Tuesday, March 16, 2010

யார் இவர்?

'து தான் அவர் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி. இதுதான் அவர் உபயோகித்த பேனா. இதுதான் அவர் சாப்பிடப் பயன்படுத்திய பாத்திரம். இதுதான் அவருடைய சால்வை' என்று ஒவ்வொன்றாக அடையாளம் காட்டினான் அவன்.

'தாங்களே எங்கள் புதிய தலாய் லாமா' என்று தெரிவித்து அவருடைய காலில் விழுந்து வணங்கினார்கள் வந்திருந்தவர்கள்.

கோடிக்கணக்கான பௌத்த மதத்தினரின் தலைவராக பதினான்காவது தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்பட்டது இவ்வாறுதான். அவர் மட்டுமல்ல அவருக்கு முந்தைய பதிமூன்று தலாய் லாமாக்களும் இப்படித்தான் தேர்ந்தெடுக்கப்பட்டர்கள்.

எந்த தலாய் லாமாவும் தனக்கு அடுத்த வாரிசு இன்னார்தான் என்று அறிவித்தது கிடையாது. அவர் காலமானதும் மடாலயத்தின் மற்ற தலைவர்கள் சிற்சில அறிகுறிகளை வைத்து இன்ன இடத்தில் இன்னாராக அவர் மறு ஜென்மம் எடுத்திருக்கிறார் என்பதை கண்டுப்பிடிப்பார்கள் (1351 ல் முதல் தலாய் லாமா தோன்றினார்).


முந்தின தலாய் லாமாவான துப்டன் கியாட்ஸோ   1933 ஆம் ஆண்டு 57வது வயதில் காலமானார். அவருடைய சடலத்தைக் கிடத்திய போது தலை மட்டும் தென்கிழக்கு திசையில் திரும்பியிருப்பதைக் கண்டார்கள். மடத் தலைவரும் அரசாங்க பிரதிநிதியுமான கியூட்சஸ் ரின்போஷ் என்பவர் அருகிலிருந்த ஒரு ஏரியின் கரையில் உட்கார்ந்திருந்த போது 'அ,க,ம' என்ற எழுத்துக்கள் தண்ணீரில் மிதந்து வருவதைக் கண்டார். கூடவே ஒரு மூன்றடுக்கு மடாலயமும் சிறிய குடிசையும் தோன்றி மறைந்தன.

'அ' என்பது திபெத்தின் தென் கிழக்கிலிருந்த 'அம்டா' என்ற சிறிய பிரதேசம். 'க' என்பது அங்குள்ள 'கும்பம்' என்ற மடாலயத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்துக் கொண்டு அங்கே சென்றார்கள். மூன்றடுக்கு மடாலயமும் பக்கத்தில் குடிசையும் இருப்பதைக் கண்டார்கள். தங்களை யாரென்று காட்டிக் கொள்ளாமல் சும்மா வந்தவர்கள் போல அந்த குடிசைவாசிகளின் வீட்டில் தங்கினார்கள். மூன்று வயது சிறுவனாக இருந்த தலாய் லாமா அந்தக் குழுவின் தலைவரை 'செர லாமா செர லாமா' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார்'. அதுவே அவருடைய பெயர். எனவே அடுத்த தலாய் லாமாவை கண்டுப் பிடித்துவிட்டோம் என்று அவர்களுக்கு புரிந்தது. ஆனால் அங்கே ஏதும் சொல்லாமல் தலைநகரான லாசாவுக்கு சென்றார்கள். காலம் சென்ற லாமாவின் உடைமைகளையும் அவருக்கு சம்மந்தமில்லாத வேறு சில பொருட்களையும் கலந்து எடுத்துக் கொண்டு அதிகார பூர்வமான கோஷ்டியாக திரும்பி வந்தார்கள். முந்திய பெரியவரின் பொருட்களை சிறுவன் தனித்தனியே அடையாளம் காட்டியது அப்போதுதான்.

