Monday, March 15, 2010

குறைகிறது, டாக்டர்களின் ஆயுட்காலம்

நமது ஆரோக்கியம் காப்பவர்கள் டாக்டர்கள். ஆனால் நோயாளிகளை விட டாக்டர்களுக்கு ஆயுட்காலம் குறைவாக இருக்கிறது என்று அதிர்ச்சியூட்டுகிறது ஒரு 'சர்வே' முடிவு. அதிகமான மனஅழுத்தம், உடல் செயல்பாடு குறைந்த வாழ்க்கை முறை ஆகியவை டாக்டர்களுக்கு ஆபத்தாக அமைகின்றன. அதுவே திடீர் மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

இது தொடர்பான ஆய்வை இந்திய மருத்துவக் கழகத்தின் (ஐ.எம்.ஏ.) புனே பிரிவு செய்துள்ளது. இந்திய மருத்துவர்களின் சராசரி ஆயுள் 55 முதல் 59 ஆண்டுகள். இது பொதுமக்களின் ஆயுளை விட 10 ஆண்டுகள் குறைவு என்கிறது ஐ.எம்.ஏ.

இந்த அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை அலசியபோது இந்தப் 'பகீர்' உண்மை தெரிய வந்திருக்கிறது. அத்திட்டத்தில் மாராட்டியத்திலிருந்து 5 ஆயிரத்து 500 பேரும், நாடு முழுவதிலும் இருந்து 11 ஆயிரம் பேரும் பதிவு செய்திருக்கிறார்கள்.

புனே ஐ.எம்.ஏ.யின் தலைவர் டாக்டர் திலீப் சார்தா இதுகுறித்துக் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்கள்படி, மருத்துவர்களின் ஆயுள் அபாய நிலைக்குக் குறைந்து வருகிறது. ஒரு சராசரி இந்தியன் 69 முதல் 72 ஆண்டுகள் வாழ்கிறான் என்றால், ஒரு டாக்டர் 55 முதல் 59 ஆண்டுகள்தான் வாழ்கிறார் என்பது அதிர்ச்சியளிக்குமë விஷயம். சீக்கிரமான பல மரணங்களுக்குக் காரணம் மாரடைப்பு என்பதும் தெரியவந்துள்ளது.''

திலீப் தெரிவிக்கும் தகவல்படி, மராட்டியத்தில் மட்டும் ஓராண்டுக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் 50 வயதுகளில் இறக்கிறார்கள். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.

மனஅழுத்தம், உடல் உழைப்புக் குறைந்த வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியின்மை ஆகியவையே இந்த அபாய நிலைக்குக் காரணம் என்றும் திலீப் தெரிவிக்கிறார்.

"மருத்துவர்கள் தற்போது அதிக எடை, மனஅழுத்தம், நெருக்கடி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவற்றால் அவதிப்பட்டு வருகிறார்கள். பலர் 'ஆன்ஜியோபிளாஸ்டி' செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் அவர்களின் உடல் தகுதியையும், நீண்ட ஆயுளையும் பாதிக்கின்றன'' என்கிறார் திலீப்.

முரப்பாடான வாழ்க்கை முறை, போதுமான உடற்பயிற்சியின்மை, நெருக்கடி மிகுந்த வேலை, ஒழுங்கற்ற சாப்பாட்டு வேளைகள் போன்றவற்றுக்கு மருத்துவர்களின் பணி சூழ்நிலையே காரணம். இவையே அவர்களின் ஆரோக்கியத்தை குலைத்து, ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று வருத்தத்தோடு கூறுகிறார் திலீப் சார்தா.

தடுப்பு நடவடிக்கைகள்

புனே ஐ.எம்.ஏ. சார்பில் மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகள்...

மருத்துவர்களுக்கு ஓராண்டுக்கு வாராந்திர 'சூரிய நமஸ்காரப் பயிற்சி வகுப்பு' நடத்தப்பட்டது. யோகா அமைப்புகள், தேசிய ஒருங்கிணைந்த மருத்துவக் கழகம், ஆயுர்வேதச் சிகிச்சை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு தனியார் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்குக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

மன அழுத்தத்தைச் சமாளிப்பது, நேர நிர்வாகம் குறித்த ஒரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளை மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவக் கழகங்களும் பின்பற்றலாம் என்கிறார்கள்.

1 comment:

vjvrk said...

எனக்கு மருத்துவம் செய்த டாக்டர் சொன்னது :ஒவ்வொரு ஆபரெசன் செய்யும் போதும் ஹார்ட் அட்டாக் வருகிற அளவுக்கு டென்ஸன் இருக்கும எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்