Monday, March 8, 2010

பெண்கள் உலகின் கண்கள்

 'இன்டர்நேஷனல் விமன்ஸ் இயர்' சின்னம் இது. இதை உருவாக்கியவர் 'வாலெரி பெட்டிங்' என்கிற ஒரு பெண்மணிதான். அமைதியையும், சமாதானத்தையும், ஆண் - பெண் மத்தியில் சரிசமத்தை நிலைநாட்டுவதும்தான் இந்த சின்னத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
   
தமிழகத்தின் தலை சிறந்த பெண்கள் பற்றி தெரிந்து கொள்வோம்

ருக்மணி லட்சுமிபதி (1899 - 1951 )

முதல் சட்டமன்ற உறுப்பினர், முதல் சபாநாயகர், முதல் பெண் அமைச்சர், முதல் அரசியல் பெண் சிறை கைதி என்று பல 'முதல்'களை பெற்ற இவர் சென்னையில் பிறந்தவர். மருத்துவ சேவையுடன் சமூக பணிகளிலும் தன்னை இணைத்துக் கொண்டவர். மது விலக்கு போராட்டத்திற்காக 'இளைஞர் அமைப்பை' தோற்றிவித்தவர். 1929 இல் லாகூரில் நடைப்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பெண்களுக்கு சம உரிமை கேட்டு அனைவரையும் வியக்கச் செய்தவர்.


மூவலூர் ராமாமிர்தம் (1883 -1962)

திருவாரூரில் பிறந்த இவர் தேவதாசி முறையை ஒழிக்க பாடுப்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர். பிறப்பால், சாதியால், கடவுளின் பெயரால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் 'யுவதி சரணாலயம்' எனும் அமைப்பை தோற்றுவித்து தேவதாசிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்கியவர் 'தாசிகளின் மோசவலை அல்லது மதி  பெற்ற மைனர்' என்ற நாவலை எழுதி புகழ் பெற்றவர். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள இவர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறைச் சென்றவர்.

சொர்ணத்தம்மாள் ( 1916 - 2007)

மதுரையில் பிறந்தவர் 'அந்நியத் துணி மறுப்பு' போராட்டத்தில் கலந்துக் கொண்ட வீரப் புயல். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தலித் இன மக்களை நுழையச் செய்யும் போராட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுப்பட்டவர். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக காவல் துறையால் கைது செய்யப்பட்டு அழகர் கோயில் காட்டில் நிர்வாணப்படுத்தப்பட்டவர். இந்திய விடுதலைக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் தன வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி (1886 - 1968)

பெண் சொத்துரிமைச் சட்டம், சிறுவர் திருமணத் தடைச் சட்டம், பலதார திருமண தடைச் சட்டம் கொண்டுவர காரணமானவர். இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினரராகவும் முதல் துணைச் சபாநாயகராகவும் பதவி வகித்தவர். பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்த காலத்திலேயே மருத்துவ படிப்பை முடித்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற சிறப்பைப் பெற்றவர். புதுகோட்டையில் பிறந்த இவர் 1926 இல் நடைபெற்ற சர்வதேச பெண்கள் வாக்குரிமை மாநாட்டில் இந்தியா சார்பாக கலந்துக் கொண்டவர். தற்போது சென்னை அடையாரில் இயங்கி வரும் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை தோற்றிவைத்தவர்.

மணியம்மையார் (1917 - 1978)

தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்திற்காக தன வாழ்நாளை செலவழித்தவர். வேலூர் மாவட்டத்திலுள்ள மணலூரில் பிறந்த இவர் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மொழியுரிமைப் போரில் கைதாகி சிறைக்குச் சென்றவர். 1949 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியவர். பெரியாரின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் இயக்கத்தை தொய்வு ஏற்படாமல் நடத்திச் சென்ற பெருமைக்குரியவர்.

டி.கே.பட்டம்மாள் (1919 - 2009)

'சத்தியவான் சாவித்திரி' என்ற நாடகத்தில் "தாயார் இருந்தென்ன? தந்தையார் இருந்தென்ன?" என்ற புகழ்ப்பெற்ற பாடலே இவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது. பெண்கள் வெளியில் வருவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட அந்த காலத்தில் தைரியமாக மேடையேறி பாடியவர். கொலம்பியா இசைத்தட்டு நிறுவனம் இவருடைய பாடல்களை இசைத்தட்டாக வெளியிட்ட போது இவருக்கு வயது 12. கனமான குரலும் சுத்தமான உச்சரிப்பும் இசைப்பற்றிய ஆழ்ந்த புலமையும் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.

கே.பி.சுந்தராம்பாள் (1908 - 1980)

ஆண்கள் பெண் வேடமிட்டு நடித்து வந்த அந்த காலத்தில் முதன்முதலாக ஒரு பெண் ஆண் வேடமிட்டு நாடக மேடையிலும், திரையிலும் நடித்து புகழ்ப் பெற்றார். கொடுமுடி எனும் கிராமத்தில் பிறந்த இவரது கணீர் குரலுக்கு மயங்காதவர் கிடையாது. தமிழ் நாட்டில் முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை இவரே. 'அவ்வையார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவ்வையாராகவே அவரைப் பார்த்த காலமது. காந்தி உப்பு சத்தியாகிரகம் நடத்திய போது அவருக்கு ஆதரவாக பல இடங்களுக்கு சென்று பாடல்கள் பாடி மக்களிடையே சுதந்திரத் தீயை மூட்டியவர். தன்னுடைய கணவரின் மறைவுக்கு பின் சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டார்.

டி.பி.ராஜலட்சுமி (1911 - 1950)

தமிழ் நாட்டின் முதல் பெண் திரைப்பட இயக்குனர், முதல் பெண் கதை வசனகர்த்தா, முதல் திரைப்பட நடிகை என்ற சிறப்பைப் பெற்றவர். தனது தோற்றத்தாலும் குரலாலும் ரசிகர்களை கவர்ந்தவர். சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு. பெண்களை சேர்த்துக் கொள்ளாத கண்ணையா நாடக கம்பெனி இவருடைய நடிப்புத் திறமையைப் பார்த்து அதிக சம்பளம் கொடுத்து சேர்த்துக் கொண்டது. அக்காலத்தில் புகழ் பெற்ற நடிகர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, தியாகராஜா பாகவதர் ஆகியோருடன் ஜோடியாக நடித்தப் பெருமைக்குரியவர்.

அம்புஜம்மாள் (1889 - 1983)

மகாத்மா காந்தியின் செல்ல மகள் என அழைக்கப்பட்ட இவர் பெண்களின் விடுதலைக்காக போராடியவர். இன்றிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முன்னோடியாக 1946 இல் பெண்களுக்கென தனி கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தினார். மகாத்மா காந்தி மற்று தன்னுடைய தந்தையின் பெயரால் இவர் தோற்றுவித்த 'ஸ்ரீனிவாச காந்தி நிலையம்' இன்றும் பெண்களுக்கு மருத்துவம், தொழிற் பயிற்சி முதியோர் பாதுகாப்பு போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

பத்மா சுப்பிரமணியம்

திரைப்பட இயக்குனர் கே.சுப்பிரமணியம் இசை கலைஞர் மீனாட்சியம்மாள் தம்பதியருக்கு 1943 ஆம் ஆண்டு மகளாக பிறந்தவர். பரதத்தை தன உயிர் மூச்சாக கொண்ட இவர் இதுவரை கணக்கிலடங்காத நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 'இந்திய நடனத்திலும் சிற்பத்திலும் உள்ள கர்ணங்கள் என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நாட்டிய நிகழ்ச்சியின் தொடக்காமாக 'புஷ்பாஞ்சலி' என்ற நிகழ்ச்சியை புகுத்தி புதுமை செய்தவர். தற்போது இந்திய கலாச்சார தூதராக செயல்பட்டு வருகிறார்.

இவற்றிற்கும் மேலாக உலகளாவிய ரீதியிலும் அகில இந்திய ரீதியிலும் பெண்களில் சிறப்பானவர்களை நோக்குமிடத்து அன்னை தெரசா என்கிற மனித நேய தாய், ப்ளோரன்ஸ் நைடிங்கேல் எனும் செவிலித்தாய்,  'அன்னை' மிர்ர அல்பாசா எனும் ஆன்மிகத் தாய் (பாண்டிச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம்) எனத் தொடங்கி இந்தியாவின் முதல் பெண் பிரதமர் திருமதி இந்திரா காந்தி - இந்தியாவின் முதல் பெண் கவர்னர் கவிக்குயில் சரோஜினி நாயுடு - இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் சுதேசா கிருபளானி - இந்தியாவின் 'ஷெரிஃப்' பதவி வகித்த முதல் பெண்மணி கிளப் வாளா யாதவ் என்ற பார்சி மாது - இந்தியாவின் மாநிலத்தின் தலைமைச் செயலாளராக பதவி வகித்த அஞ்சலை தயானந்த் - இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி அபேலோ போன் குன்னா (விஞ்ஞானி சந்திர போசின் மனைவி) - இந்தியாவின் முதல் பெண் இசையமைப்பாளர் உஷா கண்ணா -இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையேயுள்ள ஆங்கில கால்வாயை கடந்த முதல் இந்தியப் பெண்மணி அரதி சாஷா - முதல் காங்கிரசின் முதல் பெண் பேச்சாளர் கடம்பினி கங்குலி - உலகின் முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா - தமிழகத்தின் திரையுலகம் தந்த முதல் பெண் முதலமைச்சர் வி.என்.ஜானகி எம்.ஜி.ஆர் - தமிழகத்தின் திரையுலகம் தந்த முதல் அரசியல் கட்சித் தலைவி ஜெயலலிதா (முன்னாள் முதல் அமைச்சர்) இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க - இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதிபா பாட்டேல் - இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் - பாகிஸ்தானின் முதல் பெண் அரசியல் கட்சித் தலைவி பெனாசிர் பூட்டோ - பங்களாதேசின் முதல் பெண் புரட்சி எழுத்தாளர் தசிமா நஸ்ரின் - பங்களாதேசின் முதல் பெண் அதிபர் சேக் ஹசீனா (முஜிபர் ரஹ்மானின் மகள்) சுவிஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் ரூத் ட்ரெ·ப்யூஸ் இப்படி நீண்டு செல்லும் பெண்களின் பட்டியலில் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா - டென்னிஸ் குயின் சானியா மிர்சா - விண்வெளி மங்கை கல்பனா சாவ்லா என்று தொடர்கிறது பெண்களின் சரித்திரம்.           

"பெண்களுக்கு சத்துவம் கிடைப்பதற்காக போராடுவது இப்போது முக்கியமல்ல ஆண்களோடு அவர்களுக்கு சம உரிமை கிடைத்தால் அதை ஏற்றுக் கொள்வதற்கு பெண்களை தயார் செய்வதுதான் பெரிய பிரச்சனை" 
- மாதர் முன்னேற்றத்திற்காக போராடும் புகழ் பெற்ற இந்திய பெண்மணி மிஸ் ஐ.வி.கான் 

No comments: