Friday, March 12, 2010

மதம் கொள்ளாதீர்

இந்து சமயம் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒரு மதமாக இருந்தாலும், மெய்ப்பொருளைக் காணும் ஒரு பொதுத் தேடலால் ஒன்று பட்டு இருக்கிறது. இது ஒரு வாழ்க்கைமுறை; சமயப் பற்றுக்களின் கூட்டுறவாக இது விளங்குகிறது. உள்ளூர் மதப்பிரிவுகள், தெய்வங்கள், தேவதைகள், மக்கள் இடையே நிலவிய பல்வேறு நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் எல்லாவற்றையும் இணைத்துக் கொண்டு வளர்ந்தது இந்து சமயம்.

இந்துக்களின் வாழ்க்கை சிந்தனைகளில் பெருமளவு தாக்கம் ஏற்படுத்துபவை ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டு நூல்கள். பிரபஞ்சத்தில் இயங்கும் பல்வேறு சக்திகளை, குறிப்பாக மனித இயல்பை பிரதிபலிக்கும் கடவுள்கள், தேவதைகளைச் சுற்றி இந்தப் புராணங்கள் உள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு, அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மும்மூர்த்திகள் இந்து சமயத்தின் முக்கிய கடவுளாகத் திகழ்கின்றனர்.

இஸ்லாம் என்றால், இறைவனிடம் சரணடைதல் என்று பொருள். ஏகத்துவத்தைப் போற்றும் இஸ்லாம், கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை கொண்டது. தோழமை, மக்களிடையே சமத்துவம், சாதிகள் அற்ற சமுதாயம், இந்த சமுதாயத்தின் முக்கிய அம்சங்கள். நபிகள் பாரம்பரியத்தில் இறுதி நபியாக முகமது நபி (ஸல்) அவர்கள் போற்றப்படுகிறார். திருக்குர் ஆன் முஸ்லிம்களின் புனித நூல்.

கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் டிடிமஸ் கி.பி.50 ஆம் ஆண்டு வாக்கில் மலபார் கரைக்கு வந்ததாக கூறப்படுகிறது. தென்னிதியாவில் ஏழு தேவாலயங்களை அவர் அமைத்தார். அங்கு பண்டைய தேவாலைய மரபுகள் இன்றும் பேணிக்காக்கப்படுகின்றன. 16 -ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவுக்கு வந்த இயேசுசபை சமயப் பணியாளரான புனிதர் பிரான்சிஸ் சேவியர், இங்கு ரோமன் கத்தோலிக்க சமயப் பிரிவு வளர பெரும் பணி புரிந்தவர்.

சிஷ்யா எனப்படும் சீடன் என்ற பொருள்படும் சொல்லில் இருந்தே 'சீக்' என்ற சொல் பிறந்தது. பல்வேறு கோட்பாடுகளைக் கொண்ட ஏகத்துவத்தைப் போற்றும் சீக்கிய சமயம், இந்து சமயத்தில் இருந்து கிளைத்தது. சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், இந்துக்களாலும், முஸ்லீம்களாலும் போற்றப்படுகிறார். ஆதி கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் என்னும் புனித நூலில், குருநானக், அவரைப் பின் பற்றி வந்த மற்ற ஒன்பது குருக்களின் போதனைகள் பொதிந்து உள்ளன.

சமணம் மிகவும் பழமையான சமயம். சமண சமயத்தை நிறுவிய வர்த்தமான மகாவீரர் கி.மு.599-ம் ஆண்டு பிறந்தார். நன்னம்பிக்கை, நல்ல ஞானம், நல்லொழுக்கம், பிரம்மச்சரியம் ஆகியவற்றை முக்திக்கு வழி என்று சமணர்கள் நம்பினார்கள். ஆன்மாவைப் போற்றி வாழும் நிலையே முக்திக்கு வழி என்பார்கள். சின்னஞ்சிறிய நுண்ணுயிரைக் கூட அழிக்காமல் கவனமாக இருப்பார்கள், சமணர்கள்.

கி.மு.ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய சமயம் பவுத்தம். மகாவீரரைப் போல கவுதம புத்தரும் துறவு மேற்கொண்டு, தீமைகள் அனைத்திற்கும் ஆசையே அடிப்படை என்பதைக் கண்டறிந்தார். ஞானம் பெறுவது மூலமே ஆசையை அறுக்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார். அந்த காலத்தில் நிலவிய சமயத்திற்கு எதிராக, புத்தர் புரட்சி செய்தார். இந்தியாவில் தோன்றிய பவுத்தம், உலகின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது.               

1 comment:

ஜகதீஸ்வரன் said...

பல்வேறு மதங்களைப் பற்றி சொல்லியுள்ளீர். நன்றி