Saturday, March 13, 2010

இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல் 2010

'அலரி மாளிகையிலிருந்து ஒருவர் சிரிக்கிறார். சிறையிலிருந்து ஒருவர் அழுகிறார்'. இதுதான் காலத்தின் கட்டாயம் என்பது. ஜனாதிபதித் தேர்தல் முடிவும் அதைத் தொடர்ந்து, இலங்கையில் நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் உலகையே திரும்பிப்  பார்க்க வைத்திருக்கிறது. தேர்தல் வெற்றிக்களிப்பில் திளைத்து நிற்கும் ராஜபக்சே அவர்கள் அவசர அவசரமாக பாராளமன்றத்தைக்  கலைத்துவிட்டு, மறு தேர்தலை அறிவித்திருக்கிறார். இரண்டு மாத கால அவகாசமிருந்தும் அதிபரின் விருப்பத்திற்கிணங்க 8.4.2010 அன்று தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையாளரும் உத்தரவிட்டிருக்கிறார். அதிபரின் வானளாவிய அதிகாரம் தேர்தல் ஆணையாளரையும் விட்டுவைக்கவில்லை. பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் பரம்பரை ஆட்சி முடிந்து ராஜபக்சே சகோதரர்களின் குடும்ப ஆட்சி தொடரும் நேரம் இது. முன்னவர்கள் ஜனநாயகத்தை கொஞ்சம் மதித்தார்கள். பின்னவர்கள் ஜனநாயகத்தைப்போட்டு மிதிக்கிறார்கள். இதுதான் உண்மை.

துப்பாக்கி சத்தம் ஓய்ந்து ஓர் அசாதாரண சூழ்நிலையில் இத்தேர்தல் நடைபெற இருப்பதால் உள்நாட்டில்  மட்டுமல்லாது வெளிநாட்டினர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாகாண தமிழ் மக்கள் வாக்களித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இருப்பதால் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக்  கருதபடுகிறது. ஒரு விடுதலை போராட்டம் நசுக்கி - அழிக்கப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு தமிழ் மக்களின் மனநிலை எப்படியிருக்குமென்பதையும் இத்தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டப்போகிறது. அதிலும் தமிழ் கட்சிகளின் தலைமை, அதன் இஸ்திர தன்மை - நாளை யார் தமிழ் மக்களை வழிநடத்த போகிறார்கள் என்பதற்கும் இத்தேர்தல் விடை அளிக்க போகிறது.

வட கிழக்கு மாகணத்தில் - இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும் தமிழர் தேசிய கூட்டமைப்பு தேர்தல் களத்தில் பிரதான போட்டியாளராக களம் இறங்கி இருந்தாலும், அதன் தலைமையில் ஏற்பட்டிருக்கும் பிளவு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. தலைமையோடு ஏற்பட்ட தகராறில் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திர குமார் தலைமையில் ஒரு குழுவாகவும், ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம் தலைமையில் மறு குழுவாகவும் கூட்டமைப்பை எதிர்த்து களம் இறங்கியிருக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் இந்த குழுக்களின் போக்கானது தமிழ் மக்களின் அரசியல் கோட்பாடுகள் - அபிலாசைகளுக்கு எதிரானதாகவே கருத வேண்டியிருக்கிறது.

வரலாற்றைக் கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், 60 வதுகளில் தமிழர் தந்தை செல்வநாயகம், தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகிய இருவரும் பிரிந்து நின்று தேர்தல்களைச் சந்தித்தார்கள். பின்னர் தமிழ் மக்களின் நலனுக்காக சேர்ந்து நின்று கூட்டணி அமைத்தார்கள். அந்த இரு தலைவர்களின் மறைவிற்கு பின் அவர்களின் வழித் தோன்றல்களான தமிழரசு கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், தமிழ் காங்கிரஸ் தலைவர் சிவ சிதம்பரம் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கி கூட்டுத் தலைமை ஏற்றார்கள். 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியையும் பெற்றுத் தந்தார்கள். இந்த தேர்தலில் கஜேந்திர குமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் கூட்டணித் தலைமையுடன் முரண்பட்டு யாழ்பாணத்தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார். தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி என்ற முன்னுதாரணத்தை இன்று மைந்தன் கஜேந்திர குமாரும் முன்னெடுத்திருக்கிறார்.

தமிழரசுக் கட்சி - தமிழ்க் காங்கிரஸ் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகி அதன் தொடர்ச்சியாக இக்கூட்டணியுடன் EPRLF, TELO ஆகிய கட்சிகள் சேர்ந்து, தலைவர் சம்பந்தன் தலைமையில் தமிழர் தேசிய கூட்டமைப்பாக செயல்படத் தொடங்கி, 2004 ஆம் ஆண்டு பாராளமன்ற தேர்தலின் போது விடுதலைப் புலிகளின் ஆதரவும் கூடுதல் பலம் சேர்க்க 22 உறுப்பினர்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றது. இது வரலாற்று உண்மை. இதை கஜேந்திர குமார் போன்றவர்கள் மறந்து விடக்கூடாது.

மேலும், வளமையாக தனது கட்சி சின்னத்தில் போட்டியிடும் டக்ளஸ் தேவானந்தா இம்முறை ராஜபக்சே கட்சியுடன் சேர்ந்து சிங்களச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ராஜபக்சேயின் கொடூர யுத்தத்தால் சின்னாப் பின்னமாக்கபட்டு - இடம்பெயர்ந்து - அகதி முகாம்களில் சிறைப்பட்டு - சித்திரவதை - கற்பழிப்பு போன்றவற்றிற்கு முகம் கொடுத்து, இழப்பதற்கு உயிரை தவிர வேறெதுவுமில்லை என்னும் நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வறுமையை வாக்குகளாக்கத் துடிக்கும் டக்ளஸ் தேவானந்தா - கருணா போன்றவர்கள் எந்த அளவுக்கு அரசியல் தீர்வைப் பற்றி யோசிக்கப்போகிறார்கள். எப்படி தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முடிவு காணப்போகிறார்கள்.

இதுதவிர முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, புற்றீசல்கள் போல் தோன்றியிருக்கும் சுயேச்சை குழுக்கள் பல போட்டியிலிருந்தாலும் வடகிழக்கு மாகணத்தை பொறுத்தமட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பெரிய கட்சியாக முன்னணியில் இருப்பது வெளிப்படையான உண்மை.

காலம்காலமாக ஒரே கொள்கை அரசியலுக்கு வாக்களித்து பழகிய தமிழ் மக்கள், சுயேட்சைக் குழுக்களுக்கும், சிறிய கட்சிகளுக்கும் இம்முறையும் வாக்களிக்கமாட்டார்கள் என்பதுதான் நம்பிக்கை அளிக்கும் செய்தி. இதற்கு சில உதாரணத்தை சொல்லலாம். 1965 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கடும் போட்டியாளராகக் கருதப்பட்ட அல்பிரட் துரையப்பா யாழ்த் தொகுதியில் சுயேட்சையாக  போட்டியிட்டார். ஆனால் இவரை எதிர்த்து 'வீடு' சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர் C.X. மார்டின் பிரமிக்கத் தக்கவிதத்தில் வெற்றிபெற்றார். மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக் காட்டிய வேட்பாளருக்கே வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது தமிழ் மக்கள் சரியான நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தாலும் ஒருவிடயத்தில் எச்சரிக்கையாக இருந்தாக வேண்டும். ஏனென்றால் வடகிழக்கு மாகணத்தில் குறைந்த விகிதத்தில் வாக்களிப்பு இருப்பதால் சிறிய கட்சிகளுக்கும் சுயேட்சைக் குழுக்களுக்கும் ஒரு சில இடங்களில் வெற்றி வாய்ப்பிருக்கிறது. இது முதலுக்கே மோசமாகிவிடும். இதை தனது கடும் உழைப்பால் கூட்டமைப்பு தடுத்து நிறுத்தி தங்கள் வெற்றியாக்கிக் கொள்ள வேண்டும்.

போர் குற்றவாளிகளுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டுச் சேர்ந்து நிற்கும் புல்லுருவிகளை அடையாளம் கண்டு, அற்ப சொற்ப சலுகைகளுக்காக எமது உரிமையை விட்டுக் கொடுக்காது, நாம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு அடிமை இல்லை என்பதை உணர்த்தும் உறுதியுடன் தமிழ் மக்கள் வாக்களித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.   

என்.ஆர்.சோமு                       

1 comment:

Anonymous said...

this time tna can take only 1 seat n batticloa