Tuesday, March 30, 2010

அன்னை செய்த பாவம்...

நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று  28.12.2006-ல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தொடர்பாக புதிதாக ஒரு சிறை ஆலோசனைக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அந்த ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளை இணைத்து, ஒரு கடிதத்தை சிறைத்துறை கூடுதல் டிஜிபி அனுப்பினார். 20.1.2010-ல் நடந்த சிறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில், நளினியை விடுதலை செய்வது தொடர்பாக, அந்த ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த வேலூர் கலெக்டர், வேலூர் முதன்மை செசன்சு நீதிபதி, சிறைத்துறை வேலூர் சூப்பிரண்டு, மண்டல நன்னடத்தை அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

சிறை ஆலோசனைக்குழுவின் 8 பரிந்துரைகள்

1. நளினி வழக்கு, சிறை ஆலோசனைக்குழுவின் பார்வைக்கு உரிய ஆவணங்களுடன் வைக்கப்பட்டது. வேலூர் மகளிர் சிறை சூப்பிரண்டு, சென்னையை சேர்ந்த நன்னடத்தை அதிகாரி, சென்னை கலெக்டர், உள்ளூர் போலீசார் மற்றும் உளவியல் நிபுணர் ஆகியோரின் அறிக்கைகளை ஆலோசனைக்குழு கருத்தில் கொண்டு பரிசீலித்தது.


2. ஆனால் இழைக்கப்பட்ட குற்றம் மிகவும் கொடூரமானது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிக்கு நளினி புகலிடம் அளித்துள்ளார். அவருடனேயே இருந்து, ராஜீவ்காந்தி உள்பட 18 பேர் கொல்லப்பட வகுக்கப்பட்ட சதித்திட்டத்தின் அங்கமாகவே செயல்பட்டு இருக்கிறார். இந்த கொலைத்திட்டம் பற்றி அவருக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நன்கு அறிந்திருந்த அவர், முன்னாள் பிரதமர் கொலை செய்வதற்காக உதவி புரிந்துள்ளார். இலங்கையை சேர்ந்த அவரது கணவருக்கு, இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


3. அவர் சிறையில் இருந்த காலத்தில் நிறைய பட்டங்களையும், பட்டயங்களையும் படித்து பெற்றுள்ளார். ஆனால், இதுவே அவர் மாறிவிட்டார் என்பதற்கு சான்றாகாது. இப்போதும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. அவரது செய்கைக்கு அவர் வருந்தவே இல்லை.


4. நளினியின் தாயும், சகோதரரும் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.


5. சிறைக்கைதி நளினியின் தாயார் வசிக்கும் எல்லைக்குட்பட்ட ராயப்பேட்டை காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர், நளினியின் தாயார் வசிக்கும் ராயப்பேட்டை கங்கையம்மன் கோவில் தெருவை சுற்றிலும் மிக மிக முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர் இல்லங்கள் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை அமைந்துள்ளன. நளினி விடுதலை செய்யப்பட்டு அவரது தாயாருடன் வசிக்க அனுமதிக்கப்பட்டால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும்.


6. ஒரு குழந்தையின் தாய் என்ற அடிப்படையில் சிறைவாசி 20.1.2010 அன்று அளித்த மனுவை, மேற்கூறிய காரணங்களால் ஏற்கமுடியாது.


7. தேசத்துக்கு எதிராக அவர் செய்துள்ள குற்றம் மற்றும் மேற்கூறப்பட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, அவர் 18 ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்றதன் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்கப்படாது.


8. நளினியின் சமூக பின்னணி, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சூழல், குற்றத்தின் தன்மை ஆகியவற்றைக் கொண்டு பார்க்கையில், முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு இந்த வழக்கு பொருத்தமுடையதல்ல.


இதனையும், நன்னடத்தை அதிகாரி, உளவியல் நிபுணர், வேலூர் சிறை சூப்பிரண்டு ஆகியோரின் அறிக்கைகளையும் அரசு கவனமாக பரிசீலித்தது. நன்னடத்தை அதிகாரி, ராயப்பேட்டையில் வசிக்கும் நளினியின் தாயார், சகோதரர், அவரது மனைவி ஆகியோரிடம் மேற்கொண்ட விசாரணையில், நளினி விடுதலை செய்யப்பட்டால் தாயாருடன் நளினி வசிப்பார் என்று கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில் நளினியை விடுதலை செய்ய நன்னடத்தை அதிகாரி பரிந்துரைத்தார். ஆனால், நளினியின் தாயார் வசித்த இடத்தின் எல்லைக்குட்பட்ட ராயப்பேட்டை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரோ, நளினி அங்கு வசித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ஜனவரி 20-ந் தேதி நடந்த சிறை ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மண்டல நன்னடத்தை அதிகாரி, ராயப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டரின் அறிக்கையையும், நன்னடத்தை அதிகாரியின் அறிக்கையையும் பரிசீலித்தார். முடிவில், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான பரிந்துரை பொருத்தமானது அல்ல என்று அவர் கருதினார்.

மேலும், நளினியை விடுதலை செய்யலாம் என்று பரிந்துரைத்த உளவியல் நிபுணர், அதற்கான உறுதியான காரணங்களையும் வெளியிடவில்லை. மேற்கண்ட அனைத்தையும் பரிசீலித்த அரசு, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என்னும் சிறை ஆலோசனைக்குழுவின் பரிந்துரையை ஏற்க முடிவு செய்துள்ளது. எனவே, நளினியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.


"வினையை விதைத்தால் தினையா விளையும்" என இந்திய மக்கள் முனகுவது கேட்கிறது. இருந்தாலும் அரித்ரா எனும் குழந்தை என்ன பாவம் செய்தது என்றும் பெருமூச்சு விடுகிறார்கள். 

2 comments:

Revolt said...

"வினையை விதைத்தால் தினையா விளையும்" Your comment suitable for Priyanka Gandhi and Rahul Gandhi also.

ஜகதீஸ்வரன் said...

அன்னையின் குற்றத்திற்காக வருந்தும் சேயை காப்போம்....