Thursday, February 11, 2010

அதிகாலையின் கவிதைகள்


பரீட்சை

"பரீட்சை நெருங்குகிறது
படிக்காமல் படுத்திருக்கிறாளே ...

அதிகாலை பொழுதில்
கண்விழித்த
எனக்கு
பதறியது மனம்
பதற்றமே இல்லாமல்
படுத்திருக்கும் மகளை
எழுப்பிட முயலும்
என் முன்னே  தோன்றியது
அவளின் பவித்திரமான முகமும்
அமைதியான தூக்கமும்.
என் கல்லூரி காலம்
நினைவுக்கு வந்து
எதோ ஒன்றை
என் மனதுக்குச் சொல்ல
அவளை அணைத்து
நானும் கொஞ்சம்
தூங்க முயன்றேன்
அதிகாலை அமைதியில்.

********************
ஆடும் மனசு

நேற்றைய இரவில்
அழுதுவடிந்த  மனைவியிடம்
அழுகைக்கான  காரணம் கேட்டேன்
பதிலேதும் சொல்லாத
அவளின் பிடிவாதம்
என்னையும் தாக்க
உறக்கக் கிறக்கத்தில்
தூங்கிபோனேன்.
அதிகாலை பொழுதில்
கொழும்பிலிருந்து வந்த
நண்பனின் மரணச் செய்தியை
சொல்லிவிட துடித்து
பக்கத்தில் திரும்பி
அவளைப் பார்த்தேன்,
ஆடாமல் அசையாமல்
நீட்டி நிமிர்த்திப் படுத்திருந்தாள்.
வேகமெடுத்த இதயத்துடிப்போடு 
துக்க கலக்கத்திலும்,
தூக்க கலக்கத்திலும்.
கண்களை கசக்கி உற்றுப் பார்த்தேன்
அமைதியாக தூங்குகிறாள் என்று
ஆடும் வயிறு சொன்னது.  
மரணச் செய்தியும்  தள்ளிப்போனது.  

 சுக்கிரன் 


1 comment:

Madurai Saravanan said...

super. nalla karuththu nam anupavam palarai ippatiththaan ninaikkath thonrukirathu. thanthaikku undaana pasam' kanavanukku undaana parivu super.