Friday, March 12, 2010

டாவின்சியை போல....! உயர்வோம் !

லியோனார்டோ டாவின்சி

லியோனார்டோ டாவின்சி மறைந்த போது 'இந்த மனிதரின் மறைவு உலகத்துக்கே ஈடு செய்ய முடியாதது. இயற்கையாலேயே இன்னொரு டாவின்சியை சிருஷ்டிக்க முடியாது!' என்பதுதான் அவருக்கான அஞ்சலி. அப்படிப்பட்ட ஒருவர்போல நாம் சிந்திக்க முடியாதுதான். ஆனால், அவர் தனது சிந்தனைகளை மேம்படுத்த கையாண்ட வழிமுறைகளை அறிந்துகொண்டு, நமது சிந்தனைகளையும் ஒரு புதிய பாதையில் பயணிக்கச் செய்யலாம்.

 டாவின்சியை அறிமுகப்படுத்துவதற்கு தனி ஒரு வார்த்தையினை தேடிவிட முடியாது. அவரை உடற்கூறு வல்லுனர் - பொறியியலாளர் - நகரவடிவமைப்பாளர் - ஆடை, மேடை வடிவமைப்பாளர் - சமயற்கலை நிபுணர் - அறிவியல் அறிஞர் - புவியியலாளர் - கணிதவியல் வல்லுனர் - ஓவியர் - நகைச்சுவைப் பேச்சாளர் - தத்துவ மேதை - இசைக் கலைஞர் - இயற்பியல் மேதை... என இன்னும் என்னவெல்லாமோ! இந்த எல்லா அறிமுகங்களுக்கும் பொருத்தமானவர் டாவின்சி.
'Think like Davinsi' என்ற புத்தகத்தில் 'இந்த உலகத்தை வடிவமைத்த மேதைகளில் டாவின்சிக்கு மறுக்க முடியாத பங்கு இருக்கிறதென்றும், அவரைப் போலவே நாமும் சிந்தித்து மேதைகள் ஆகலாம்' என்று புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல் ஜே.கெல்ப் நம்பிக்கை ஊட்டுகிறார். 'இது முடியுமா? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் வாவ்... நீங்கள் டாவின்சி போல் யோசிக்க துவங்கியிருக்கிறீர்கள்....வாழ்த்துக்கள்!' என்று ஆரம்ப வரிகளிலேயே உற்சாகமூட்டுகிறார் ஆசிரியர்.

மேதைகளுக்கும் குழந்தைகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பேசத்தொடங்கியவுடன் குழந்தைகள் எதைப் பார்த்தாலும் அதைப்பற்றி கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த உலகத்தில் மேதைகள் என்ற அடைமொழி வழங்கப்பட்ட அனைவரும் குழந்தை மனநிலையில்தான் தங்களை நிலைநிறுத்திக் கொண்டார்கள். டாவின்சிக்கு மது, மாது, செல்வம், செல்வாக்கு, மதப்பற்று என எந்த விஷயங்களும் கிளர்ச்சியூட்டவில்லை. மாறாக எதைப்பற்றியும் எப்போதும் கேள்விகள் எழுப்பிக் கொண்டே இருப்பதுதான் அவரை எப்போதும் துடிப்பாக வைத்திருந்தது. எப்போது எந்தக் கேள்வி எழுந்தாலும் தன்னுடைய சின்ன குறிப்புக் கையேட்டில் குறித்துவைத்துக் கொள்வார் டாவின்சி. பின்னர் அவற்றுக்கான பதிலுக்காக மண்டையை உருட்டிக் கொண்டிருப்பார்.

நீங்களும் எந்தச் சின்ன சம்பவமாக இருந்தாலும் அதைப் பற்றி பத்து முக்கிய கேள்விகளை எழுப்பிப் பழகுங்கள்.

உதாரணமாக  ஒரு பறவை பறக்கிறதென்றால்
* ஏன் அதற்கு இரண்டு சிறகுகள்?
*  ஏன் அவற்றுக்கு உடல் முழுக்க இறகுகள்?
* எப்படி அது மேல் எழும்புகிறது?             
* எப்படி வேகம் எடுக்கிறது?
* எப்படி தன் வேகத்தை கட்டுப்படுத்துகிறது?
* எப்படி அவற்றால் பறக்க முடிகிறது?
* எப்போது அது தூங்கும்?
* அதன் பார்வைத் திறன் எவ்வளவு?
* எப்படி அது உண்ணும்?
* பாதி வழியில் மழை பெய்தால் தொடர்ந்து பறக்குமா?

இது போன்ற கேள்விகளைப் பார்க்கும் பொழுது கொஞ்சம் வேடிக்கையாக தோன்றினாலும், பதில்களை யோசிக்கத் தொடங்கினால் பறவையின் மறுபக்கம் குறித்து பல புதிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் அல்லவா?. நீங்கள் எழுப்பும் கேள்விகள் அனைத்துக்கும் பதில் கிடைத்துவிட வேண்டுமென்பதில்லை. ஆனால் அதற்கான உங்கள் சிந்தனை நிச்சயம் உங்களுக்குள்ளேயே ஒரு உற்சாகத்தை ஊற்றெடுக்கச் செய்யும்.

இந்த வகையிலான கேள்விகளும் பதில்களும் உங்களை நாளுக்குநாள் புதியபரிமானங்களுக்கு இட்டுச் செல்லும். உங்களை நீங்களே அறிந்து கொள்ள ஒரு சிறிய சோதனையை செய்து  பாருங்கள். அதாவது
* எனது பலம் - சிறந்த குணங்கள் என்ன ?
* எனது பலவீனம் - திருத்திக் கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வேண்டிய விஷயங்கள் என்ன ?
* இன்னும் திறமையான, உதவும் மனப்பான்மைக் கொண்ட, உண்மையான நபராக, ஆளுமையை வளர்த்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் ?.

அதிக பட்சம் ஆறு மாத இடைவெளிகளில் இந்த மூன்று கேள்விகளையும் உங்களுக்கு நெருக்கமான, நலன் விரும்பிகளிடம் கேட்டுப் பதில்களைப் பெறுங்கள். நேர்மையான பதில்களுகேற்ப உங்கள் மனப்பான்மையில் தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். கல்லூரி, அலுவலகங்களில் உங்கள் கீழ் பணிபுரியும், நீங்கள் எதிரியாக நினைக்கும் நபர்களிடமிருந்து வரும் பதில்களைக் கூட உதாசீனப்படுத்தாதீர்கள்.
பதில்கள் நீங்கள் கேட்க விரும்பாதவையாக இருந்தால் 'உஷாராக வேண்டிய தருணம்' இது என்பதை உணர்ந்து உடனடியாகச் செயல்படுங்கள்.

கல்லூரிக் காலம் முடிந்து - வேலைக்கு சேர்ந்து - திருமணம் முடித்து - ஒரு குழந்தை பெற்றுக்கொண்டதும் இந்த உலகம் பற்றி அனைத்தும் அறிந்து கொண்டவர்கள் போல் ஒரு அந்தஸ்தை நமக்கு நாமே சூட்டிக்கொள்கிறோம். அங்கேதான் நாம் தங்கித் தேங்கி போகிறோம். டாவின்சி மரணப்படுக்கையில் விழும் கடைசி நொடி வரை எதோ ஒன்றை கற்றுக் கொண்டிருக்கும் மாணவராகவே இருந்தார். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.... நமது வாழ்வின் வசந்த காலமாக பள்ளிக் கல்லூரி காலங்களைதானே ஆயுளுக்கும் குறிப்பிடுகிறோம் காரணம் அந்த காலங்களில் நம்மை உற்சாகமாக வைத்திருந்தது கற்றுக் கொள்ளும் ஆவலுள்ள மாணவ மனப்பான்மைதான். புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளும் போது நம்மை அறியாமலே நமது மனது தனது கதவு - ஜன்னல்களை அகலத் திறந்து வைத்துக்கொள்கிறது. எப்பொழுதும் புதிய விடயங்களை கற்றுக்கொள்ளும் பொழுது சில விஷயங்களை கவனித்துக் கொள்ளவேண்டும். பயிற்சியின் போது நாம் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், தெரிந்தவர்கள் வழிநடத்துவதை அவர்கள் நம்மைவிட எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் அந்த இடத்தில் நாம் ஒரு குழந்தையைப் போல உணர்ந்து கொண்டு நடப்பதும் எம்மை மேலும் பல உயரங்களுக்கு இட்டுச் செல்லும். ஆகையால்;

வாருங்கள் நாம் அனைவரும் டாவின்சியின் இழப்பை ஈடு செய்வோம்.
நன்றி ஆ.வி           

No comments: