்றுத் துணிவோடு ஜனநாயக உரிமையை கையில் எடுத்திருக்கிறது இந்த தேர்தலில்... துணிவோடு பலர் வேட்பாளர்களாகக் களமிறங்கி மக்கள் மத்தியிலான தமது செல்வாக்கினை சுயசோதனைக்கு உள்ளாக்கியுள்ளனர். சிலர் வெற்றிக் கனியை பறித்தும் உள்ளனர்.

உலகம் எதிர்பார்த்த ஒரு தேர்தலாக இது இருந்தாலும், வடக்கு கிழக்கு பகுதியில் பெருமளவு மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை என்பதும், வேட்பாளர்கள் களமிறங்கிய அளவு வாக்காளர்கள் களமிறங்கவில்லை என்பதும் வருத்தம் தரும் உண்மையாகும். தங்கள் துன்பதுயரங்களில் பங்குபற்றாத, முன் பின் அறிமுகமில்லாத பலர் இத்தேர்தலில் வேட்பாளர்களாக நின்றதும், முக்கிய கட்சிகளிடையே காணப்பட்ட பிணக்குகளும், பிளவுகளும் கூட, ஏற்கனவே நொந்து போன மக்களுக்கு எரிச்சலை கொடுத்திருக்கக் கூடும்.
எது எப்படி இருப்பினும் மக்கள் இன்றைய அரசியல் நிலைமையையும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தமக்குரிய தலைமையை தெரிவு செய்ய முயன்றிருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும். பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று ஒரு தமிழர் அமைப்பு பாராளுமன்றம் செல்லுமாயின் உலகத்தின் பார்வையில் குறிப்பாக இந்தியாவின் போக்கில் மாறுதல் தோன்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 14 ஆசனங்களை வழங்கியதன் மூலம் குறைந்த பட்சமாவது தமது ஜனநாயக கடமையை மக்கள் நிறைவேற்றியுள்ளார்கள். இது சற்று ஆறுதலை தரலாம்.

தமிழ் மக்களின் உரிமைக் குரலை பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கக் கூடிய ஒரே அமைப்பாக தமிழ் தேசிய அமைப்பு உருவாகி இருப்பது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. கடந்த காலத்தில் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போன கசப்பான அனுபவங்களை உணர்ந்து, தமிழ் மக்களுக்கு உண்மையான, நிரந்தரமான கூட்டுத் தலைமையாக எதிர்காலத்தில் தங்களை உயர்த்திக் கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வரவேண்டும். இந்த தேர்தல் பல உண்மைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உணர்த்தியிருக்கும். தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு மக்களும் தம்மை இணைத்து அதன் கரத்தை பலப்படுத்தி ஜனநாயக வழியிலும் அறவழியிலும் போராட முன்வரவேண்டுமென தமிழ் கூறும் நல்லுலகம் விரும்புகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களை நாமும் வாழ்த்தி வரவேற்கிறோம்.  
       

No comments: