Monday, March 8, 2010

புரட்சியின் நிறம் கருப்பு

 
இன்று உலக பெண்கள் தினமாகையால் பெண்ணுரிமை போராளி தந்தை பெரியாரை சற்றே நினைவு கூர்வது பெண்களைப் பெருமைப்படுத்துவதாக அமையலாம்.

"சீர்திருத்தம் என்பது ஓட்டை உடைசலை அடைக்கின்ற வேலை. எல்லாவற்றையுமே தலைகீழாகக் கவிழ்ப்பதுதான் உண்மையான புரட்சி!". புரட்சியின் நிறம் சிவப்பு என்பதை கருப்பு என்று மாற்றிக் காட்டிய கலகப் பேராசான் பெரியாரின் வார்த்தைகள் இவை. சாதி ஒழிப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமுதாயம் ஆகியவைதான் பெரியாரின் செயல்பாட்டு அடிப்படைகள். இந்தியாவில் எத்தனையோ பேர் இந்த அநீதியான சாதி அமைப்புக்கு எதிராகப் போராடினார்கள் என்ற போதிலும் முதன்முதலாக பெயருக்கு பின்னால் சாதி போட்டுக் கொள்ளும் பழக்கத்தை ஒழித்த பெருமிதத்தை தமிழ் நாட்டுக்கு உருவாக்கித் தந்தவர் பெரியார். இன்று திருமணப் பத்திரிக்கைகள் தவிர பொது வழியில் சாதிப் பெயர்கள் இல்லையென்றால் அதற்குக் காரணம் பெரியார்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அழைப்பிதழே புரட்சிகரமாக இருந்தது. 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விபச்சாரிகள் என்று தங்களைக் கருதிக் கொள்வோர் சிறப்பாக இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். திருமணம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பதால் 'திருமணம் என்பதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும்' என்றார். 'தாலியும் நீண்ட கூந்தலும் பெண்ணடிமைச் சின்னங்கள்' என்றவர் கிராப் வெட்டிக் கொள்ளும் பெண்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்தார்.

ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பொதுவான பெயர் இட வேண்டும். கற்பு என்பது எவ்வளவு அயோக்கியத்தனமோ அதே போல் விபச்சாரம் என்பது அயோக்கியத்தனம் என்றெல்லாம் எழுதியதும் பேசியதும் அவருக்கு மட்டுமேயான தைரியம். கலகத்தின் உச்சிக்கே போனவர் 'பெண்கள் பிள்ளைபெறும் இயந்திரம் அல்ல அவர்களுடைய கர்பப் பைகளை அகற்ற வேண்டும்' என்றார். தன் முதல் மனைவி நாகம்மாள் இறந்த போது வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் 'நாகம்மை தான் நம்பிய ஆணாதிக்கத்துக்கு நூறு சவிகித உண்மையாக இருந்தார் ஆனால் நான் பேசிய முற்போக்குக்கு அந்த அளவு உண்மையாக இருந்ததில்லை' என்று தன்னை வெளிப்படையாக தமிழ் சமூகத்தின் முன் விமர்சனத்திற்காக கிடத்தினார்.

சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம், குழந்தைப்பேறு, ஒழுக்கம், தேசியப்பற்று, மொழிப்பற்று என இதுவரை கட்டியமைக்கப்பட்ட புனிதங்கள் அனைத்தையும் போட்டு உடைத்தார். தேசியக் கொடி, அரசியல் சட்டம், காந்தி சிலை, பிள்ளையார் சிலை, ராமர் படம் என யாவரும் கைவைக்கத் தயங்கிய புனிதங்களைக் கொளுத்தினார் செருப்பால் அடித்தார். 'நமது மொழி சாதி காப்பாற்றும் மொழியாக இருக்கிறது' என்று சொன்ன பெரியார் அதனாலேயே தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி என்றார். 'அரசியல்வாதிகள் பொறுக்கித்தின்ன அரசியல்' என கடுமையாக விமர்சித்தார்.

இறுதிக் காலத்தில் உடல்நிலை வாட்டிய போதும் மூத்திரப்பையுடன் தமிழனின் சூத்திர இழிவு போக்க தமிழ்நாடு முழுக்க சுற்றிவந்தார். 'இன்னும்  ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வே.ராமசாமி என்னும் பிற்போக்குக்காரன் இருந்தான் என உலகம் பேசும். ஏனெனில் அந்த அளவுக்கு உலகம் முற்போக்காக செல்லும்' என்றார். ஆனால் அந்த கலகக்காரருக்கு முன்னும் பின்னும் அப்படியானதொரு நெருப்பு கிளர்ந்தெழவே இல்லை. பெரியார் ஆசைபட்டப்படி பெரியாரைத் தாண்டிச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்.                  

1 comment:

தாராபுரத்தான் said...

காலம் செல்ல செல்லத்தான் அந்த கருப்பின் மகிமை அதிகமாகுது.