'லாமோ தோண்டப்' என்பது சிறுவனின் அன்றைய பெயர். முதலில் கும்பம் மடாலயத்தில் அவனைச் சேர்த்து பிறகு அவனுடைய குடும்பத்தாருடன் லாசாவுக்கு அழைத்துச் செல்ல முனைந்தார்கள். ஆனால் அது சுலபமாக இருக்கவில்லை. ஜமீந்தார் போல அங்கே ஆட்சி செய்த ஒரு சீன முஸ்லிம் எக்கச்சக்கமாக தொகை செலுத்தினால்தான் ஊரைவிட்டு அவர்கள் போகலாம் என்று நிபந்தனை விதித்தார். அந்த தொகையைச் செலுத்திவிட்டே புறப்பட்டார்கள்.

இந்த விவரங்களை தலாய் லாமா தனது சுய சரிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.

லாமோ தோண்டப் என்றால் 'அருள் புரியும் அம்மன்' என்று பொருள். ஆனால் எந்த அருளும் இல்லாமல் வறுமையில் வாடிய குடும்பம் அவர்களுடையது. 20 பேர்கள் கொண்ட மிகப் பெரிய குடும்பம். அவருடைய தாய் 16 குழந்தைகளைப் பெற்றார். 2 சகோதரிகளும் 4 சகோதரர்களுமே உயிர் வாழ்ந்தார்கள். தந்தை நல்லவர்தான் ஆனால் வறுமை காரணமாக கோபம் வரும். ஒருமுறை விளையாட்டாக அவருடைய மீசையை இழுக்கப் போய் அடி அடி என்று அடித்துவிட்டார் என்று தலாய் லாமா எழுதியிருக்கிறார்.

அவருக்கும் அவருடைய தமக்கைக்கும் வயது வித்தியாசம் 18. 'நான் பிறந்த போது என் அம்மாவுக்கு மருத்துவம் பார்த்தது என் அக்காதான். நான் கண் திறக்கவில்லை என்பதற்காக இமைகளை பலவந்தமாக இழுத்துத் திறந்தார். நல்ல காலமாக எந்த கெடுதலும் ஏற்படவில்லை' என்கிறார் தலாய் லாமா.
1940 ஆம் வருடம் பொட்டாலா அரண்மனை என்ற இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு திபெத்தின் ஆன்மீகக் குரு என பிரகடனப்படுத்தப்பட்டார். 'டாஃப்யு' என்ற முறைப்படி அவருக்கு மொட்டை அடித்தார்கள். காவி உடையை அணிவித்தார்கள் லாமோ தோண்டப் என்ற பெயர் மாற்றப்பட்டு 'ஜம்பல் கவாங் லாப்சங் எஷே டென்சின் கியாட்ஷோ' அப்போது அவருக்கு வைத்து ஐந்து (பிறந்த தேதி 1935 ஜூலை 6). பௌத்த மத சாஸ்த்திரங்கள், வைத்தியம், சமஸ்கிருத மொழி, தத்துவம், திபெத்திய கலை - கலாச்சாரம் முதலியவற்றை பயின்றார். சில வருடங்களில் சீனாவில் கம்யூனிச ஆட்சி வேரூன்றி திபெத்திய பகுதிகளை ஆக்கிரமிக்க தொடங்கியது. 80,000 பேர்கள் கொண்ட சீன ராணுவம் லாசாவை நெருங்கியது. திபெத்தின் ராணுவமோ வெறும் 8,500 பேர்களே கொண்டது எனவே தலாய் லாமா மதத் தலைவராக மட்டுமின்றி அரசாங்கத் தலைவராகவும் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. பல சமரச முயற்சிகள் நடந்த போதிலும் திபெத்தை விழுங்குவதிலேயே சீனா மும்முரம் காட்டியது.

தங்கள் இளம் தலைவரின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் பத்தாயிரக் கணக்கில் திபெத்திய மக்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்கு அரண் அமைத்துக் காவல் புரிந்தார்கள். தலாய் லாமா ஒரு சாதாரண மனிதர் போல் வேடம் பூண்டு இந்தியாவுக்கு வந்து பண்டிதர் நேருவை சந்தித்து திபெத்திய அகதிகள் மறு வாழ்வு பெற எல்லா உதவிகளையும் பெற்றார். தர்மசால என்னுமிடத்தில் அவருடைய 'அரசு' இன்று இயங்கி வருகிறது. ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்துப் பேசினார். அதெப்படி ஒபாமா அவருடன் பேசலாம் என்பது சீனாவின் லேட்டஸ்ட் கூச்சல்.

ரா.கி.ரங்கராஜன்                                             

No comments: