Saturday, March 27, 2010

இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிவரை தேவையற்ற விளக்குகளை அணைப்போம்

உலகை அச்சுறுத்தி வரும் பருவநிலை சீர்கேட்டை குறைக்க விழிப்புணர்வு நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணி முதல் ஒரு மணி நேரம் தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை அணைத்து வைக்க வேண்டும் என்று மக்களுக்கு தமிழக அரசும், தொண்டு நிறுவனமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

உலகுக்கு முக்கியமான அச்சுறுத்தலாக இருந்து வரும் சீரற்ற பருவநிலை மாற்றத்தை குறைக்க 'டபிள்யு.டபிள்யு.எப்.' தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் மின்சாதனங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு நிறுத்தி வைக்கும் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது.

அதேபோல இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) உலகம் முழுவதும் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேவையற்ற மின் விளக்குகள் மற்றும் மின் சாதனங்களை நிறுத்தி வைக்கும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுகிறது.


இதுகுறித்து தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர் டேவிதார் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் மின்சார பயன்பாடு 2004-ம் ஆண்டில் 38 ஆயிரம் மில்லியன் யூனிட்டாக இருந்தது. அதுவே 2009-ம் ஆண்டு 53 ஆயிரம் மில்லியன்யூனிட்டாக மாறியுள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்தை நீர் மின்திட்டம், காற்றாலை, சூரிய சக்தி மின் திட்டங்களால் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் எந்தவிதத்திலும் பாதிக்காது. ஆனால் அனல் மின்நிலையங்கள் மூலம் தான் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடியது.

ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உடனடியாக உருவாக்கிவிட முடியாது. அதற்கு 4 முதல் 5 வருடங்களாகும். ஒரு மெகாவாட் உற்பத்திக்கு ரூ.5 கோடி வரை செலவாகிறது. ஆனால் மின் சேமிப்பை சுலபமாக செய்ய முடியும்.

மக்களுக்கு வேண்டுகோள்

மின் சேமிப்பு இயக்கம் முதன்முதலில் 2007-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 6 ஆயிரம் நகரங்களில் நடந்தது. இந்த ஆண்டும் உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

வீடுகள், அலுவலகங்களில் தேவையற்ற மின் விளக்குகள், மின் விசிறிகள், குளிர்சாதன கருவிகள் போன்றவற்றை ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தி வைப்பது தான் இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் மின்சார சேமிப்பு மட்டுமின்றி சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கவும் உதவும். தமிழக மக்களுக்கு இதனை ஒரு வேண்டுகோளாக சொல்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மின்வாரிய தலைவர் சி.பி.சிங் கூறும்போது, "தமிழ்நாட்டில் ஒரு கோடியே 40 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் இருக்கின்றன. இந்த ஒரு மணி நேரம் மின்சாதனங்களை நிறுத்தி வைப்பதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 100 மெகாவாட் வரை மின்சாரம் சேமிக்கலாம். சென்னையில் மட்டும் 40 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று கருதுகிறோம்'' என்றார்.

வனத்துறை முதன்மை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி கூறும்போது, "நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 28 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது 22 சதவீதம் வனப்பரப்பு இருக்கிறது. இதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு வன மேம்பாட்டுக்காக ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இன்று இரவு 8.30 முதல் 9.30 மணிவரை தேவையற்ற மின் சாதனங்களை அணைத்து பருவநிலை சீர்கேட்டிலிருந்து உலகை கொஞ்சமாவது காப்பாற்றுவோம்.

No comments: