Monday, March 8, 2010

இன்று, 100-வது ஆண்டு உலக மகளிர் தினம்:

"பெண்களை வீட்டில் பூட்டிவைபோம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்" என்ற முண்டாசுக் கவிஞனின் கனவு நனவாகத் தொடங்கியுள்ளது.நூறாவது ஆண்டினைக் கொண்டாடும்  உலக மகளிர் தினத்தில் உளறு வாயனும் தன்னை இணைத்துக் கொள்கிறது.

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகன் நகரில் 1910-ம் ஆண்டில் நடைபெற்ற உலகளாவிய பெண்கள் மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, பெண்களுக்கு வேலை செய்யும் உரிமை, வாக்குரிமை, பயிற்சி பெறும் உரிமை, பொது அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை, பாலின வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1911-ம் ஆண்டில் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் "உலக மகளிர் தினம்'' முதல்முதலாக கடைப்பிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ம் நாள் கொண்டாடப்படும் "உலக மகளிர் தினம்'' இந்த ஆண்டில் 100-வது மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பெண்கள், கல்வி வாயிலாக வேலைவாய்ப்புகள் பெற்று பொருளாதார தன்னிறைவு காண்பதன் மூலமே நாட்டில் உண்மையான சமதர்ம, சமத்துவ சமுதாயம் மலரும் என்றார்கள். அந்த அடிப்படையில் தமிழகம் பல்வேறு மகளிர் முன்னேற்ற திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது.

1973-ல் காவல்துறையில் மகளிர் நியமனம்; 1989-ல் மகளிர் மேம்பாட்டு திட்டம்; ஈ.வெ.ரா நாகம்மையார் நினைவு மகளிர் இலவச பட்டப்படிப்பு திட்டம்; 2007-ல் இத்திட்டம் முதுகலை பட்டப்படிப்பு வரை நீட்டிப்பு; 1990-ல் அரசு வேலைவாய்ப்புகளில் மகளிர்க்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு; பரம்பரை சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை அளித்திடும் தனிச்சட்டம்; 1996-ல் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு; மூவலூர் மூதாட்டியார் திட்டம் உட்பட ஏழை பெண்களுக்கான பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்கள்; ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி; 50 வயது கடந்தும் திருமணமாகாத ஏழைப்பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் வீதம் உதவித்தொகை என்பன போல பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு பெண்கள் பயனடைந்து நலம் பெற்று வருகின்றனர்.

இன்று பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடுக்கான மசோதா வாக்கெடுப்பிற்கு வருவது ஆரோக்கியமான ஒன்றாகும். இது வெற்றியடிய நாமும் வாழ்த்துவோம்.

நூறாவது ஆண்டு உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழக மகளிர் அனைவருக்கும் எமது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை தெருவித்துக்கொள்வோம்.

No comments: