Saturday, March 6, 2010

அந்த நாளை கொஞ்சம் நினைப்போம் !

இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். 

பல்வேறு விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்த நாள் (06.03.1967).

அறிஞர் அண்ணா என்கிற மாமேதைக்கு தமிழ் அன்னை மகுடம் சூட்டி மகிழ்ந்த நாள்.
உலகத் தமிழர்கள் தமிழன் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்ததாக எண்ணிக் களித்த நாள்.
தமிழன் தலைநிமிர்ந்து நடக்கவும் அன்னைத் தமிழ் உலக மொழியாக சிறக்கவும் வழிப் பிறந்துவிட்டதாக பேருவகை அடைந்த நாள்.

இந்த இனிய நாளில் அறிஞர் அண்ணா என்கிற வரலாற்று நாயகனின் வாழ்க்கை குறிப்புகள் சிலவற்றை திரும்பிப்பார்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இக்குறிப்புகள் ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டனுக்கும், அவர்களை வழிநடத்துகிறோம் என வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டிருக்கும் தலைவர்களுக்கும் ஒரு பாடமாக அமையுமென நம்புவோம்.

இழுபறித் தமிழும் இருமற்தமிழும் கேட்டுச் சலித்த இளம் நெஞ்சங்கள் அண்ணாவின் தமிழ் கேட்டு பத்திரம் எழுதித் தராத அடிமைகளாயினர் அந்த நாளில். தன்னைப் பற்றி எழுதினாலோ பேசினாலோ கண்டு கொள்ளாத தலைவர்கள் சிலர் உண்டு. ஆனால் தரக்குறைவாகவோ, படுகேவலமாகவோ எழுதினாலும் பேசினாலும் தாங்கிக் கொள்ளும் 'தறுகண் பேராண்மை' அறிஞர் அண்ணாவிற்கே உரியது.


ஒரு தடவை காஞ்சிபுரத்தில் அண்ணாவின் வீட்டிற்கெதிரே அவரது சாதியைப்பற்றி கேவலமாக சுவரில் எழுதி இருந்தார்கள் சிலர். அதற்கு அண்ணா என்ன செய்தார் தெரியுமா? இரவில் அந்தச் சொற்கள் புலப்படாமல் போகுமே என்பதற்காக பெட்ரோமாக்ஸ் விளக்கு ஒன்றை அருகில் வைக்கச் சொல்லி 'விளக்கு உபயம் அண்ணாதுரை' என்று எழுதிவைக்கச் சொன்னார். 'வெட்கம்' அந்த சுவர் எழுத்தை எழுதியவர் கையாலேயே அழிக்கச் செய்தது.

''மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'' என்பது அண்ணாவின் கலாப வார்த்தைகள் மட்டுமல்ல.... அவர்தம் செயல் வயலில், நாற்றங்கால் முளையாய், கதிர் குலுங்கும் பயிராய் நின்றவை.

பண்டிதர் நேருவை அவர் குறைகூறாத நாளில்லை எனினும் "நேரு கட்டி முடிந்த கோபுரம்; நானோ கொட்டிக் கிடக்கும் செங்கல்" என்றார் அண்ணா.

ஆட்சி பீடம் ஏறுவதற்கு முன் அன்றாடம் விமர்சன வில்லெடுத்து காமராஜரை தாக்கியது அண்ணாதான். ஆனால் பதவி ஏற்றதும் தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் காமராஜரின் படத்தை திறந்து வைத்து "ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் அயராத உழைப்பால் ஏற்றமிகு பதவிப் பெற்றவர்" என்று அவரை வர்ணித்தார்.

கவிஞர் கண்ணதாசன் அண்ணாவைவிட்டு பிரிந்து போய் சுடுகணை பாய்ச்சிவந்த நேரத்தில், கவிஞர் வேழவேந்தனின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது தமிழ் இலக்கிய வரலாற்றை குறிப்பிட்டுவிட்டு "தமிழ் இலக்கியத்தை பற்றி பேசுகிறபோது கவிஞர் கண்ணதாசனின் பெயரைச் சொல்ல மறந்தால் நான் தமிழை அறியாதவனாவேன்" என்றார் அண்ணா.

அரசியலுக்கப்பால் அண்ணாவின் பொருளாதாரப் பார்வை, குறிப்பாக விலைவாசியைப் பற்றிய அணுகுமுறை ஆழமானது; அழுத்தமானது; தனித்தன்மைக் கொண்டது. "எனக்குமுன் முதலமைச்சராக இருந்தவர்கள் பிரமச்சாரிகள் அல்லது சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளைகள்! சமையலறைச் செலவு அவர்களுக்கு தெரியாது. ஆனால் நான் அன்றாடங்காய்ச்சி குடும்பத்திலிருந்து வந்தவன் இப்போது ஆட்சியும் வசதியும் வந்துவிட்டது என்பதற்காக கோடிக்கணக்கான  அன்றாடங்காய்ச்சிகளை மறந்துவிடக் கூடாது அல்லவா?" என்றார். இந்தச்  சிந்தனைப் போக்கில்தான் அவர் தமது கட்சி கொள்கையைக்கூட சட்ட மன்றத்தில் அறிவித்தார்...."நாங்கள் முதலாளிகளின் கட்சியுமல்ல தொழிலாளிகளின் கட்சியுமல்ல வாங்கி உண்போர் கட்சி"! எனக் குறிப்பிட்டார்.

வாங்கி உண்போரின் உணர்வு (Consumer Conscious) என்பது அண்ணாவுடைய கொள்கை. ஆனால் அது கைதவறி போய்விட்டது சமிப நாட்களில். வாக்களிப்போர் எனும் எறும்புக் கூட்டத்திற்கு சர்க்கரை போடுகிற அன்ன தாதாக்களே அரசியலில் இன்று ஆதிக்கம் பெற்றுள்ளனர். என்ன செய்ய?.    

திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் தன்னை மீள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நாளாகவும் இதை புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அண்ணா வழியில் இந்த இயக்கத்தை ஓரளவு வெற்றிகரமாக நடத்தி வருவது  மகிழ்ச்சியை தருகிறது. நாளைய தலை முறை தலைவர்கள் இதனை 'புதிய பார்வையின் புதிய பாதையில்' தொடர வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் விருப்புமாகும்.    
தமிழ்க்குடி             

1 comment:

Nilavan said...

// இன்றைய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அண்ணா வழியில் இந்த இயக்கத்தை ஓரளவு வெற்றிகரமாக நடத்தி வருவது மகிழ்ச்சியை தருகிறது //

ஏதோ விமர்சிக்கப் போகிறீர்கள் எனப் பார்த்தால் கலைஞருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு வருங்கால திமுக தலைவர்களுக்கு உபதேசம் செய்து விட்டுச் செல்கிறீர்களே ?!

கலைஞர் இருக்கும் பொழுது காசு கொடுத்து ஓட்டு வாங்கும் இக்கட்சி பின் எப்படி இருக்கும் ?!