Thursday, February 25, 2010

சாதனை நாயகனின் புதிய சாதனை

ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவரை யாரும் செய்திராத அபூர்வ சாதனையை செய்திருக்கிறார், இந்தியாவின் சாதனை மன்னன் 36 வயதான சச்சின் தெண்டுல்கர். குவாலியரில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை குவித்ததன் மூலம், ஒரு நாள் போட்டியில் இரட்டைசதம் அடித்த முதல் வீரர் என்ற மகுடத்தை சூடியிருக்கிறார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அது முதல் இந்த வகை கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டாலும், 200 ரன்கள் என்ற மைல்கல் யாருக்கும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

1997-ம் ஆண்டு சென்னையில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர், விவ்ரிச்சர்ட்சின் 189 ரன்கள் சாதனையை கடந்து, 194 ரன்கள் விளாசினார். ஒரு நாள் போட்டியில் தனிநபர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக இது பதிவானது. அதன் பிறகு அன்வரின் சாதனையை முறியடிக்க பல வீரர்கள் சிகரத்தில் ஏறி அருகில் சென்று நழுவவிட்டார்கள்.

1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 183 ரன்களில் ஆட்டம் இழந்து, சாதனை வாய்ப்பை நழுவ விட்டார். 2 சிக்சர் அடித்தால், 'அன்வரின் சாதனை முறியடிப்பு' என்ற நிலையில் அவர் கேட்ச் ஆனார். அதே ஆண்டில் நவம்பர் மாதம் சச்சின் தெண்டுல்கருக்கும் வாய்ப்பு வந்தது. ஐதராபாத்தில் நடந்த நிïசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் அவர் தனது மிரட்டலை காட்டியிருந்தால், அந்த சாதனையை முறியடித்து இருக்கலாம். அவ்வாறு நடக்காததால், அந்த ஆட்டத்தில் அவரது ஸ்கோர் 186 ரன்களுடன் நின்று போனது.

இதன் பிறகு, இலங்கை வீரர் ஜெயசூர்யாவுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிட்டியது. 2000-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 189 ரன்கள் எடுத்திருந்த போது, 2 ஓவர்கள் மீதம் இருந்தது. இதனால் சாதனை படைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பிங் ஆகி போனார்.

இதை தொடர்ந்து 2005-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய விக்கெட் கீப்பர் டோனி 183 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அத்துடன் 'சேசிங்' ஸ்கோர் முடிந்து விட்டதால் அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதன் பிறகு 2006-ம் ஆண்டு ஜோகனஸ்பர்க்கில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் கிப்சின் விறுவிறு பயணம் 175 ரன்னில் (32-வது ஓவரில்) முடிந்து போனது.

இச்சிறப்பை அடைவதற்காக அதிரடி நாயகர்கள் ஒரு பக்கம் மல்லுக்கட்டி கொண்டிருந்த நிலையில், சத்தமில்லாமல் ஜிம்பாப்வே வீரர் கார்லஸ் கவன்ட்ரி, அன்வரின் சாதனையை சமன் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புலவாயோவில் நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான அந்த ஆட்டத்தில் எதிர்முனை வீரரின் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அவர் 194 ரன்களுடன் நிற்க வேண்டியதாயிற்று.

இப்படி கடந்த 13 ஆண்டுகளாக அன்வரின் சாதனையை உடைக்க நடந்த ஊசலாட்ட முயற்சிகளுக்கு நேற்று முடிவு கட்டி, வரலாற்றை மாற்றியமைத்திருக்கிறார், தெண்டுல்கர்.

குவாலியரில் நேற்று பகல்-இரவு போட்டியாக நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கர், தொடக்க ஆட்டக்காரராக இறங்கினார். 2-வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கிய அவர், தென்ஆப்பிரிக்க பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அவரது பேட்டை முத்தமிட்ட பந்துகள், அடிக்கடி எல்லைக்கோட்டை கடந்தன. 90 பந்துகளில் சதத்தை கடந்த தெண்டுல்கர், செஞ்சுரிக்கு பிறகு தனது ஆட்டத்தின் வேகத்தை கூட்டினார்.

வேகத்தாக்குதல், சுழல் தாக்குதல் ஆகியவற்றை நேர்த்தியாகவும், அழகாகவும் எதிர்கொண்டு துவம்சம் செய்த தெண்டுல்கர், 45.3-வது ஓவரில் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அன்வர்-கவன்ட்ரி ஆகியோரின் கூட்டுச்சாதனையான 194 ரன்கள் என்ற இலக்கை உடைத்து, ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்பை பெற்றார். இது அவருக்கு 442-வது ஒரு நாள் போட்டியாகும்.

அத்துடன், நிற்கவில்லை. 49.3-வது ஓவரில் 200 ரன்களையும் எட்டினார். 39 ஆண்டு கால ஒரு நாள் போட்டி வரலாற்றில் 200 ரன்களை தொட்ட முதல் கிரிக்கெட் வீரர் என்ற மகத்தான பெருமை அவரது வசம் ஆனது. 200 ரன் என்ற அரிய சாதனையை தரிசிக்க, எல்லோரும் 2,962 ஒரு நாள் போட்டிகள் காத்திருக்க வேண்டி இருந்துள்ளது.

இந்த 2010-ம் ஆண்டு தெண்டுல்கருக்கு பொற்காலமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில் அவர் விளையாடிய 4 டெஸ்டிலும் சதம் அடித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது ஒரு நாள் போட்டியிலும் அற்புதம் காட்டியிருக்கிறார். 'பிப்.24-ந்தேதி' அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு விலைமதிப்பற்ற மைல்கல்லை அலங்கரித்து இருக்கிறது.

'இரட்டை சதத்தை இந்திய மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்'

200 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்ற தெண்டுல்கர் கூறுகையில், 'கடந்த 20 ஆண்டுகளாக எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்களுக்கு பின்னால் பக்கபலமாக இருக்கும் இந்திய மக்களுக்கு இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன். இரட்டைசதத்தை நினைத்து நான் ஆடவில்லை. ஆனால் 42-வது ஓவரில் 175 ரன்களை எட்டிய போது தான், அதற்கான வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தேன்' என்றார்.

அசைக்க முடியாத ஹீரோ சச்சினின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்.