Saturday, March 27, 2010

சின்னச் சின்ன துவக்கம்

ஒரு கதையோடு கண்விழிக்கிறது இந்தத் தொடர்...

கதைகள் எல்லாமே வெறுங்கதையல்ல. கதைக்குள்ளே வாழ்க்கை மேம்பாட்டிற்கான விதையும் உள்ளது. விதைக்குள் தானே விருட்சம் உள்ளது. விருட்சம்தானே நம்மையெல்லாம் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த மண்ணிலும்... இந்த மண்ணில் வாழ்ந்து உயர்ந்த மாமனிதர்களின் வரலாற்றுக்குப் பின்னும் ஏதேனும் ஒரு வெற்றிக் கதை இருக்கும்.

ஆம்! நாம் அனைவரும் கதை கேட்டு வளர்ந்த கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் உரியவர்கள்.

அன்னை ஜீஜிபாய் சொன்ன வீரக்கதைகள்தான் மராட்டிய மாவீரன் சிவாஜியை சக்கரவர்த்தியாக உருவாக்கியது.

அண்ணல் காந்தியடிகளின் பிஞ்சு மனத்தில் ஆழப்பதிந்த அரிச்சந்திரன் கதைதான் அவரை மகாத்மாவாக மாற்றிக் காட்டியது.


பெரிய புராணக் கதைகள்தான் சாதாரண வெங்கட்ராமனாக இருந்த சிறுவனை மகான் ஸ்ரீரமண மகரிஷியாக மாற்றிக் காட்டியது.

இப்படி கதைகள்தான் தேசத்தின் வெற்றிச் சிகரங்களில் பலரை உலாவரச் செய்திருக்கிறது.

இப்போது சொல்லப்போவது ஒரு ஜென் கதை. அது என்ன புதிதாக இருக்கிறது என்கிறீர்களா? "ஜென்'' என்பதே யதார்த்தம். அதாவது இயல்பானது.. எளிமையானது.. நிகழ்வுகளால் ஆனது. நம் அனைவருக்குள்ளும் இருப்பது. நமது கண்களை நாம் அதற்குப் பழக்கவில்லை அவ்வளவே.

ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற வேண்டி ஒருவன் வந்தான்.

'ஐயா! நான் ஞானோதயம் பெற விரும்புகிறேன். அதற்கு எவ்வளவு காலம் ஆகும்?'

'எப்படியும் பத்து வருடங்கள் ஆகும்' என்றார் குரு. 'என்ன பத்து ஆண்டுகளா?' அதிர்ச்சியில் கேட்டான் அவன்.

'தோராயமாகச் சொன்னேன். சரியாகச் சொன்னால் இருபது வருடங்கள் ஆகும்'.

'என்ன? இரட்டிப்பாகச் சொல்கிறீர்களே'. கோபப்பட்டான் அவன்.

'இன்னும் துல்லியமாகக் கணக்கிட்டால் முப்பது வருடங்கள் ஆகும்' என்றார் குரு.

"ஞானம் என்பது சென்றடையும் ஓர் இடமோ, முயன்று கைப்பற்றும் ஓர் இலக்கோ அல்ல. அது பயணம். வெறும் பயணம்தான். வேகமான பயணம். வழியிலுள்ள காட்சிகள் எதையும் காணவிடாது. வெகுசீக்கிரம் எதையும் கற்க வேண்டும் என்று எண்ணும் போது எதையுமே சரிவர அறியமுடியாது போகும். சிறியதிலிருந்துதான் பெரியது உண்டாகும். மவுனத்திலிருந்துதான் ஓசை உண்டாகும். இதை உணர்வதுதான் ஞானம்'' என்கிறது இந்த ஜென் கதை.

ஆம்! எதையும் உடனடியாக அடையமுடியாது. அப்படி ஒரு வேளை அடைந்தாலும் அது நீண்ட நாள் நீடித்திருக்காது என்பதுதான் இதிலிருந்து கற்றுக் கொள்கிற பாடம்.

இப்போது கதை...

ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார். நிதானமாகவும் அதே சமயம் அவர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்த வேகம் மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே இருக்கிறார்'' என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து 'அதைத் தூக்கி வெளியே கொண்டு போய் வை' என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன் அதன் கனம் தாங்காமல் தவித்தான். 'தூக்க முடியவில்லை' என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

'இப்போது கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சமாகக் கொண்டு வை' என்றார் ஞானி.

அவனும் அவ்வாறே கொண்டு வைத்தான். விரைவில் விறகுகள் இடம் பெயர்ந்தன.

`உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான், ஒரேயடியாக உன் மூளைக்குள் திணித்தால் நீ திணறித்தான் போவாய். கொஞ்சம் கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால் அது நிரந்தரமாக உன் மனதில் தங்கும்" என்று விளக்கினார் ஞானி. மாணவன் புரிந்து கொண்டான்.

மாணவப் பருவத்தில் இருக்கின்ற அன்பான இளைஞர்களே! சீன ஞானி ஒருவர் உங்களுக்காகச் சொன்ன ஒரு கதையை நினைவுபடுத்துகிறேன். உங்கள் வெற்றிக்கு இந்தக் கதை மிகவும் உதவும்.

நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால், 'சுமையாக இருக்கிறது' என்பதுதான் பலரின் பதிலாக இருக்கின்றது.

படிப்பது சுமையல்ல. சுகம்தான் என்கிறது இந்தக் கதையின் நிகழ்வு.

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோள் மேல் போட்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான்.

ஊரே அவனைப் பாராட்டியது. இன்னொரு பக்கம் ஆச்சரியப்பட்டது. எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க முடிகிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

'ரொம்பவும் சுலபம்தான்' என்றான் அவன்.

'எப்படி?'

"இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை'' என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம் படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத் தெரியாது. சுகமாகத் தெரியும். அத்துடன் ஈடுபாடும், சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து நிகழ்வது அல்ல. எல்லாவற்றின் மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.

இதுதான் உண்மை. இது மாணவர்களுக்கான கதை மட்டுமல்ல. அனைவருக்குமான வாழ்க்கைப் பாடம்.

எந்தச் செயலையும் எடுத்த உடனேயே செய்து முடிக்க முடியாது. அவசரப்படக் கூடாது. அவசரம் ஆத்திரத்தில் போய் முடியும். ஆத்திரம் கோபத்தையும், கோபம் பல விளைவுகளையும் உண்டாக்கும்.

சின்னச் சின்ன துவக்கம்தான் பெரிய வெற்றிக்கு அடித் தளமாகும்.

இரண்டு கைகளால் அணைத்துப் பிடிக்க முடியாத மரம் சிறிய குருத்தாகத் தான் வளர்கிறது.

ஆயிரம் மைல் பயணம் எடுத்து வைக்கும் முதல் அடியிலிருந்து தான் துவங்குகிறது.

பதினான்கு மாடிக்கட்டம் கைப்பிடி அளவு மண்ணிலிருந்துதான் உருவாகிறது.

மரங்கள் ஒவ்வொன்றும் சேர்ந்துதான் தோப்பாகிறது.

எழுத்துக்கள் சேர்ந்துதான் வார்த்தையாகின்றது.

வார்த்தைகள் சேர்ந்தால்தான் நூலாகின்றது.

நூல்கள் சேர்ந்தால்தான் நூலகமாகிறது.

நூல் இழைகள் சேர்ந்தால்தான் ஆடையாகிறது. அந்த ஆடைதான் மானங்காக்கிறது.

ஆழ்ந்து சிந்திக்கும்போதுதான் சின்னச் சின்ன துவக்கத்தின் மகிமை புரியும். எந்தச் செயலும் தாமாக நிகழ்வதில்லை. நாம் உயிர் வாழ வேண்டுமானால் நாம்தான் சுவாசித்தாக வேண்டும். நாம்தான் உணவு உண்ண வேண்டும். நமக்காகப் பிறர் செய்ய முடியாது. அதைப்போல் எந்தச் செயலையும் நாம்தான் துவக்க வேண்டும். முன் கூட்டியே திட்டமிட வேண்டும். முதலில் செய்யப்போகும் செயலை மனக் கண்ணால் பார்க்க வேண்டும். பிறகு ஒரு தாளில் எழுத வேண்டும். அப்போதுதான் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றும் தென்படும். அதிலிருந்து ஒரு தெளிவு பிறக்கும்.

சரி. எல்லாம் முடிவாகிவிட்டது. எப்படித் துவக்குவது? என்ற கேள்வி பிறப்பது இயல்பே. குழப்பமே வேண்டாம். சின்னதாகத் துவக்குங்கள். சின்னதாகத் துவக்கும்போது ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் உடனே சரி செய்து விடலாம். இதனைத் தான் திருவள்ளுவர்.

"இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து''


என்கிறார்.

முள் மரத்தை வளரவிடாதே. சின்னதாக இருக்கும்போதே வெட்டிவிடு. ஏன் அப்படிச் சொல்கிறார்? கருவேல மரங்களை வளர விடுவோமானால் அதன் முள் கிளைகள் கீழே விழுந்து பின்னால் நாம் அதை நெருங்கக்கூட முடியாது என்பதுதான் இக்குறளின் பொருள்.

எந்தத் தவறையும் சிறியதாக இருக்கும்போதே திருத்திக் கொள்ள முடியும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்கிற பழமொழியும் இதைத்தான் உணர்த்துகிறது. ஆலமரத்தின் விதை எவ்வளவு சிறியது! ஒரு கடுகு அளவுக்குக்கூட இருக்காது. அந்த ஆலவிதைதான் முளைத்து வளர்ந்து ஒரு ஊருக்கே உட்கார நிழல் தருகின்றது. இதுபோல் செய்யும் சிறு சிறு தர்மங்கள், தானங்கள் இவை பெரும் பலன்களை அளிக்கக் கூடியவை.

விமானம் பறப்பதைப் பார்க்கின்றோம். விமானி அதைத் திருப்புவதற்கு 'எயில்ரால்' எனப்படும் அதன் சிறிய வால் பகுதியை எதிர்ப்புறம் திருப்புவார். வால் வலப்புறம் திரும்பினால் விமானம் இடப்புறம் திரும்பும்.

கடலில் நீந்தும் சுறாக்களும், திமிங்கலங்களும் இப்படித்தான் தன் சிறிய வால் துடுப்பினால்தான் தன் திசையைத் தீர்மானிக்கின்றன.

ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தில் இருந்துதான் புயல் உண்டாகிறது. கங்கை, யமுனை போன்ற நதிகளின் உற்பத்தி மூலத்தை நதி மூலம் என்பார்கள். அங்கு போய்ப்பார்த்தால் ஒரு கையகல இடத்தில் இருந்து சிறு ஊற்று பீறிட்டுக் கொண்டிருக்கும். இந்த சின்னஞ்சிறு ஊற்றா இவ்வளவு பிரம்மாண்டமான நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடுகிறது என்ற வியப்பு ஏற்படும்.

உண்மை அதுதான். இயற்கையின் முயற்சியில் சிறியதிலிருந்தே பெரியது வரும்.
பேராசிரியர் க. ராமச்சந்திரன்

No comments: