Saturday, March 27, 2010

தவறுகள் குற்றங்கள் அல்ல

வெற்றி மாலையில் தவறுகளே பூக்கள். அதை அனுபவம் என்னும் நாரில் பக்குவமாக தொடுத்து சூட்டிக் கொள்ள வேண்டியது தான்.

'நாம் செய்யும் தவறுகளுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம்' என்று ஒரு வழக்கு மொழி உண்டு. ஆம், தவறுகள் குற்றங்கள் அல்ல, திருத்திக் கொள்ளும் வரை. திருத்திக் கொண்டால் அங்கே புதிய பாடம் கற்கப்படுகிறது.

குழந்தை தவழும்போதும் சரி, நடைபயிலும் போதும் சரி, விழுவது, எழுவது போன்ற முயற்சிகளை தொடர்ந்து செய்கிறது. ஆரம்பத்தில் அழுகையை மட்டுமே வைத்துக் கொண்டு தொடர்பு கொள்ளும் குழந்தை நாளடைவில் மழலை மொழி பேசி பின்னர் தெளிவாகப் பேசக் கற்றுக்கொள்கிறது.

பச்சிளங் குழந்தை உடனே எழுந்து நடக்க வேண்டும், தெளிவாக பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. உரிய பருவ காலத்தில் குழந்தையின் வளர்ச்சியும் அதற்கேற்ப அமையும். 'இளங்கன்று பயமறியாது' என்ற பழமொழியின்படி குழந்தைகள் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவதால் அதில் ஒருவகை துள்ளலையும், சுதந்திர உணர்வையும் காண முடியும்.

மனதில் தோன்றுவதை குழந்தை செயல்படுத்துகின்றது. எத்தனை முறை விழுந்து எழுந்தாலும் கவலை கொள்வதில்லை. பேசுவது தெளிவாக இல்லாமல் இருந்தாலும் பேசும் முயற்சியை கைவிடுவதில்லை. ஒவ்வொரு செயலையும் மதிப்பீடு செய்து பார்க்க முயல் வதில்லை. ஆனால் ஒருவகை உள்ளுணர்வுடன், ஒவ்வொரு முறை தவறி விழும்போதும் ஏதோ ஒரு வகையில் வாழ்வை எதிர்கொள்ளும் திறனைக் கற்கிறது.


உளவியல் ஆய்வின்படி குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை விளைவுகளுக்கு பயப்படுவதில்லை. ஆனால் பெற்றோர்களோ, மற்றவர்களோ தண்டனை கொடுத்துவிடுவார்களோ என்ற அச்சம்தான் உள்ளது. நாளடைவில் வளர, வளர பெற்றோர்கள் ஆசிரியர்கள், சமூகத்தினரின் அங்கீகாரத்தின் படியே செயல்பட தொடங்குகின்றனர்.

தவறுகளின் திருத்தமே நாகரிகம்

இளமைப் பருவத்தை அடைந்தவுடன் விளைவுகள், நல்லது, கெட்டது என்று பகுத்து ஆராயும் வளர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால் செயல்படும்போது விளைவுகள் எதிர்மறையாக போய்விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வு அதிகமாகின்றது. தவறுகளை மிகைப்படுத்தி பெற்றோரும், சமூகமும் பார்க்கும்போது செயல்படுவதில் உள்ள சுதந்திரம் குறைந்துவிடுகின்றது. கட்டுப்பாடற்ற சுதந்திரமும் சரி, அதிகமான கட்டுப்பாடும் சரி இரண்டுமே குழந்தைகளின் வளர்ச்சிக்கு தடையாகவே அமைகின்றது.

மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை முயற்சிகள் மேற்கொள்ளும்போது தவறுகள் நிகழத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றில் இருந்து கற்கும் படிப்பினையே இன்று நாகரிக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

குழந்தைக்கு ஆளுமை பயிற்சி

14 வயது சிறுமி தன் தாயிடம் சமையல் கற்கும் ஆர்வத்தில் காய்கறிகளை நறுக்கித் தருவதாகக் கூறுகிறாள். ஆனால் தாயோ தனது மகளை ஊக்கப்படுத்தாமல் சமையல் வேலை கெட்டுவிடும் என்று மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றார். அதனால் குழந்தையின் ஆற்றல் குறைகிறது.

அதற்கு மாறாக அந்தத் தாய் மகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் வழிநடத்தினால் அவர் சிறப்பான ஆளுமையைப் பெறுவார். பிழைகளை பொறுத்துக் கொண்டு குழந்தைகளை அனுபவக் களத்தில் இறக்கி பயிற்சி கொடுக்க பெற்றோரும், சமூகமும் முன்வர வேண்டும்.

தவறுகளை குழந்தைகள் தாங்களாகவே இனங்கண்டு திருத்திக் கொள்ளும் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதிகமாக குழந்தைகளை கடிந்து கொள்வது கூடாது. இதனால் குழந்தைகளுக்கு தங்கள் மீதுள்ள தன்னம்பிக்கை குறைந்துவிடும். நாளடைவில் பெற்றோர்களை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். தண்டிப்பது, பரிசுகளை அளித்து பாராட்டுவது ஆகியவற்றை உரிய நேரத்தில், உரிய அளவு செய்ய வேண்டும்.

----------------------------------------------------------

நீங்கள் தவறை ஒப்புக் கொள்வீர்களா?

இரண்டு நண்பர்கள் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற முயற்சி மேற்கொண்டனர். இருவரும் கடின முயற்சி செய்பவர்கள்தான். முதலாமவர் கட்டாயம் வெற்றி பெறுவேன் என்று நம்பினார். தேர்வு எழுதியபின் முடிவுகள் எதிர்மறையாக அமைந்தது.

அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரின் நம்பிக்கை குறைந்துவிட்டது. தேர்வுக்கு தயாராகும்போதும், தேர்வெழுதும்போதும் தான் செய்த பிழைகளை அவரால் இனங்காண முடியவில்லை. தேர்வுமுறை தவறு என்று அவர் கருதினார்.

இரண்டாமவரும் தேர்வில் தோல்விதான் அடைந்தார். எங்கு தவறு ஏற்பட்டது என்பதை இனங்கண்டு திருத்திக்கொண்டு மீண்டும் தேர்வெழுதினார். அப்போதும் வெற்றி கிடைக்கவில்லை. ஏற்கனவே தேர்வில் வெற்றி பெற்ற பலரை அணுகி தனது தேர்வெழுதும் அணுகுமுறையைப் பற்றி கூறி, எவ்வாறு சரி செய்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று தவறுகளை சரிசெய்து கொண்டார். மூன்றாவது முறை வெற்றி கண்டார்.

தவறு செய்தால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்போதுதான் சரிசெய்து கொள்ள முடியும். தாமதிக்காமல் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். தவறுகளை மறைக்க முயன்றால் பொய் சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். என்றாவது ஒருநாள் பிறருக்கு தெரிய வரும்போது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கும்.

அண்ணல் காந்தி பள்ளிப் பருவத்தின்போதே தான் செய்த சிறு தவறைக்கூட ஒப்புக்கொள்ள தயங்கவில்லை. அவற்றை எழுத்துப்பூர்வமாக அவரது சுயசரிதையில் குறிப்பிடவும் தயங்கவில்லை. அதனால் தான் வெள்ளையர்களின் தவறை சுட்டிக்காட்டி நியாயம் கேட்கும் மன உறுதியை அவர் பெற்றார்.

சர். சி.வி.ராமன், ஜகதீஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் தவறு நிகழ்ந்துவிடும் என்று அஞ்சி இருந்தால் புதிய கண்டுபிடிப்புகள் தோன்றி இருக்காது. ஜான்கீட்ஸ் என்னும் ஆங்கிலக் கவிஞர் மிக குறுகிய காலமே வாழ்ந்தபோதும் அவரது படைப்புக்கள் அனைவராலும் பாராட்டப்படுகின்றது. அவர் தனது கவிதைகளை மீண்டும், மீண்டும் படித்துப் பார்த்து பிழைகளை சரிசெய்து கொண்டு தரமான இலக்கியத்தை உலகிற்கு அளித்தார்.

தவறுகள் குற்றங்கள் அல்ல. பாடங்கள்தான்.

----------------------------------------------------------

வீழ்ச்சியும், வெற்றியும்...

வெற்றி என்பதை தயாராக யாரும் தங்கத் தட்டில் வைத்து நமக்கு தர முடியாது. பிழைகளை திருத்திக்கொண்டு சரியான அணுகுமுறையில் முயற்சி செய்யும்போதுதான் வெற்றி பெற முடியும். சிலர் தொழில் முனைவோராக இருந்து கொண்டு தங்கள் பொருட்களை சந்தைப்படுத்தும்போது விற்பனை அதிகரிக்கவில்லை என்றால் எங்கு தவறு நிகழ்ந்துள்ளது என்று ஆராய வேண்டும்.

அதைத் தவிர்த்து, தாங்கள் செய்தது சரிதான், ஆனால் வாடிக்கையாளர்கள்தான் சரியில்லை என்று கருதினால் தொழிலில் முன்னேற்றம் காணமுடியாது. பெரிய பெரிய நிறுவனங்கள் தோல்வியை தழுவுவதற்கு காரணம் தங்கள் தவறை உணர்ந்து சரியான நேரத்தில் சரிசெய்து கொள்ளாமல் செயல்படுவதே ஆகும்.

வாடிக்கையாளர்கள் எப்போதுமே சரியாகத்தான் சிந்திப்பார்கள் என்று மனமார நம்பி அவர்களை திருப்தி செய்ய என்ன முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கருதி செயல்படும் நிறுவனங்களே ஸ்திரமான வளர்ச்சியுடன் செயல்பட முடியும்.

எது அவமானம்?

அவர் 89 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற மருத்துவர். 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஒரு காலை இழந்தார். செயற்கைக்கால் அணிந்து கொண்டார். ஆனால் காலை இழந்ததை மறைக்க முயற்சி செய்தார். வீட்டிலேயே அமர்ந்து கொண்டு வெளியில் செல்வதை தவிர்த்தார்.

ஒருநாள் அவருக்கு தெரிந்தவர் ஒருவர் தன்னுடன் ஆறுவயது நிரம்பிய சிறுமியை அழைத்து வந்தார். அந்தச் சிறுமி ஓய்வு பெற்ற மருத்துவரைப் பார்த்து உங்களது செயற்கை காலை காண்பியுங்கள் என்று கூறினாள். அவர் தயங்கினார்.

பின்னர் அந்தச் சிறுமி தனது காலை காண்பித்து பேசினாள். தனக்கு நான்கு வயதாகும்போது ஒரு திருடன் கதவை உடைத்துக் கொண்டு திருட முயலும்போது தனது சகோதரனை கொன்றுவிட்டு தனது ஒரு காலையும் வெட்டிவிட்டு சென்றதாக கூறினாள்.

ஆனால் அந்தக் குறையை பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டு முதியவரிடம் மகிழ்ச்சி பொங்க பேசியது அவரை சிந்திக்க வைத்தது. 87 வயது வரை இரண்டு கால்களுடன் நடந்தவர் அவர். மருத்துவராக இருந்து பிறர் குறைகளை அறிந்து பல அனுபவங்களைப் பெற்றும் தனது குறையை யதார்த்தமாக புரிந்துகொண்டு செயல்படாமல் இருந்ததை எண்ணி வெட்கப்பட்டார்.

முருகன் சிறுவனாக வந்து சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு அவ்வையாரை உணரச் செய்தது போல இந்தச் சிறுமி முதிய மருத்துவருக்கு யதார்த்தத்தை உணரச் செய்தாள். குழந்தை, மனித குலத்தின் தந்தை என்று ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் சொன்னதிலும் உண்மை இருக்கின்றது.

மனம் என்னும் பாத்திரத்தை திறந்து வைத்துக்கொண்டு குறைகளை, தவறுகளை இனங்கண்டு திருத்திக் கொண்டும், தவிர்த்துக் கொண்டும் சென்றால் நாமும் எளிதில் வெற்றிப் பாதையில் பயணிப்போம்!

ப.சுரேஷ்குமார்.

No comments: