Saturday, March 13, 2010

புதிய சட்டசபை திறப்பு விழாவுக்கு ஜெகத்ரட்சகன் வாழ்த்து

"விதை நட்டாய்-தலைவா! அதன்- விளைச்சலையும் பார்த்து விட்டாய்''
என்று புதிய சட்டசபை திறப்பு குறித்து ஜெகத்ரட்சகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-


அனைத்துலகத் தமிழர்களின் அஞ்செழுத்து மந்திரமே! அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த ஆரூரின் சுந்தரனே!. சொல்லுக்குப் பொருள்சேர்க்கும் சூத்திரங்கள் கற்றவனே!-தமிழ் மண்ணுக்குப் புகழ்சேர்க்க மங்கலமாய் வந்தவனே! விண்ணுக்கும் மண்ணுக்கும் விசுவரூபம் எடுத்தது போல் கண்ணுக்குள் அடங்காத கவினார்ந்த கட்டிடத்தை தலைநகரில் உருவாக்கித் தனிப்புகழ் பெற்றுவிட்டாய்! இனிப்புகழ் உனக்கு எதுவும் தேவையில்லை!

வியப்பின் வியப்பாக விஞ்ஞானத் திகைப்பாக, சிறப்பின் சிறப்பாக அழகின் சிரிப்பாக- வானத்தை அளக்கும் வண்ண நிலவாக ஞானத் தமிழகத்தின் ஞாபகக் கலையாக- காலத்தின் ஆராய்ச்சிக் கண்களுக்குப் புதிராக- 'கலைஞர்' எனும் சகாப்தம் கட்டிவைத்த சுடராக- பிரமாண்டம் ஒன்று பெருமிதமாய் நிற்கிறது! பிரபஞ்ச அதிசயமாய்ப்... பேசிக் கொண்டிருக்கிறது!

பேசரிய நுண்ணறிவின் பெட்டகமே! என் தலைவா! பெரியார் வழியில் பீடுநடை போடும் நீ அண்ணா சாலையை அலங்காரம் செய்துவிட்டாய்! அகங்காரம் இல்லாத அறிவுச் சூரியனே! அருந்தமிழ் காணாத ஆழம் கொண்டவனே!. அன்றாடம் முரசொலியை ஆயுதக் கிடங்காகக் கடிதமெனும் பெயரில் கட்டிவரும் மன்னவனே!


உச்சித் திலகமாய் உயர்ந்திருக்கும் உன்னை மெச்சித் துணைக்கண்டம் மென்மேலும் புகழ்பாடும்! மத்தாப்பு மழைகொட்டும் மகிழ்ச்சிப் பொழுதுகளின் முத்தாய்ப்பாய்...நீ படைத்த முத்திரையை பாராட்டும் முத்தமிழ்த் தலைவனே...!. நீ- எதைத் தொட்டாய் எதை விட்டாய் எனச் சொல்ல முடியாமல் துறைதோறும் தன் புலமை தொட விட்டாய்!

ஐம்பதாண்டுப் பட்டறிவைப் பட விட்டாய்! தனித்துவம் என்னும் தமிழ்க் கொடியை நட விட்டாய் கதை விட்ட பலபேர்கள் கதை முடித்து-முன்னேற்ற விதை நட்டாய்!-தலைவா! அதன்- விளைச்சலையும் பார்த்து விட்டாய் வள்ளுவனின் அடியும் பெரியாரின் தடியும் அண்ணாவின் பொடியும் ஒன்றாகச்செறிந்த உன்னதக் கலவையை! இதைவிடப் பாக்கியம் என்னவேண்டும் உனக்கு!

வாக்கியம் அனைத்துக்கும் வர்ணங்கள் பூசும் வாலிபத் தலைவனே!-நீ ஆக்கிய அறிவுச் சின்னங்கள் அனைத்தும்-உன் அறிவுப்பேழையில் தேக்கி வைத்திருந்த செழித்த சிந்தனையின் சித்திரச் சுவடுகள் அல்லவா?

கல் தடங்கள் முள் தடங்கள் கடந்து நீ சமைத்த கட்டிடங்கள் யாவும் உன் கலைஞானப் பரிசுகள் அல்லவா?. பத்தினிக் கோட்டமோ பாஞ்சாலங் குறிச்சியோ வள்ளுவர் கோட்டமோ வானுயர் சிலைகளோ கோட்டைக் கொத்தளமோ கோலமணி மண்டபமோ- எதுவாய் இருந்தாலும் அஸ்திவாரம் என்பதை 'மண்ணில்' போடுவதற்கு முன்- 'உன்னில்' போட்டுத்தானே உருவாக்குகிறாய் நீ!

கண்ணில் படம்போட்டுக் கற்பனையில் மெருகிட்டு எண்ணத்தில் வண்ணங்கள் எத்தனையோ முறை தீட்டி- அத்தனையும் திருப்தியென்று ஆனபின்பு தானே... இத்தரையில் அஸ்திவாரம் இட்டு நீ... ஜெயிக்கின்றாய்! வடநாட்டில் ஓர் இமயம் வாழ்கிறது என்பதற்காய் தென்னாட்டின் இமயமெனத் திருவள்ளுவர் சிலையை முக்கடலும் சங்கமிக்கும் முற்றத்தில் நீ வைத்தாய்!

குலமலை-கோலமலை, குளிர் மாமலை- கொற்ற மலை- நில மலை-நீண்ட மலை- நீ படைத்த குறள் மலையன்றோ குமரியிலே நின்கின்ற- அந்தக் குலவு தமிழ் மலை! பிரளயத்தின் பேருருவாய் வந்த ஆழிப் பேரலையிலும் அசையாது நின்றதே அம்மலை...! அப்போது அதைப் படைத்த 'செம்மலை' அல்லவா, செந்தமிழ் நாட்டின் சிந்தையெலாம் நினைந்து செம்மாந்து நின்றது! உன் கொள்கை உறுதியும் குன்றின் உறுதியும் மனத்தின் உறுதியும் மலையின் உறுதியும் அன்றுமுதல் இன்றுவரை ஒன்றுதான் தலைவா!

வெற்றி புரிக்குச் செல்ல வேண்டும் என்றால் வேதனை புரத்தைத் தாண்டித்தான் ஆகவேண்டும் என்றார் அண்ணா! நீயோ வேதனையை வெட்டித் தள்ளி சோதனையை நெட்டித் தள்ளி சாதனைப் பட்டியலைக் கோபுர உயரத்துக்குக் கொட்டி வைத்திருக்கிறாய்-

எட்டிவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஓயாத உழைப்பை ஓட்டி வைத்திருக்கிறாய்! எண்பது கடந்தாலும் எப்போதும் நீயந்த ஒன்பது கோளாக உலகத்தைச் சுற்றுகிறாய்! கங்கைநதி பாய்ந்தாலும் காவிரியே பாய்ந்தாலும் வியர்வைநதி பாயாமல் விமோசனம் இல்லையென உலகுக்குக் கற்பிக்கும் உன்னதத் தலைவனே!

தென்னகத்தின் மேருவெனத் திசையெட்டும் புகழெட்டும் தஞ்சைப் பெரியகோயில் தந்தவனைப் போல- வெள்ளப் பெருக்காலே வெள்ளாமை கெட்டதனால்- காவிரிக்குக் கரைகட்டி- கல்லணையும் கட்டி- பூவிரித்துப் புகழ்கொண்ட கரிகாலன் போல- புகழின் ஓவியங்கள் பொற்காலக் காவியங்கள் அறிவியல் கூடங்கள் அழகாய்ப் படைத்தவரும்-உன் அற்புதங்கள் ஒருபோதும் அழியாது தலைவா!


எதிலும் சித்திரம் நீ! எதிலும் விசித்திரம் நீ! எங்கெங்குத் தொட்டாலும் இயங்கும் சரித்திரம் நீ! தமிழ்நாட்டின் வரைபடத்தைத் தமிழைப்போல் எழிலாக மாற்றி கொடுத்திருக்கும் மகத்தான கலைஞன் நீ! சட்டசபை பொன்னேட்டில் சாதித்த சாதனையும்- சட்டசபை உருவாக்கி சமர்ப்பித்த சாதனையும்- மண்ணும் கடல், வானும் மாத்தமிழும் உள்ளவரை நின்று வாழ்ந்திருக்கும் நிலையாக!- கூடவே நீயும் வாழ்ந்திருப்பாய் கலையாக!.

இவ்வாறு எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியிருக்கிறார்.

No comments: