Saturday, March 13, 2010

புதிய சட்டமன்ற வளாகம் சிறப்பம்சங்கள்


புதிய சட்டசபை கட்டிடம் இன்று கோலாகல திறப்பு விழா
சென்னையில் பிரமாண்டமாக கட்டப் பட்டுள்ள புதிய சட்டசபை கட்டிடத்தை சோனியா காந்தி, முதல் - அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (சனிக்கிழமை) மாலை திறந்து வைக்கிறார்.

நாடே பார்த்து வியக்கும் வகையில், தமிழகத்தின் புதிய சட்டமன்றம்-தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் கருணாநிதி 50 ஆண்டுகள் உறுப்பினராக இருந்ததன் பொன்விழா கொண்டாடப்பட்டபோது, இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் தமிழகத்தின் புதிய சட்டமன்ற, தலைமைச் செயலக கட்டிட வளாகம், சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 12.11.2008 முதல் கட்டப்பட்டு வருகிறது. இதில், பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டன.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட், புதிய சட்டசபையில் தாக்கல் செய்யப்படவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி விரும்பினார். அதற்கேற்ப, சட்டமன்ற கட்டிடம் சென்னையில் வைரக் கல்லாக ஜொலிக்கும் வகையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 19-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக கட்டிடத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கும், இந்த சட்டப்பேரவை - தலைமைச் செயலக வளாக கட்டிடத்தை பிரதமர் மன்மோகன்சிங் இன்று மாலை திறந்துவைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் இந்த விழா கோலாகலமாக நடக்கிறது. விழாவுக்கு சோனியாகாந்தி, கவர்னர் பர்னாலா தலைமை வகிக்கிறார்கள்.

மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத், கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா, ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யா, புதுச்சேரி முதல்-மந்திரி வைத்திலிங்கம், சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, பொதுப்பணித்துறை செயலாளர் ராமசுந்தரம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள். மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.


***********************************************

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான நினைவுச் சின்னங்களாக முதல்-அமைச்சர் கருணாநிதி அமைத்துள்ள வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் வானளாவ எழுந்துள்ள திருவள்ளுவர் சிலை, தூத்துக்குடி அருகே பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் கோட்டை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அந்த வரிசையில், வரலாற்றின் வரலாறாக, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவுக்கு, முதல்-அமைச்சரின் நேரடிப்பார்வையில் அவருடைய எண்ண ஓட்டத்தில் மலர்ந்த என்றென்றும் மனம் வீசி விளங்கும் மலராகவும், காலம் காலமாக அவரது பெருமைகளையும், தமிழகத்தின் கலைச்சிறப்புகளையும் பிரதிபலிக்கும் ஒரு கலைச்செல்வமாக இப்போது கட்டப்பட்டுள்ள தமிழக சட்டமன்றப்பேரவை-தலைமைச்செயலக வளாகம் அமைந்து உள்ளது.

மின்னொளியில் மிளிரும் புதிய சட்டமன்ற வளாகம் 

புதிய சட்டமன்ற வளாகம் சிறப்பம்சங்கள்
இங்கு 120 அடி விட்டம் கொண்ட வட்ட வடிவ அமைப்புடைய சட்டமன்றப் பேரவையும், அதன் மேற்கூரையின் மேற்புரத்தில் 100 அடி உயரம் கொண்ட மிகப்பிரம்மாண்டமான குவிமுகமாடம் (டோம்) தங்கத்தைப்போன்று ஜொலிக்கும் வகையில் அமைக்கப்படுவது கூடுதல் சிறப்பு ஆகும்.

புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டசபை வளாக கட்டிடம் பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தில் கண்ணை கவரும் விதத்தில் காட்சி அளிக்கிறது.

அரசினர் தோட்டத்தில் அமைக்கப்படும் புதிய சட்டமன்றம், தலைமைச் செயலகங்கள் கட்டிடப் பணி இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வளாகம் 'பிளாக் ஏ' என்றும், தலைமைச் செயலக வளாக கட்டிடம் 'பிளாக் பி' என்றும் அழைக்கப்படுகின்றன. இதில், 'பிளாக் ஏ' பகுதியில் சட்டமன்ற வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிளாக் பி பகுதியில் தலைமைச் செயலக அலுவலகங்கள் (7 மாடி கட்டிடங்கள் ஏழு) கட்டப்பட்டு வருகின்றன.

 சட்டசபை வளாகத்தில் வெளிப்புறத்தில் பெரும்பாலான இடங்களில் மேற்புறத்தில், 'கோலம் டிசைன்' வரையப்பட்ட பொன் நிற தகடுகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

'பிளாக் ஏ' பகுதியில் கட்டப்படும், முதல்-அமைச்சர் வளாகம், பொது வளாகம், சட்டசபை வளாகம், நூலக வளாகம் என நான்கு கட்டிடங்களிலும் 10 ஆயிரம் சதுர அடி பரப்புக்கு, கட்டிடத்தின் வெளிப்புறங்களில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன. அந்த கண்ணாடிகளுக்கு சற்று இடைவெளிவிட்டு மேற்புறத்தில், பொன் நிறத்தாலான அலுமினிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறாக 10 ஆயிரம் அலுமினிய தகடுகள், கண்ணாடிகள் எங்கெங்கெல்லாம் வருகின்றனவோ, அதன் மீதெல்லாம் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் 'ஏ பிளாக்கில்' உள்ள சட்டமன்ற வளாகம் உள்பட அனைத்து கட்டிடங்களுமே தங்கம் போல் ஜொலிக்கின்றன. பகலில் சூரிய வெளிச்சம், கட்டிடத்தின் மீது படும்போது பொன் போல் தகதகவென மின்னுகின்றன.
'பிளாக் ஏ' பகுதியில் வட்ட வடிவத்தில் அமைந்த 6 மாடி கட்டிடங்கள் நான்கு கட்டப்பட்டுள்ளன. இதுதான் சட்டமன்ற வளாகம். இது ரூ.427 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில், வட்ட வடிவத்திலான 4 கட்டிடங்கள் வரிசையாக கட்டப்பட்டுள்ளன. இதில் பொது வளாகம்தான் பெரிய கட்டிடம். அதற்கு அடுத்தபடியாக சட்டமன்ற கட்டிடம் அளவில் பெரிதாகும். அதற்கு அடுத்த பெரிய கட்டிடம் நூலக வட்டம் ஆகும். இதில், சட்டத்துறை அலுவலகம் அமைந்திருக்கும். நான்காவதாகவும், சிறியதாகவும் முதல்-அமைச்சரின் அலுவலகம் (முதல்-அமைச்சர் வட்டம்) அமைந்துள்ளது. இதுதான் அளவில் சிறியது. இந்த 4 வட்ட வடிவ கட்டிடங்களின் அளவு இறங்குவரிசையில் குறைந்துகொண்டே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 கட்டிடங்களை குறிக்கும் வகையில் நுழைவாயிலில் 4 நீரூற்றுகள், அந்தந்த கட்டிடங்களின் பரப்பளவு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு வட்ட வடிவ கட்டிடங்கள் வரிசையாக 9 லட்சம் சதுர அடிபரப்பில் கட்டப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் கட்டிடம்தான் இதில் சிறியது. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் எளிமையாக இருக்கவேண்டும் என்பதை காட்டுவதாக இருக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லியதால், முதல்-அமைச்சரின் நிர்வாக அலுவலகம் அமையும் கட்டிடம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

பொது வளாக கட்டிடத்தில், இந்தியாவில் முதல்முறையாக எந்த ஒரு பெரிய அரசு கட்டிடத்திலும் இல்லாதவகையில், பொதுமக்கள் பெரிய கட்டுப்பாடுமின்றி எளிதில் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த இடம் சுற்றுலா தலம் போல் விளங்கும்.

4 கட்டிடங்கள் எதை குறிக்கின்றன?

சட்டமன்ற வளாகத்தில் 4 கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணி சுவாரசியமானது. ஒரு வட்டம் பொதுமக்களையும் (பொதுவளாகம்), அடுத்த 3 வட்டங்கள் ஜனநாயகத்தின் 3 தூண்களான சட்டசபை (சட்டசபை வளாகம்), நீதித்துறை (நூலக வளாகம்) மற்றும் நிர்வாகத்தை (முதல்-அமைச்சர் வட்டம்) குறிக்கின்றன.
இதுதவிர, சட்டசபை கட்டிடத்தின் மீது, 100 அடி உயர பிரமாண்ட கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீது கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டமன்ற கட்டிடத்தின் தரைத்தளத்தில் வெளிச்சம் நேரடியாக விழும். இந்த சட்டமன்ற-தலைமைச் செயலக கட்டிடத்தை 4 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக பாடுபட்டு உழைத்து உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு, முதல்-அமைச்சர் கருணாநிதி நாளை, பிரியாணி விருந்து அளித்து உபசரிக்கிறார்.

உலகிலேயே முதல் பசுமைக் கட்டிடமாக கட்டப்பட்டு உள்ள தமிழக புதிய சட்டசபை கட்டிட வளாகத்தில் 3 லட்சத்து 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அழகிய புல்வெளி, செடிகொடிகள், சிறிய-பெரிய மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

சாதாரண கட்டிடத்திற்கும், பசுமைக் கட்டிடத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தமிழக புதிய சட்டசபை கட்டிடம், உலகிலேயே முதல் சட்டசபை பசுமை கட்டிடமாகவும், இந்தியாவிலே மிகப்பெரிய அரசு பசுமைக் கட்டிடமாகவும் கட்டப்பட்டு உள்ளதால் அமெரிக்க-இந்திய பசுமைக் கட்டிட கவுன்சில் 'தங்க தர நிர்ணய சான்றிதழ்' (லீட் கோல்டு சர்டிபிகேட்) வழங்கியுள்ளது.

பசுமைக் கட்டிடம் என்பதால் புதிய சட்டசபை கட்டிடத்தில் தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தப்படும். குறைந்த அளவு மின்சாரம், எரிபொருள் செலவாகும். இயற்கை வளங்கள் அப்படியே தக்க வைக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தில் பணியாற்றுபவர்கள் சுகாதாரமான சூழ்நிலையில் பணிபுரிவார்கள்.

சட்டசபை வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் 21 இடங்களில் பேட்டரி சார்ஜ் செய்யும் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. பேட்டரியில் ஓடும் ஸ்கூட்டர், கார் போன்றவற்றை இங்கே சார்ஜ் செய்து கொள்ளலாம். சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்தின் மொத்த பரப்பளவு 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடியாகும். இதில், 3 லட்சத்து 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அழகிய புல்வெளிகள், சிறிய மற்றும் பெரிய மரங்கள் வளர்க்கப்பட உள்ளன. சில மாதங்களிலே வண்ண, வண்ண பூக்கள் பூத்துக்குலுங்கும். விரைவிலே பச்சை போர்வை போர்த்தியதுபோல சட்டசபை வளாகம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கும்.

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக மறுசுழற்சி முறையில் தண்ணீரைப் பயன்படுத்தும் வசதி உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள பிளாண்டில் தினமும் 2 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் கழிவுநீரை சுத்தம் செய்ய முடியும். அந்த நீர் புல்வெளிகள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும். இதன்மூலம் 52 சதவீதம் தண்ணீர் பயன்பாடு குறையும்.

புதிய சட்டசபை கட்டிடத்திற்குள் வெப்ப தாக்குதலை தடுப்பதற்காக விசேஷ கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கட்டிடத்தின் வெளிப்பகுதியில் தங்கமென மின்னும் அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில், கோலம் வடிவில் ஏராளமான சிறிய துளைகள் இருக்கின்றன.

இதன் வழியாக கட்டிடத்திற்கு சூரிய வெளிச்சம் வரும், வெப்ப தாக்குதல் இருக்காது. கட்டிடத்தில் உள்ள அறைகளில் வெப்ப தாக்குதல் குறைவாக இருக்கும்போது 20 சதவீதம் எரிபொருள் தேவை குறையும். புதிய சட்டசபை கட்டிடத்தின் எந்தப் பகுதியிலும் நேரடியாக வெப்ப தாக்குதல் இருக்காது.

மொத்தம் உள்ள 4 கட்டிடத்தில் நூலகம் மற்றும் முதல்-அமைச்சருக்கான கட்டிடங்களில் சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் மாடித் தோட்டம் (ரூப் கார்டன்) அமைக்கப்படுகிறது. மற்ற கட்டிடங்களின் மேற்பகுதியில் 80 சதவீதம் சூரிய ஒளியை திருப்பி அனுப்பும் நவீன வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 1,000 அறைகள் உள்ளன.

ஒவ்வொரு அறையிலும் ஏ.சி.யில் இருந்து வரும் குளிர்ந்த காற்றை கட்டுப்படுத்தவும், ஆப் செய்யவும் தனித்தனியே வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரு அறையில் 5 அல்லது 10 நிமிடங்கள் வரை யாரும் இல்லை என்றால் அங்குள்ள லைட், பேன், ஏ.சி. ஆகியவை தன்னாலே ஆப் ஆகும் வசதியும் செய்து தர உள்ளனர். எல்லாவற்றையும்விட புதிய சட்டசபை-தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்குள் யாரும் புகைபிடிக்க அனுமதியில்லை.

இந்தியாவிலே முதன் முதலாக கர்நாடக மாநிலம், குல்பர்க்காவில் கட்டப்பட்ட போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு பசுமைக் கட்டிட தர சான்று அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 20 ஆயிரம் சதுரஅடிதான். இரண்டாவதாக தமிழக புதிய சட்டசபை கட்டிடத்திற்கு பசுமைக் கட்டிட தர சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 9 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடி என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகக்கட்டிடங்கள் அனைத்தும், பூகம்பத்தை தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வளாகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் குளுகுளு வசதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில், இந்த கட்டிடம் சிறப்பான இடத்தை பிடிக்கும். இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத வகையில் சிறப்பான சட்டமன்ற கட்டிடம் தமிழகத்தில்தான் கட்டப்பட்டுள்ளது என்று இப்போதே நாடு முழுவதும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இது தமிழர்கள் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்தான்.

புதிய சட்டமன்ற வளாகத்தை திருக்குறள் கோவில் என்று அழைக்கலாம்

தமிழில் ஆய்தம் உள்பட 13 எழுத்துக்கள் நம் மொழிக்கு மூலம்-உயிர்.

சட்டமன்றம் திறப்பது 13-3-2010. இதன் முதல் மூன்று எண்களே வரிசைப்படுத்தியது போல் திருக்குறள் அதிகாரம் 133 என்கிறது. நாளின் இறுதியில் நடப்பு ஆண்டு 10 உள்ளது. இதை, அதிகாரம் அனைத்தும் 10 குறள் கொண்டவை என்று எண்ணத் தோன்றுகிறது. எண் 2 குறளீரடி என்கிறது.

2010 இந்த ஆரம்ப எண் 2 அறம் பொருள் என்ற வெளிப்படையான திருக்குறள் பால்களை காட்டுவதாகவும் அடுத்த 1-மறைபொருளாய் அகத்திணைக்குரியதாய் இலங்கும் இறுதிப்பாலாகிய இன்பப்பால் என்றும் கொள்ளலாம்.

இவ்வளவு குறளமைப்புடன் இனங்காட்டும் இந்த எண் - தேதி வேறு ஒரு வகையிலும் வியப்பு அளிக்கிறது.

13-3-2010-ல் உள்ள எண்களை எந்த முறையில் கூட்டினாலும் குறளின் ஓர் அதிகார அளவைக் குறிப்பது போல் பத்தே வருகிறது. தலையாய அரசு திறப்பு விழா நாளில் திருக்குறள் எண்கள் புகுந்து திளைக்கின்றன. ஆகவே, புதிய சட்டமன்ற வளாகத்தை "திருக்குறள் கோவில்" என்று அழைக்கலாம்.

ஆம். அது திறக்கப்படும் நாளில் நம் முதல்-அமைச்சர் இறுதியாகக்கிடைத்த, அருட்பெரும் பொன்னம்பலம் அளித்த "திருக்குறள் பேரொளி" ஏந்தி ஏறா நிலை மிசை ஏறுகிறார்.


3 comments:

Anonymous said...

நீவீர் ஒரு தீவிர DMK ஜால்ரா என்பது மட்டும் உறுதி !!

Anonymous said...

unmaiyilaye neengal ularuvayan thaan

keep it up :)

கிரி said...

தகவலுக்கு நன்றி