Wednesday, March 10, 2010

இன்று ஒரு தகவல்

'கல்ட்' (Cult) என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய பக்தி இயக்கங்கள் உலகம் முழுவதும் பல பெயர்களில் நிறைந்திருக்கின்றன. எந்த ஒரு மனிதனுக்கும் இக்கட்டான சூழ்நிலை வந்தே தீரும். எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற தவிப்பில் இருக்கும் மனிதனை சரியான தருணம் பார்த்து நாலு வார்த்தை ஆறுதலாக சொன்னாலே போதும், அவன் எந்தவொரு போலியான பக்தியியக்கத்திலும் விழுந்துவிட வாய்ப்புண்டு.

ஒரு இயக்கம் உருவாக முதலில் தேவை விசுவாசமான சிஷ்யர் படைதான். இதை உருவாக்குவதோடு சாமியார்களின் வேலை முடிந்துவிட்டது.

இப்படியொரு இடமாகத்தான் இருந்தது அமெரிக்க டெக்சாஸ் மாநிலத்தில் வாக்கோ என்ற இடத்தில் அமைந்திருந்த ஆசிரமம். இதை அமைத்தவர் டேவிட் கொரேஷ். இவருக்கு மூன்று ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட விசுவாசமான சிஷ்யர்கள் இருந்தார்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், கம்ப்யூடர் நிபுணர்கள் என்று ஏகப்பட்ட பெரிய மனிதர்கள் இவருடைய சிஷ்யர்கள். கொரேஷ் மென்மையாக மணிக்கணக்கில் உரை நிகழ்த்துபவர். பதினைந்து மணிநேரம் வரை கூட இவரது உரை நீடிக்கும். வேறு வழியில்லை சிஷ்யர்கள் கேட்டே ஆகவேண்டும். தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டார். கடவுள் தன்னிடம் தொடர்ந்து உரையாடுவதாகவும் சொன்னார்.

எழுபத்தேழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவரது ஆசிரமம் கிட்டத்தட்ட ஒரு அரண்மனை. பெண் சிஷ்யைகள் தனிப்பட்ட முறையில் தலைவருக்கு சேவை செய்ய அழைக்கப்படுவார்கள். பெரும்பாலும் கன்னிப் பெண்கள்தான் இந்த சேவையில் ஈடுப்படுத்தப்படுவார்கள். அவரது அறையை சுத்தம் செய்வது, படுக்கையை ஒழுங்குப்படுத்துவது, கை கால் அழுத்திவிடுவது என்று தொடங்கும் இந்த சேவை, இறுதியில் உடலுறவோடு முடியும். இதில் மதிமயங்கி அந்தப் பெண்கள் இதை பெரும்பாக்கியமாக, பிறவிப்பயனாக நினைத்தார்கள். எதோ இறைவனிடம் உடலுறவு கொண்ட பரவசத்தை அடைந்தார்கள். இந்த நாளுக்காக நிறையப் பெண்கள் தவம் கிடந்தார்கள்.

கொரேஷின் வக்கிரமான செக்ஸ் வெறி வயதுவந்த பெண்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. 12 வயதுகூட நிரம்பாத பெண் குழந்தைகளிடமும் தொடர்ந்தது. பல பெண் சிஷ்யைகள் கர்பமுற்றனர். ஆசிரமத்தில் வளைய வந்து விளையாடிக் கொண்டிருந்த முக்கால்வாசிக் குழந்தைகள் கொரேஷிற்கு பிறந்தவை.

மூளைச் சலவை செய்யப்பட்ட அடிமைகள் கூட்டத்தை அதன் தலைவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் அளவிற்கு கொரேஷ் அவர்களுடைய சீடர்களிடம் ஒரு நம்பிக்கையைப் பெற்றிருந்தார். நாளடைவில் அவர் மீது துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தது உட்பட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதை தொடர்ந்து போலீசார் கொரேஷின் ஆசிரமத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை சீடர்கள் எதிர்த்தனர். 51 நாட்கள் நடந்த சண்டைக்கு பிறகே பொலிசாரால் உள்ளே நுழைய முடிந்தது. ஆனால் கொரேஷின் அறைக்குள் அவர்களால் செல்ல முடியாததுடன் ராணுவ டாங்கிகளால் துளைத்தும் தகர்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு பலம் பொருந்தியதாக அமைக்கப்பட்டிருந்தது அவருடைய அறை. டியூப் மூலம் மயக்க மருந்து செலுத்திய போது அந்த அறையிலிருந்து தீப்பிழம்புகள் வெளியேறின. இறுதியில் கொரேஷும்  அவருடைய சீடர்களும் தீ வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக செத்துமடிந்ததாக வெளி உலகிற்கு தகவல் தரப்பட்டது.  

இங்கே நித்யானந்தாக்களும், பிரேமானந்தாக்களும் பரவாயில்லைப் போலும்.               

No comments: