Saturday, March 20, 2010

தேர்வுகள் வாழ்வின் திறவு கோல்கள்


ரு சுகமான தேடல். ஒவ்வொரு தேடலிலும் நமக்கான ஒன்று கிடைக்கின்றது.

வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்தலிலும் ஒரு தேர்வு உள்ளது. எதிர்காலத்திற்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தேர்வுதான். ஆட்சிப்பணி, மருத்துவர், பொறியாளர், பேராசிரியர், அறிவியல் விஞ்ஞானி என்ற உயரிய பதவிகளை அடைவதற்குக் களம் அமைத்துத்தருவது தேர்வுகள்தான்.

இந்தத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகிறவர்கள் வெற்றியடைகிறார்கள். வாழ்க்கை என்னும் பெருங்கடலில் கரைசேர மதிப்பெண்கள் கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகின்றன.


இளம் பருவம் வாழ்வின் முக்கியமான பருவம். எதிர்கால வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் உன்னதமான பருவம்.

வாழ்தல் என்பது ஒரு நோக்கத்திற்காக, ஒரு குறிக்கோளுக்காக இடைவிடாமல் உயிர்த்துடிப்புடன் தேடக்கூடிய தேடலாகும். இந்தத் தேடலில் முதல்படி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிப்படுத்துவது தான்.

நீங்கள் என்னவாகப் போகின்றீர்கள் என்பதை முதலில் தீர்மானியுங்கள். அதுவே உங்களது முதல் தேர்வாக இருக்கட்டும்.

தேர்வு என்றதுமே பலர் பயப்படுகிறார்கள். முதலில் போக்க வேண்டியது இந்தப் பயத்தைத்தான். இதை வெற்றிக்கான சவாலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

முழுமையான அக்கறையும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் இருந்தால் எந்தத் தேர்வையும் எளிதாகச் சந்திக்கலாம். இதுவும் உங்களுக்குள்ளேதான் இருக்கின்றது.

சிறு வயதில் செய்த சோதனை ஒன்று...

சுட்டெரிக்கும் கோடைக்காலம். பூமியின் மடியில் கிடக்கின்றன மரத்தின் இலைகளும், கிளைகளும், சரு காய்ப்போன அவை வெயிலில் எரியவில்லை. கண்ணாடி லென்ஸ் ஒன்றை சூரியனின் கதிர்களை காய்ந்திருந்த சருகுகளின் மீது ஒரு புள்ளியாய்க் குவித்தேன். என்ன ஆச்சரியம்! சிறிது நேரத்தில் புகை வெளிவந்தது. அடுத்த சில நொடிகளில் நெருப்புப் பற்றிக்கொண்டது. மனசெல்லாம் மத்தாப்புப் பூக்கள் மலர்ந்தன.

மாயமா? மந்திரமா? எப்படி நெருப்பு உண்டானது? எதுவும் இல்லை. ஒருமுகப்படுத்துதல்தான்.

ஆம்! சூரியக்கதிர்களை ஒரு புள்ளியில் ஒருமுகப்படுத்தியதுதான். இதுபோல் உங்களுடைய இலக்குகளைக் கண்டுபிடியுங்கள். அதன் மீது உங்கள் ஆற்றலைக் குவியுங்கள்.

உங்கள் தோல்விகளின் மீது வெற்றி மாலைகள் குவியும். இதுதான் வெற்றி. இந்த வெற்றியை எப்படிப் பெறுவது என்கிறீர்களா? துணிவுதான். ஒரு கதை -

வெளியே அசுரமழை. நிற்காமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. மரத்தில் கட்டியிருந்த கூட்டிலிருந்த ஒரு குருவி வெளியே பறக்கத் தயாரானது. தாய்க்குருவி தடுத்தது.

"இந்த மழை தொடர்ந்தால் வயல்கள் எல்லாம் மூழ்கி உண்ணுவதற்கு ஒரு மணியும் கிடைக்காது. நீங்கள் உயிர்த்திருந்தாலும் பசியில் மரிப்பீர்கள். பசியில் மரிப்பதிலும் உழைப்பில் மரிப்பது உன்னதமானது. முடிந்தால் தப்பித்துத் தொலைதூரம் செல்வேன்'' என்று சொல்லிவிட்டுப்பறந்தது அந்தக்குருவி.

பறந்து சென்ற பறவை ஜெயித்தது. வெற்றி கீதம் இசைத்தது. எட்டிப்பறக்கிறவர்கள்தானே வெற்றிக் கனிகளைத் தட்டிப்பறிக்கின்றார்கள். இலக்கைத் தேர்வு செய்த பின்னர் `துணிவு' தேவை என்பதை இந்தக்கதை உணர்த்துகின்றது.

உலக வரலாற்றில் எல்லா வெற்றிகளும் இரண்டு வார்த்தைகளால் தான் எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்று உழைப்பு... இன்னொன்று தன்னம்பிக்கை.

எந்த வெற்றிக்கும் இதுதான் அடிப்படை. இந்த இரண்டையும் மூலதனமாகக் கொண்டு வெற்றி பெற்ற ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன். காரணம் அவர் உங்களில் ஒருவர். அவர் தான் வீரபாண்டியன்.

இரண்டாயிரம் புதிய நூற்றாண்டின் தொடக்கம். அந்த ஆண்டில் 2 தேர்வு முடிவுகள் வந்திருந்த நேரம். "புரோட்டாக்கடையில் வேலைபார்க்கும் பையன் புவியியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம்''என்று செய்தி வெளியாகி இருந்தது.

பேட்டி காண்கிறார் பத்திரிக்கையாளர். `நான் ஐ.ஏ.எஸ் ஆவேன்' என்கிறார் மாணவர். எல்லோருக்கும் ஆச்சரியம். கேட்டவர்கள் வியந்து போகிறார்கள். சிலர் இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று ஏளனம் செய்கிறார்கள்.

இவர்களின் ஆச்சரியத்திற்குக் காரணம் உள்ளது. வறுமை...வறுமை... புரட்டிப்போடுகிற குடும்பத்தின் வறுமை. ஆம், மழை பெய்தால் வீட்டுக்குள்ளும் மழை பெய்யும், வெள்ளம் வந்தால் வீட்டுக்குள்ளும் வெள்ளம் வரும். மதுரை வைகைக்கரையில் வீடு.

தந்தை கணேசனுக்கு கூடையில் பாத்திரங்களை சுமந்து வீதி வீதியாய் விற்று வரும் வேலை. தாய் பெருமாள்அம்மாள். அரவிந்த் கண் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்ப்பவர். குடும்பத்தின் மொத்த மாத வருமானம் இரண்டாயிரத்தைத் தாண்டியது இல்லை.

வறுமை... வேலைக்குப் போய்த்தான் படிக்க வேண்டும். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் புரோட்டா கடைக்கு ஓடவேண்டும். இரவு ஒரு மணிவரை வேலை. அதன்பின் லேசான தூக்கம். விடியற்காலையில் எழுந்தால் தான் படிக்க நேரம் கிடைக்கும். இப்படிக்கிடைத்த சொற்ப நேரத்தில் மாநகராட்சிப்பள்ளியில் படித்துத்தான் புவியியல் பாடத்தில் 200-க்கு 197 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஆச்சரியப்பட்டவர்கள் இன்று ஆனந்தத்தோடு அரவணைக்கிறார்கள். காரணம் இன்று வெறும் வீரபாண்டியன் அல்ல.`வீரபாண்டியன் ஐ.ஏ.எஸ்'... ஆம்! விடாமுயற்சியும் மனத்திண்மையும் சர்வசக்தி படைத்தவை. விடாதே பிடி என்பது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜின் கூற்று.

இந்தக் கூற்றை மெய்ப்பித்திருக்கிறார் வீரபாண்டியன். அப்பொழுதும் அவரிடம் கேட்கிறார்கள் எப்படி ஜெயித்தீர்கள் என்று.

"மாணவர்கள் நகரத்தில் இருந்தாலும் சரி. கிராமத்தில் இருந்தாலும் சரி. எத்தகைய வாழ்க்கைப் பின்னணி, பொருளாதாரப்பின்னணி, வறுமை போன்றவை தடையாக இருந்தாலும் அதையும் தாண்டி சாதிக்கலாம் என்ற மன வலிமையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். கிராமத்து அரசுப்பள்ளி மாணவர்களால் வளரமுடியாது என்ற தாழ்வுமனப்பான்மை கொள்ளக்கூடாது. வாழ்க்கையில் துக்கமும், துயரமும் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். இதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.'' அவர் சொன்ன பதில் இதுதான்.

தேர்வு ஒரு திருவிழா. இதில் மதிப்பெண்கள் மத்தாப்புகள். 10ஆம்வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்று எந்தத் தேர்வாக இருந்தாலும் நீங்கள் எடுக்கும் மதிப்பெண்கள் தான் உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். உங்களை மதிப்பு மிக்கவர்களாக மாற்றும்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வகுப்பறையில் தான் பொதுவாக வெற்றியடைவதற்கு 35 மதிப்பெண்கள். ஆனால், வெளியில் செல்லும் பொது 100 மதிப்பெண்கள் தான். 100க்கு 96 மதிப்பெண்கள் எடுத்த மாணவரிடம் இன்று கேட்கிற கேள்வி 4 மதிப்பெண்கள் என்னவாயிற்று என்றுதான். அந்த 4 மதிப்பெண்களில் தான் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

10-ஆம் வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் பிளஸ் 2 வில் நல்ல பாடப்பிரிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கும். பிளஸ் 2 வில் எடுக்கும் மதிப்பெண்கள் மருத்துவர், பொறியாளர் என்று மேல்படிப்புக்கு உங்களை அழைத்துச்செல்லும். பட்டப்படிப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் உங்கள் வாழ்க்கைப் பாதைக்கு வழிவகுக்கும். இந்த வெற்றிகளின் படிக்கட்டுகளில் பயணத்தைத் தொடங்கி இருக்கின்றீர்கள்.

தேர்வுகள் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும் இனிய பயணங்கள். ஓர் ஊருக்குப் போக வேண்டுமென்றால் கூட ஒரு மாதத்திற்கு முன்பே பயணச்சீட்டைப் பதிவு செய்கிறோம். ஏன் தெரியுமா? பயணங்கள் சுகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். இதைப்போலத்தான் தேர்வுக்கான தயாரிப்புப் பணியும் இருக்க வேண்டும்.

தேர்வுக்கு முதலில் திட்டமிடுதல் அவசியம். ஒவ்வொரு பாடத்தையும், திட்டமிட்டுப் படியுங்கள். ஒரு ஐந்தெழுத்து மந்திரத்தை மட்டும் இப்போது உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

PQRST - என்கிற ஐந்தெழுத்துதான்.

PREVIEW - பாடங்களைப் பருந்துப்பார்வையில் படித்தல்.

QUESTION - வினாக்களைக் கேட்டு பதியச்செய்தல்.

REVIEW - வரிக்குவரி ஆழ்ந்து படித்தல்.

SELF RECITATION - ஒப்புவித்தல். தடுமாற்றத்தைச் சரிசெய்ய இது உதவும்.

Test - தேர்வு. எழுதிப்பார்த்தல். நீங்களே ஆசிரியராக இருந்து தேர்வுத்தாளைத் திருத்துதல்.

இந்த ஐந்தெழுத்தின் விளக்கப்படி படித்துப்பாருங்கள். வெற்றி வெளிச்சம் உங்கள் மீது படரும். நாளை படிக்கலாம் நாளை படிக்கலாம் என்று தள்ளிப்போடும் எண்ணத்தைக் கிள்ளிப்போடுங்கள். மணி முள்ளைப்போல் மந்தமாக இல்லாது நொடி முள்ளைப்போல வேகமாய் முன்னேறுங்கள். நீங்களும் முன்னேறுவீர்கள். முதலிடம் உங்களுக்குத்தான்.
பேராசிரியர்
க. ராமச்சந்திரன்

2 comments:

அன்புடன் அருணா said...

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்வை நிர்ணயிப்பவை அல்ல.

karthick said...

தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? இலங்கை வரலாற்றை பற்றியும் இலங்கை தமிழர் வரலாற்றை பற்றியும் முழுவதுமாக அறிய புத்தகங்களை அறிவுறுத்தவும்....