Saturday, March 6, 2010

மகுடங்கள் மாறக்கூடியவை

கதைகள்...

காலம் காலமாய் மக்களின் மனங்களில் நல்ல கருத்து விதைகளைத் தூவி வருகின்றன. சில சமயங்களில் அவை தலையில் ஆணி அறைகின்றன. சில வேளைகளில் அதிர்ச்சி அளிக்கின்றன. சில வேளைகளில் சிரிப்பலைகளை எழுப்பி விடுகின்றன. இப்படி ஏதோ ஒரு வகையில் இக்கதைகள் நம் வாழ்வில் ஏறëபடும் சிக்கல்களையும் குழப்பங்களையும் இனம் காட்டி அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை அடையாளம் காட்டுகின்றன.

முல்லா... கதை உலகில் அனைவருக்கும் அறிமுகமானவர். குறிப்பாகக் குழந்தைகளின் எல்லையில்லா அன்பிற்குப் பாத்தியமானவர் தான் இந்த முல்லா. இதோ இவரது ஒரு கதை.

ஒருமுறை முல்லா ஒரு விருந்துக்குப் போயிருந்தார். அது ஒரு கனவான் கொடுத்த விருந்து. முல்லாவோ சாதாரண உடையில் போயிருந்தார். அதனால் அவரைக் காவலர்கள் விருந்து நடக்கும் மண்டபத்திற்குள் விடவில்லை.

முல்லா வீடு திரும்பினார். வழியில் துணி சலவை செய்யும் ஒரு கடை இருந்தது. அதிலிருந்து ஒரு நல்ல கோட்டையும், சூட்டையும் கடன் வாங்கி அணிந்து கொண்டு மீண்டும் விருந்து மண்டபத்திற்கு வந்தார். முல்லாவின் எடுப்பான தோற்றத்தைப் பார்த்துவிட்டு காவலர்கள் அவரை ராஜ மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றனர். உயர்ந்த நாற்காலியில் அமரச்செய்தனர். அவர் சாப்பிடுவதற்காக ஒரு பெரிய தட்டில் வகை வகையான உணவுகளைக் கொண்டு வந்து கொடுத்தனர்.


முல்லா எல்லா வகை உணவுகளையும் எடுத்துத் தான் அணிந்திருந்த கோட்டுக்கு ஊட்டி விடத்தொடங்கினார். அவரது இந்த செயல் அங்கிருந்த எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது.

என்ன பைத்தியக்காரத்தனம் செய்கிறீர்கள் என்றார்கள். அப்போது முல்லா சொன்னார் "நீங்கள் யாரை மதித்தீர்களோ அவர் விருந்து சாப்பிடுவது தானே நியாயம்? அதனால் தான் நான் என் ஆடைகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருக்கின்றேன்.''

முல்லாவின் இந்தக்கதை, சிரிப்பையும் சிந்தனையையும் கிளறி விடுகிற கதை. இன்றைய சில மகுடங்களின் கதையும் இது தான். நம் சமூகம் ஆடைகளுக்குக் கொடுக்கிற அங்கீகாரத்தை ஆட்களுக்குத் தருவதில்லை. காரணம் அவர்கள் சூடியிருக்கின்ற மகுடமும் சுற்றியிருக்கின்ற காக்கைகளும் தான்.

நாம் யாரும் நம்முடைய முகங்களில் இல்லை. ஏதோ ஒரு வகையில் எல்லோரும் முகங்கள் என்ற முகமூடிகளை அணிந்து ஆடிக் கொண்டிருக்கின்றோம். அந்த முகமூடிகளே மகுடங்களாகச் சில நேரங்களில் காட்சியளிக்கின்றன. மகுடங்கள் கழற்றப்பட்டு விட்டால் எவரும் அவரவர் அரியாசனத்தில் அமர்ந்திருக்க முடியாது.

மௌரிய சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் அசோகர் வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்ததுறவி மன்னரும் அவரது படை வீரர்களும் செல்ல வழிவிட்டு ஓர் ஓரமாக ஒதுங்கி நின்றார்.

அசோகச் சக்கரவர்த்தி அவரைப் பார்த்துவிட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச்சென்று அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது.

துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். ஒரு மிகப்பெரிய அரசர் ஒரு சாதாரண துறவியின் காலில் விழுவதா? அரச பாரம்பரிய கவுரவம் என்னாவது? என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது.

அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோகச் சக்கரவர்த்தி சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திëர கட்டளையைப் பிறப்பித்தார்.

ஓர் ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது. புலித்தலைக்கு அலைந்தார்கள். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது. மனிதத்தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சர்களிடம் கட்டளையிட்டார். "சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்றுப் பொருள் கொண்டு வாருங்கள்.''

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்கள் திணறினார்கள். ஆட்டுத்தலை சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. வேடிக்கை தான் பார்த்தார்கள். கடைசியில் வேட்டையில் பிரியமான ஒருவன் அதை வாங்கி பாடம் செய்து அலங்காரமாக வீட்டில் மாட்டி வைத்தான்.

மீதமிருந்த மனிதத்தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது. ஓரு காசுக்குக்கூட அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத்தலை உடனே விலைபோனதையும், புலித்தலை சற்றுச்சிரமத்துடன் விலை போனதையும், மனிதத்தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தனர்.

அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள் என்றார். இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.

இப்போது அசோக மன்னர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால் அந்த உடம்பு கால்தூசு கூட பெறாது. இருந்தும் இந்த உடம்பில் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது. செத்தபின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். இதை உணர்ந்தவர்கள் தான் ஞானிகள். இத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?''

அமைதியானார் அமைச்சர்.

பிரபலமாக இருப்பது வேறு . நல்ல பெயருடன் வாழ்வது வேறு. ஒழுக்கமும் பண்பும் நம்மை நாமே செதுக்கிக்கொள்ளக்கூடியது. யார் கை தட்டுவதற்காகக் குயில்கள் கூவுகின்றன? யார் பாராட்டுவதற்காக மலர்கள் மலர்கின்றன? இயல்பாய் நிகழும் நிகழ்ச்சி என்றைக்கும் நிலைத்திருக்கும் புகழைத்தரும்.

உங்களைப் பற்றிய உங்கள் அங்கீகாரமே உங்கள் அஸ்திவாரம். பிறரது அங்கீகாரம் வெறும் அலங்காரமே. அலங்காரங்கள் அகற்றப்படக்கூடியவை.

உங்களை பிறர் அங்கீகரிக்கவேண்டும், பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

கிடைக்காதபோது ஏமாந்து வருந்தாதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்கள் திறமைகளை குறைத்துவிடும். திறமைகளை வளர்த்துக்கொண்டே இருங்கள். அந்தத் திறமை உங்களுக்கு புகழ் மகுடங்களைச்சூட்டும். உங்களது திறமையில் கிடைக்கும் புகழ் மகுடங்களை விருப்பமுடன் சூடிக்கொள்ளுங்கள். தவறில்லை. இதுதான் நிலைத்த புகழைத்தரும்.

புகழ் வாழ்க்கைக்கு முக்கியமானது தான். ஆனால் புகழுக்கு அடிமையாகி விடாதீர்கள். ராமனுடைய முடியை அடைய ஆசைப்பட்ட மகுடம் புறக்கணிக்கப்பட்டது. அவனுடைய கால்களை அடைந்த பாதுகைக்கோ சிம்மாசனம் கிடைத்தது.

"மனிதர்களாக வாழும் போது நாம் பெறும் புனிதமான செல்வம் என்பது அப்
பழுக்கில்லாத பேரும் புகழும் தான். அது என்றைக்கு இல்லாமற் போகிறதோ அப்போது மனிதர்கள் வெறும் நிறப்பூச்சுடன் உலவும் களிமண் உருவங்களே'' என்பார் அறிஞர் ஷேக்ஸ்பியர்.

விளம்பரத்தால் சேர்க்கும் புகழ் என்றும் நிரந்தரமானதல்ல. புகழும் விளம்பரமும் வேறு வேறு. பல்லவன் செதுக்கிய சிற்பங்களைப் போல, சோழன் கட்டிய ராஜகோபுரங்களைப் போல காலத்திற்கும் சவால் விட்டு நிற்பது புகழ்.

வான விதானத்தில் சிறிது நேரம் வர்ணஜாலம் காட்டி விட்டு மறையும் வானவில் போன்றது விளம்பரம்.

தன்னலத்தில் பிறந்த விளம்பரம் தன்னோடு அழியும். மண்ணலத்தில் பிறந்த புகழ் மண் உள்ளவரை வாழும்.

கூடிக்கலையும் மேகம் போல் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே விளம்பர வெளிச்சம் விலகிவிடும். பொது நலச் சிந்தனைகளோடு உழைப்பவர்கள் பெறுவது தான் புகழ். அதுதான் காலத்தின் பரிசு.

* அசோகச் சக்கரவர்த்தி இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் அவன் தலையில் சூட்டியுள்ள மகுடமல்ல. அதைத் தாண்டிய அவனது பணிவும் மக்கள் நலப்பணிகளுமே ஆகும்.

* கடையெழு வள்ளல்களுள் ஒருவன் பாரி மன்னன். பாரியின் நாட்டில் முந்நூறு ஊர்கள் இருந்தன. அந்த முந்நூறு ஊர்களையும் புரவலர்களுக்குப் பரிசாக கொடுத்துவிட்டான். பாரி இப்போதும் பேசப்படுகிறான். அதற்குக் காரணம் ஊர் கொடுத்ததற்காக அல்ல, தேரைக் கொடுத்ததற்காக. ஆம். "முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி'' என்று தான் உலகம் அவனைப் புகழ்கின்றது.

*அதைப்போலத்தான் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும். புத்தர், ஆதி சங்கரர், ஏசு, மகாவீரர், நபிகள்நாயகம், மகான் ரமணர் இவர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆனால் காலம் இவர்கள் இருக்குமிடம் நோக்கி வணங்க வைத்தது. இது தான் புகழ்.

கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்கிறார்

உன் தலையை புகழால் அலங்கரி
மகுடங்களால் அலங்கரிக்காதே
ஏனென்றால்
மகுடங்கள் தலை மாறக்கூடியவை!


என்பார்.

* கத்தரிக்காயின் காம்புகள் மகுடங்கள்...
காம்புகளைக் களைந்த பிறகுதான் உடலுக்கு அது உணவாகிறது.

* விரலுக்கு நகங்கள் மகுடங்கள் ...
நீளும் மகுடங்களை நறுக்குகிற போது தான் உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது

* பேனாவிற்கு மூடிகள் மகுடங்கள்...
மூடிகளைக் கழற்றுகிற போதுதான் சமூக மாற்றத்திற்கான படைப்பு பிறக்கின்றது.

இளைஞர்களே!
இனியேனும் மகுடங்களைக் கண்டு மயங்கி விடாதீர்கள்.
மகுடங்கள் மாறக்கூடியவை.
பேராசிரியர் க. ராமச்சந்திரன்

No comments: