Wednesday, March 3, 2010

எங்களைக் கொஞ்சம் தனியாய் விடுங்கள்

தேசத்தின் தேகத்தில் வெந்தவடு மாறுமுன்னே
தேசியம், இறையாண்மை, சுயநிர்ணய உரிமையென...
வாய் சவடால்கள் இலங்கைத் தீவில் மீண்டும் ஆரம்பம்.

வாக்குப் பெட்டிக்குள் தமிழ் தேசியம் தேடும்
வேஷதாரிகளுக்குள் அறிக்கைப்போர் அரங்கேற்றம்.

"தேசசுதந்திரம் வேண்டிநின்றோர்"
இங்கு வேறொன்று கொள்வாரோ...??

போதுமடா சாமி!



பிணக்குவியலை மண்மூடி மறைத்தாலும்
கண்மூடி மறக்க முடியவில்லையெம்மால்
தத்துவத்தின் மகத்துவங்கள் பேசிப்பேசி
உம்மோடு மல்லுக்கட்ட சத்தியமாய் சக்தியில்லை.

ஒற்றுமை என்றால் என்ன விலையென்று
இன்னும் கேட்கும் உங்களோடு
உறவென்ன வேண்டிக்கிகிடக்கு?

சாதியம் பேசும் நாதியற்றக்கூட்டமாய்
இன்னும் ஏன் அலைகிறீர்?

புலம்பெயர் புண்ணியஸ்தர்கள் 
பண்ணிவைத்த பாவங்களை
தீர்க்கவே இனியொரு யுகமாகும்.

வெந்ததை தின்று விதிவந்தால் சாகும்
கூட்டமாய் எங்களை நினைப்பதை நிறுத்துங்கள்.

நாடு ஒன்றாம் தேசம் ரெண்டாம்
மக்களின் பேரில் முன்னணி வேறு
வார்த்தை சித்தர்களே!
வாய் ஜாலங்கள் போதும்
எங்கேனும் போய் வாழ்ந்துவிட்டு போங்கள்

எங்களைக் கொஞ்சம் தனியாய் விடுங்கள்.

மறத்தமிழ் வீரமென்றீர்! மனிதம் கொன்றுதின்றீர்.
தேசங்கள் கடந்து சென்றும் பேதங்கள் தேக்கி நின்றீர்
பேதங்கள் நீக்கி வாழா பேதைமை பூண்டு நின்றீர்
விதைத்ததை தானே அறுவடை செய்தோம்.
 
விளைவு கண்டும் விளங்க மனமில்லா
வில்லங்க மனசோடு விடுதலை வேண்டித்தர
நீங்களும் வேண்டாம் யாரும் வேண்டாம்.
எமக்கொரு விதியை நாமே சமைப்போம்
அது எந்த நாளும் காக்கும் மனிதம் வளர்ப்போம்.


எங்களைக் கொஞ்சம் தனியாய் விடுங்கள்.

ஈழத் தமிழன்
 

3 comments:

rama said...

தனிமை மட்டும் இப்போது போதும் ....வலி உணர்த்தும் கவிதை. வாழ்த்துக்கள்

A.சிவசங்கர் said...

தமிழ் பற்றி வேணாம் ஐய அதுவும் லங்காவில் இருந்து சி வெக்கமாய் இருக்கிறது எனக்கு இங்கு வசிக்க

vidivelli said...

விடவே மாட்டார்கள்.
தமிழரின் தலைவிதி.......
வலிக்குது.....
அருமை