Tuesday, March 9, 2010

எனக்கேதும்.....

எனக்கேதும் உதவி செய்யுங்கோ !
படிக்கிறதுக்கு.............

ஒற்றைக்காலுக்கு
நாலாயிரம்
சப்பாத்து மேசு
இரண்டாயிரம்
ஐஞ்சுக்கட்டுக் கொப்பி எட்டுக்கும்
ஆயிரம் வாங்க
ஒரு ஐநூறைப் போடலாம்
சீசன் டிக்கற் 200 ரூபா
வசதிக் கட்டணம் 450 ரூபா
மொத்தமா பத்தாயிரமென்டாலும் வேணும்
அடுத்த தைக்கு.......

தூரத்துச் சொந்தக்காரர்
தந்த ஆயிரம்
இதுவரை சேர்ந்த 1270....
இன்னுமொரு
எட்டு எட்டரை சேர்க்கோணும்

"தம்பி !
அம்மா
அப்பா
சொந்தக்காரர்
ஒருத்தரும் இல்லையோ?"

அப்பாவை 83ம் ஆண்டு
உயிர்த்தகனம் செய்தாச்சு
அதாலை அம்மாக்கு
கொஞ்சம் மெண்டல்
.....................................................................

மந்திகை
தெல்லிப்பளை....
இப்ப அங்கொடையில.........
எண்டு சொல்லுகினம்

அக்கா நாவற்குழி ஈச்சம்பத்தைக்கு
96இல் உரமாயிட்டா
பள்ளி உடுப்பை மட்டும்
கண்டம்..............
அண்ணன் ஊர்விழியன்
எண்ட பேரோட,
2000ம் ஆண்டு வீரமரணம்
எண்டு செத்திட்டான்...........

கோயில் குளத்துக்குமில்லை.......
குடி வெறி பழகவுமில்லை.........     
யோசிக்காமல் போடுங்கோ!

"கையும் ஏலாது
காலும் இல்லை
என்னண்டப்பன்??????"

"வலக்கைதானே  இல்லை
இடக்கையாலை
எழுதிப்படிப்பேன்!"

சின்னண்ணையும்......
சின்னாக்காவும்.....

முழுசாத் தானே இருந்தினம்.

ஊர்விழியனெண்டு  நினைச்சு
சின்னண்ணையை....
வெள்ளை வானிலை காணாமல்
கொண்டு போட்டாங்கள்.
அக்கா முள்ளிவாய்க்கால்ல
சிதறேக்கை .......
எனக்கு கை முறிஞ்சுது !
கால் பறந்தது !!

இயண்டால் போடுங்கோ !
இயலாட்டி விடுங்கோ !!
பஸ் வெளிக்கிடப் போகுது.
மார்கழியும் முடிஞ்சு போகுது.

ந.வினோதரன்
இலங்கை

நன்றி யுகமாயினி

No comments: