Saturday, February 27, 2010

மூன்றாம் கை முளைக்கட்டும்

கைகள்...

இந்த ஒற்றைச் சொல்லில் இரண்டு அடங்கியிருக்கின்றது. ஆம், பிறக்கும்போதே ஒவ்வொருவரும் இரண்டு கைகளோடு தான் பிறக்கின்றோம். பிறக்கின்ற எல்லோரும் வாகை சூடி வரலாற்று ஏடுகளில் இடம் பெற்றிருக்கின்றார்களா?

இல்லையே....சிலர் மட்டும் சிகரங்களைத் தொட்டிருக்கின்றார்கள். காரணம், அவர்களிடம் மூன்றாவது கை முளைத்திருக்கும். அது வெளியில் தெரியாத கை. உள்ளுக்குள் இருக்கும் உன்னதக் கை.

இது என்ன? புரியாத புதிராக இருக்கின்றது என்கின்றீர்களா? ஆம், அந்த மூன்றாவது கைதான் நம்பிக்கை. இதைத்தான் கவிஞர் மு.மேத்தா,

"இரண்டு கை மனிதரால்
இயலாதது - ஆனால்
மூன்றாவது கை மனிதரால்
முடியும்

அவர்களுக்கு
வானமும் வசப்படும்
கடலும் தனது
கதவு திறந்து
முத்தெடுத்துக் கொடுக்கும்

முத்தமும் கொடுக்கும்
இரு கை மனிதர்களுக்கு
இணையற்ற அந்த
மூன்றாம் கை எது?
நானறிந்த வரை
நம்பிக்கை''

என்பார்.

நம்பிக்கை... இளைஞர்களுக்கு இதுவும் ஐந்தெழுத்து மந்திரம்தான். காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை. நம்பிக்கையும் சேர்த்து சுவாசிப்பதால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு மாணவன் கல்லூரியில் கனவுகளோடு காலடி எடுத்து வைக்கிறான். மூன்று ஆண்டுகள் படித்து முடித்ததும் பட்டம் வாங்க வேண்டும் என்கிற நம்பிக்கையில்தான்.

எதிர்பாராமல் உடல்நலம் குன்றிப் போகின்றது. மருத்துவரிடம் போகின்றோம். நோயை குணப்படுத்துவார் என்கிற நம்பிக்கையில்தான்.

ஆற்றங்கரையில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு தவம் செய்கின்றது கொக்கு. தனக்கு முன்பாகத் துள்ளித்துள்ளிச் செல்லும் மீன்களை எவ்வளவு துணிச்சலோடு விட்டுவிடுகின்றது. பெரிய மீன்கள் வரும் என்ற நம்பிக்கையில்தான்.

நூறு மைல்கள் ஓடப்போகிறவன் நம்பிக்கையோடு முதல் அடியை எடுத்து வைக்கிறான். ஜெயிப்பேன் என்கிற நம்பிக்கையில்தான்.

இப்படி ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கைதான் உங்களையும், என்னையும், ஏன் எல்லோரையும் வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.

ஒரு நிகழ்வு கதை....

பத்து வயதில் மலை மேலிருந்து உருண்டு விழுந்தபோது அவரது இடது கை முறிந்துபோனது. அதற்குப் பதிலாக தன் வலது கையை ஆயிரம் கைகளைவிட வலிமையாக்கிக் கொண்டார் அந்த அற்புதப் படைப்பாளி.

"மனிதனுக்குப் பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை. எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் இருக்கிறது'' என்ற அற்புதமான சிந்தனையை தந்த அவர் தான் லெபனான் நாட்டுக் கவிஞர் கலில்ஜிப்ரான். அவரது முறிந்த சிறகுகளில் முகம் காட்டும் கதை இது.

கடற்கரை...

ஒருவன் மற்றொருவனிடம் கூறினான். பல நாட்களுக்கு முன்பு பேரலைகள் எழும்பும் நேரம். என் கைத்தடியின் நுனியால் இந்த மணற்பரப்பில் ஒரு வரி எழுதினேன். போவோரும் வருவோரும் நின்று அதைப் படித்துவிட்டுச் சென்றனர். யாரும் அதைக் கலைக்கவில்லை.

மற்றவனோ, இந்த மணலில் நானும் ஒரு வரி எழுதினேன். அலைகளும் அதிகமில்லை. ஆனாலும் கடலின் அலைகள் அதை அழித்துவிட்டன. 'ஆம், நீ அப்படி என்ன எழுதினாய்?' என்றான்.

அதற்கு அவனோ 'நான் நிரந்தரமானவன்' என எழுதினேன். 'நீ என்ன எழுதினாய்?' என்றும் கேட்டான்.

'இந்த மகாசமுத்திரத்தில் நான் ஒரு திவலை' என்று எழுதினேன் என பதிலுரைத்தான் முதலாமவன்.

வெற்றி வீரனாகத் திகழப் பிறந்திருக்கின்றோம். பெரிய பெரிய சாதனைகளைச் செய்யவே பிறந்திருக்கின்றோம் என்று நீங்கள் நம்பத் தொடங்கினால் அந்த நம்பிக்கையே உங்களைச் சுற்றி வெளிச்சத்தை ஏற்படுத்தும்.

மாவீரன் அலெக்சாண்டர்..

உலகப் படையெடுப்பைத் தொடங்குகின்றான். தொடங்கும் முன்னர் தன்னுடைய சொத்துக்களையெல்லாம் அனைவருக்கும் அள்ளி அள்ளித் தருகிறான்.

இதனைக் கண்ட அவனது ஆருயிர் நண்பர் பெர்டிகர்ஸ், அலெக்சாண்டரைப் பார்த்து, உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் உன்னிடம் மீதமிருப்பதென்ன? என்று ஆவேசத்தோடு கேட்கிறார்.

------------------------------------------------------------

மனம்...

மனித மாளிகையின் மைய மண்டபம். அதில் எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே மாறுகிறோம். குழந்தையைப் பற்றி சிந்திப்பவன் குழந்தையாகிறான். அன்பைப் பற்றிச் சிந்திப்பவன் அன்பு மயமாகிறான். செல்வத்தைப் பற்றிச் சிந்திப்பவன் செல்வந்தனாகிறான். வாழ்வதும், தாழ்வதும் அவரவர் கைகளில். ஆம், நம்பிக்கை என்கிற அந்தக் கைகளில்தான் எல்லாம் இருக்கின்றது.

இந்த நம்பிக்கையை எப்படி வளர்த்துக் கொள்வது? பிறர் சொல்வதைப் பொறுமையாகக் கேளுங்கள். வெற்றியிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். தோல்வியிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். நுண்ணறிவை விட வாழ்க்கையின் அனுபவப் பாடம் மகத்தான பாடம்.

ஒவ்வொன்றிலிருந்தும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். பத்தாவது முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி முத்தமிட்டுச் சொன்னதாம், "நீ ஒன்பது முறை எழுந்தவன்'' என்று. ஆம்... ஒவ்வொரு வீழ்ச்சியும் புதிய உணர்வோடு எழுச்சிபெறச் செய்வதற்கே... அப்படி புறப்பட வைப்பதுதான் நம்பிக்கை...

-----------------------------------------------------------

அலெக்சாண்டர் அமைதியுடன் சொன்னான், "நம்பிக்கை'' என்று.

கடற்பயணத்தின்போது வாஸ்கோடகாமாவை வழி நடத்தியது எது? நம்பிக்கைதானே. அந்த நம்பிக்கைதானே நன்னம்பிக்கை முனையைக் கண்டுபிடித்தது.

எதை இழந்தாலும் இழக்கக் கூடாதது இந்த நம்பிக்கை ஒன்றை மட்டும்தான். சூரியனின் மரணத்திற்காக வருந்திக் கொண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களை ரசிக்க முடியாது என்று தாகூர் தத்துவப்படுத்தியது நம்பிக்கையைத்தான்.

மரணம் என்பது மனித வாழ்வின் இடைவேளை. அது எப்போது வரும் என்று எவருக்கும் தெரியாது. அத்தகையை மரணம் தனது கட்டில் கால்களை வந்து கட்டிக்கொண்டிருக்கின்ற வேளையிலும்கூட இருக்கும் நிமிஷத்தை இன்பமாக்கிக் கொள்ளும் இதயம் வேண்டும். அந்த இதயத்தைக் தருவதுதான் நம்பிக்கை. இதைத்தான் வீரத்துறவி விவேகானந்தர் சொல்வார், "நம்பிக்கை உள்ளவனுக்குப் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்'' என்று.

நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு குறிக்கோளை வரையறுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நாடறிந்த நல்ல மேடைப் பேச்சாளராக வேண்டும் என்று நினைக்கின்றீர்கள். ஆனால் என்னால் மேடையில் ஐந்து நிமிடம் கூட சரியாகப் பேச முடியவில்லை. அவமானமும் பயமும் அச்சுறுத்துகின்றன என்கிறீர்களா?

கவிஞர் வைரமுத்துவை நினைவில் நிறுத்துங்கள். இன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் மணிக்கணக்கில் பேசுகின் றார். ஆனால் அன்று அந்தக்காட்சியை அவரே நினைவுபடுத்துகின்றார்.

"மேடை ஏறியதும் தவிப்பு, தத்தளிப்பு, நடுக்கம், தடுமாற்றம். நல்ல வேளை வணக்கம் என்ற சொல் ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு என் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு மேடையைவிட்டு மெல்ல இறங்கினேன்.

அன்று அந்தத் தோல்வி ஒரு வாள்போல் விழுந்து என்னை அறுத்துவிட்டதாக அழுதேன். இப்போதுதான் உணர்கிறேன். அந்தத் தோல்வி என்னை அறுக்க விழுந்தவாள் அல்ல, என்னைச் செதுக்கிய உளி'' என்று! இளைஞனே புரிந்து கொண்டாயா? அவரது இமாலய வெற்றியின் பின்புலத்தை. உங்களது பலவீனங்களைப் பட்டியலிடுங்கள். பயத்தை போக்குங்கள்.

"ஒரு பறவை ஒரு மரத்தின் கிளையில் அமரும்போது அது எந்தக் கணத்திலும் முறிந்துவிடும் என்ற பயத்தில் அமர்வதில்லை. ஏனென்றால் அது நம்புவது அந்தக் கிளையை அல்ல, தன் சிறகுகளை'' என்கிறது ஒரு ஜென் சிந்தனை.

எனக்கு எவர் கைகொடுப்பார் என்று இனியேனும் ஏங்காமல் கனவுகளில் மூழ்காமல் நானே எனக்கு நம்பிக்கையாகிறேன் என்று புறப்படுங்கள். இந்தப் பறவையைப்போல் உங்களுக்குள்ளும் நம்பிக்கை சிறகுகள் முளைக்கட்டும். நம்பிக்கை சின்ன நூல்தான். அந்த நூலினால் காற்றாடியை அல்ல கற்பாறைகளையும் பறக்கவிடலாம். நம்பிக்கைதான் வாழ்க்கை.

1 comment:

Madurai Saravanan said...

நம்பிக்கை தரும் உங்கள் கட்டுரை மற்றுமொரு கை. தன்னம்பிக்கை தரும் தனித்துவம் கண்டேன் கட்டுரையில் நன்றி. வாழ்த்துக்கள்/