Saturday, March 13, 2010

கடமையை காதல் செய்வோம்

காதல் இந்த மூன்றெழுத்து மோகனத்தில் இனம்புரியாத ஏதோ ஒரு தேவமயக்கம் இழையோடிக் கொண்டிருக்கின்றது. இந்த மூன்றெழுத்தில் தான் உலகம் என்கிற நான்கெழுத்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த உலகம் மூன்று பக்கம் கடலால் அல்ல காதலால் தான் நிரம்பியிருக்கின்றது.

காதல்... இரண்டு இதயங்களை இணைக்கும் அன்புப்பாலம். இந்த இனிய மயக்கத்தில் மூழ்காதவர்களே இல்லை. மரணத்தைப் போலவே காதலும் வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் அரவணைத்து வீழ்த்திவிடுகிறது.


காதல்தான் வாழ்க்கை நேசிப்புக்கான வழிக்கதவுகளைத் திறந்து வைக்கின்றது. எட்டயபுரத்துக் கவிஞன் பாரதி, "காதல் செய்வீர் உலகத்திரே'' என்கிறான். எதற்குத் தெரியுமா?

"காதலினால் மானிடர்க்குக் கலவி உண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்
காதலினால் மானிடர்க்குக் கவிதை உண்டாம்
கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்திரே
அஃதன்றோ இவ்வுலகத்துத் தலைமை இன்பம்!''
என்கிறான்.

* அன்பின் ஒரு வடிவம் காதல். சிரிக்கும்போது கரங்கள் கோர்க்கவும், அழும்போது தோள்கள் கொடுக்கவும் உதவுவதுதான் காதல்.
* கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரிடத்தில் காட்டிய நட்புக்கும்,
* வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரின் ஜீவகாருண்யத்திற்கும்,
 *கடையனையும் கடைத்தேற்ற மகாத்மா காந்தியடிகள் காட்டிய மனித நேயத்திற்கும்
*ஆண்டவனிடத்தில் அடியார்கள் காட்டுகிற பக்திக்கும்,
* "தமிழுக்கும் அமுதென்று பேர்'' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் காட்டிய மொழி உணர்வுக்கும் பெயர்தான் காதல். 

காதல் என்பது ஒரு பெண்ணையோ, ஆணையோ நேசிப்பது மட்டுமல்ல. நீங்கள் யாரை வேண்டுமானாலும் நேசிக்கலாம். உற்றாரை, பெற்றோரை, ஏன் உங்கள் பகைவர்களைக் கூட நேசிக்கலாம்.

தன்னைக் கொடுப்பதுதான் காதல். காதல் ஒரு மனிதனைப் பலப்படுத்தும். ஒரு போதும் பலவீனப்படுத்தாது. காதல் குடியிருக்கும் இதயம் தூய ஆடையைப்போல் ஒளிவீசும். சதையென்னும் இருளைத் தள்ளும். காதல் என்பது மனதில் ஏற்படும் காயமல்ல. மனம் பூப்படைந்து விட்டதன் பொருள்" என்பார் கவிக்கோ அப்துல்ரகுமான்.

பிப்ரவரி 14 உலகக் காதலர் தினம்

அரும்பு மீசை அரும்பும் வயது. குறும்பு ஆசை குவிந்து, விரும்பும் வழியில் செல்லும் பெண்ணையெல்லாம் விழியில் நிரப்பி கவிதைகள் எழுதி கனாக்காணும் இளமைக் காலம்.

* தொலைபேசியில்
நீ எனக்கு முத்தம் தராதே- அது
உன் முத்தத்தை
எடுத்துக் கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்குத் தருகிறது

* 55 கிலோ எடைகொண்ட உன்னை
வெறும் 250 கிராம் எடையுள்ள
என் இதயம்
எப்படித்தான் சுமந்து கொண்டிருக்கிறதோ?

இப்படி காதல் கவிதைகளை இளைஞர்கள் சிலர் எழுதி எழுதி அனுப்பி, கற்பூரமாய் கரைந்து கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் காதலி எழுதிய கடிதங்களையும், முகம் துடைத்துத் தந்த கைக்குட்டையையும் புதையலைப் போல் பொத்திப் பொத்தி வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நம் நிகழ்காலச் சமூகத்தில் காதல் என்ற போர்வையில் காமம்தான் களிநடம் புரிகிறது. ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். காதல் என்பது வேறு, காமம் என்பது வேறு. காமம் உடம்பிலே தோன்றி உடம்பிலேயே முடிந்துவிடும். காதல் உதிரத்தின் அணுக்களில் தோன்றி உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

பருவ வயதில் வந்து போகின்ற காதல் மட்டுமே வாழ்க்கையாகி விடுவதில்லை. இனக் கவர்ச்சியையும் காமத்தையும் காதல் என்று நினைத்து மயக்கத்தில் மயங்கி மனமிழந்து, பணமிழந்து விடக்கூடாது. வருகிற வயதில் வருகிறபோது காதலும் அழகு, மரணமும் அழகு.

புரியாத வயதில் எல்லாமே புதிராக இருக்கும். ஆனால் அதே நேரத்தில் சரியாக இருக்க வேண்டிய பருவம் இந்தப் பருவம்தான். பல இளைஞர்கள் காதலிக்க ஆரம்பிப்பார்கள். காதல் கை கூடாமல் போனால் தாடி வளர்த்துக் கொண்டு தனி மரமாய் நிற்பார்கள். அழிப்பதல்ல காதல். புதிய உயிராய் ஆக்குவதுதான் காதல்.

ஒருவரை உங்களுக்கு அடையாளப்படுத்துகிறேன். அவரும் காதலில் மூழ்கி தாடி வளர்த்தவர்தான். ஆனால் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுகிற பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழுந்து சாதனை செய்தவர். ஆம், இவர் இரு பெண்ணைக் காதலித்தார். காதல் நிறைவேறவில்லை.

மனம் உடைந்துபோன இவர் தனது சிந்தனையை அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் திருப்பிவிட்டார். அதன்மூலம் சாதித்தார். நைட்ரோகிளிசரின் இந்த சூழலில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்தான் வெடிமருந்தையும் கண்டுபிடித்த ஆல்பிரட் நோபெல்.

காதல்தான் மனித வாழ்வை அர்த்தப்படுத்துகிறது. எல்லையில்லாத அன்பு எதனிடம் பெருக்கெடுத்தாலும் அதற்குப் பெயர்தான் காதல். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில நேரங்களில் மனதில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கும். இதோ ஒரு சந்திப்பு..

வயது வந்த ஒரு இளைஞன் சூபி ஞானியைப் பார்க்க வந்தான். "என்னால் ஒரு காரியத்தையும் சரியாக செய்ய முடியவில்லை, ஞாபகமறதி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்குத் தாங்கள்தான் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும்'' என்று கேட்டான்.

அப்போது அந்த ஞானி... "கவலைப்படாதே' காலப்போக்கில் சரியாகிவிடும்'' என்று பதிலளித்தார்.
பிறகு "உனக்குத் திருமணமாகிவிட்டதா?" என்று கேட்டார்.
"ஆகிவிட்டது. காதல் திருமணம்தான். சரியாக ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன'' என்றான்.
"யாரைக் காதலித்தாய்... எப்படி திருமணம் நடைபெற்றது?'' என்று கேள்விகளால் ஒரு வேள்வியை நடத்தினார் ஞானி.
அவனோ, ஒரு சிறு சம்பவத்தையும் மறக்காமல் சந்திப்புகள் நிகழ்ந்த இடம், நேரம், நாள், ஆண்டு என்று ஒன்றையும் மறக்காமல் சொல்லி முடித்தான்.
"அதெப்படி இவ்வளவு சரியாக நினைவு வைத்திருக்கிறாய்?'' வியப்புடன் கேட்டார்.
இளைஞனோ, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தான்.
"அந்தக் காரணத்தை நானே சொல்கிறேன்...'' ஞானி தொடர்ந்தார்...

"நீ அப்போது காதலில் மூழ்கியிருந்தாய். அந்த முழுமையான ஈடுபாடு, நீ காட்டிய ஆர்வம், அதனால்தான் அந்த நிகழ்வுகள் உன் மனதில் அத்தனை ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதைப்போல் எந்த ஒரு செயலிலும் ஈடுபட்டாலும் அதில் முழுமையான ஆர்வம் காட்டி இறங்கினால் அது உன் நினைவை விட்டு அகலாது'' என்றார்.

ஞானியைச் சந்தித்த இளைஞனுக்குச் சந்தேகம் தீர்ந்தது.

ஆம், விரும்பிச் செய்யும் எந்தச் செயலிலும் மனதில் நிரந்தரமாகத் தங்கும். வெற்றியை நோக்கி நடைபோட வைக்கும் என்பதை புரிந்துகொண்டான். படிப்பதும் இதைப்போலத்தான் எதை விரும்பிப் படிக்கின்றோமோ அதுதான் பசை தடவிய மாதிரி மனதில் பதியும். பாடப் புத்தகத்தைக்கூட எடுக்கும்போது சுமையாக கருதாமல் சுகமாகக் கருத வேண்டும். இஷ்டத்தோடு செய்கிற காரியத்தில் கஷ்டமே தெரியாது. எந்த ஒன்றையும் தொடர்ந்து இருபத்தோரு நாட்கள் செய்கிறோமோ அதுவே பழக்க
மாகிவிடும்.

கடமையை கடமையாகச் செய்யாமல் அன்பு மயமாகச் செய்ய வேண்டும்.

தாய் குழந்தைக்குப் பாலூட்டுவது கடமைதான். ஆனால் அதை கடமையாகச் செய்வதில்லை. அன்புமயமாகச் செய்கிறாள். அதனால் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறாள். அப்படி நமது கடமைகளையும் அன்புமயமாக்கிச் செய்தால் கடமை கடமையாகத் தெரியாது.

கடமை உணர்வு வெளியிலிருந்து உள்ளுக்குள் பாய்வது. அன்பு உணர்வு உள்ளே இருந்து வெளியே வருவது.

மற்றவர்களுக்காகச் செய்கிறோம் என நினைத்தால் உடலில் தளர்வும் உள்ளத்தில் சோர்வும் ஏற்படும். நமக்காக நாம் பணியாற்றுகின்றோம் என்கிற உண்மை புரிந்தால் உழைப்பில் களைப்பு இருக்காது. ஈடுபாடு இல்லாமல் எந்தப்பணியைச் செய்தாலும் அது விழலுக்கு பாய்ச்சிய நீர்தான். அந்த ஈடுபாட்டை படிப்பாக இருந்தாலும் கடமையாக இருந்தாலும் கடைப்பிடிப்போம். இதுவும் ஒரு காதல்தான்.

பேராசிரியர் க.ராமச்சந்திரன்

1 comment:

senthilkumar said...

ஆசானுக்கு எனது வணக்கங்கள் மாணவன் செந்தில்குமார்