Tuesday, February 23, 2010

வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

பதுளை, வெலிமட, மஹாநுவர,
தம்புல்ல, குருநாகல, வியங்கொட,
பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ,
குளியாப்பிட்டிய, கொஹ_வல, றம்புக்கன

வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்
பழிகிடக்கின்றன ‘யாப்பன’ பார்க்க!

நகரத்துத் தெருக்களிலும்
நாகவிகாரை முன்னும்
நல்லூரான் வீதி தொட்டு
நாவாந்துறை வரையும்
வண்ண வண்ண வண்டி அணி
வந்து நிக்குது
கண்ணிரண்டும் கண்டு கண்டு
வலி எடுக்குது!

கொய்த கனிகளொடு
கொய்யாக் கனிவகையுமு;
வேர்க்கடலை, சோளம்,
விறகு, பலகை, முகம் -
பார்க்கும் கண்ணாடி,
பற்றறி, மின்சாதனங்கள்
பிளாஸ்ரிக்கில் பூவும்,
பிரமிக்கும் பாத்திரங்கள்
கண்டகண் மற்றொன்றும் காண முடியாது -
திண்டாட, யாழ்ப்பாணத்
தெருநீளம் கடை விரித்தீர்!
தெருவோரம் மரநிழலில்
தண்டிறங்கிச் சமைக்கின்றீர்
வருவோரை வரவேற்று
வரலாறு படைத்தவர் நாம்!
யாழ்ப்பாணத்தான் செல்வம்
யார் யாரோ கொள்ளையிட்டார்
நீர்வாரிப் போனாலும்
நின்று பிடிக்க வல்லான்!

தலையைக் கவிழ்த்தபடி
தாம் தொலைத்த வாழ்க்கையினை
தேடுகிறார் தமிழர்கள்!
தென்னிலங்கைச் சோதரர்காள்,
இந்த மயானத்தில்
என்னத்தைத் தேடுகிறீர்?
வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

 சோ.பத்மநாதன்

4 comments:

Madurai Saravanan said...

மனது வலிக்கிறது. அருமையான கவி பகிர்வு.

skishok said...

நல்ல பதிவு நண்பரே..!

சுடுகாட்டில் பிணங்களின் கண்காட்சி,
கூடி வந்து ஊரே பாக்குது,
இல்லையடா மனச்சாட்சி... :)

நட்புடன்
கிஷோர்.

vidivelli said...

இவர்கள் மட்டுமா...நொந்து போய்,நொந்து கொண்டு இருக்கும் தமிழரை
உலகமும் வேடிக்கைதானே பார்க்கிறது.

துடிக்கிறது மனசு.உண்மைகளை அப்படியே சொல்லியிருக்கிறீங்க.ரொம்ப பிடிச்சிருக்கு.

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in