Saturday, February 13, 2010

திசைகள் உன்னைத் திரும்பிப் பார்க்கும்


1. விளக்குத் தந்த வாழ்க்கை!
 
 இந்த ஒற்றைச் சொல்லின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் ஒன்று சேர்த்தால் 'வாகை' என்ற புதிய சொல் உருவாகும்.

வாகை என்றால் வெற்றி. வாழ்க்கைக்குள் வெற்றி அடங்கி இருக்கின்றது என்பதைச் சொல்லாமல் சொல்கின்றது, வாழ்க்கை என்ற இந்தச் சொல். புரிதலில்தானே வாழ்க்கை இருக்கின்றது. பலருக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கின்றது. இருந்துகொண்டே இருக்கின்றது.

வாழ்க்கைப் பயணத்தில் ஒரு நண்பரைப் பார்த்தேன். நலம் விசாரிப்பது தானே நல்ல தொடக்கம். 'எப்படி இருக்கின்றீர்கள்' என்று கேட்டேன். கேட்டதுதான் தாமதம். உடனே, 'ஏன் கேட்கிறீங்க... நான் படுகிற கஷ்டம் எனக்குத்தான் தெரியும். ஏண்டா... இந்த உலகத்திலே பிறந்தோம்னு இருக்கு' என்று புலம்பத் தொடங்கிவிட்டார்.

நண்பருக்கு மட்டுமல்ல... பலரின் விசாரிப்புகளுக்கான விடையும் இதே புலம்பலாகத்தான் இருக்கின்றன.

வாழ்க்கை என்பது மலர்ச் சோலைகளின் நடுவில் பயணிக்கும் பயணமல்ல. அப்படி இருந்தால் அது பயணமும் அல்ல. பயணம் என்றால் சோதனைகளும், வேதனைகளும் இருக்கும். பெரும்பாலானவர்கள் தனக்கு மட்டும்தான் இந்த வேதனைகளும், சோதனைகளும் தொடர் கதையாய்த் தொடர்கின்றன என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முட்களுக்கு மத்தியில்தான் அழகான மலர்கள் மலர்கின்றன. அதுதான் அதற்கான பெருமை. பிரச்சினைகள்தான் துன்பத்திற்கெல்லாம் காரணம். பிரச்சினைகள் ஏதும் இல்லாவிட்டால் வாழ்க்கை ஒளிமயமாகும் என்று நினைக்கின்றனர்.

செயலைச் செய்யும்போது தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதில் இருந்து விடுபடாமல் திணறும்போதுதான் கவலைகளில் ரேகைகள் முகத்தில் படர்கின்றன. எனக்கும் ஒருவரும் முன்வந்து உதவவில்லையே. என்னை எவரும் புரிந்து கொள்ளவில்லையே. நான் தோற்றுப் போய்விட்டேனோ, எனக்குள் இருந்த ஆற்றல் மங்கிவிட்டதா?

கூடப்பிறந்தவர்கள் கூட உதாசீனப்படுத்துகிறார்களே, பெற்றோர்களும் கூட பாசத்தை மறந்துவிட்டு என் மீது எரிந்து விழுகின்றார்களே, உயிருக்கு உயிராய்ப் பழகிய நண்பர்களும் நழுவிவிட்டார்களே, இனி நான் என்ன செய்யப்போகிறேன்? இப்படியெல்லாம் மனம் எண்ணி எண்ணி கவலைப் படுவதைப் பார்க்கின்றோம்.

இவையெல்லாம் நடக்கும்தான். இப்படியெல்லாம் நடக்காவிட்டால் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? இன்பமாகவே எல்லோரும் வாழ விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று எவரும் இருக்க முடியாது.

இன்பத்தில் முடிவில் துன்பமும், துன்பத்தின் முடிவில் இன்பமும் இருக்கும். இரவு பகல், மேடு பள்ளம், உயர்வு தாழ்வு என்று வருகின்ற இணை கோடுகள் இவை. இன்பம் வந்தால் மகிழ்கின்றோம். இந்த இன்பத்திற்கு நாமே காரணம் என்று கனத்த குரலில் கம்பீரமாய்ச் சொல்லுகின்றோம்.

அதே நேரத்தில் துன்பம் வந்தால் மற்றவர்களைத்தான் காரணம் காட்டி சுட்டுவிரலை நீட்டிச் சுட்டிக்காட்டுகின்றோம். `காலம் வரட்டும் அவனை பழி வாங்குவேன்' என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறோம். அதன்விளைவு தூக்கமும் அமைதியும் தொலைந்துபோகும். அவன் திட்டியிருக்கலாம். அடித்திருக்கலாம். வேறு ஏதாவது செய்திருக்கலாம். அது நடந்து பல ஆண்டுகளாகியும் நாம் அதையே நினைத்து துன்பப்பட வேண்டுமா?

'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்கிறார் சங்க காலப்புலவர் கணியன்பூங்குன்றனார். ஆம், நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்களுக்கு பிறர் காரணம் அல்லர். நாமேதான் காரணம் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என அமைதி அடைய வேண்டும். அடுத்தடுத்து வரும் அலைகள் போல பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் தீவிரமாகும். சில நேரங்களில் அழுத்தம் குறையும். நாம் வருந்தும்வரை பிரச்சினையின் தாக்கம் இருக்கும். புயலுக்குப்பின் அமைதி என்பதுபோல பிரச்சினையின் முடிவில் நிறைவு உண்டாகும்.

வாழ்க்கைப் பயணத்தை இன்பமாகவோ, துன்பமாகவோ அமைத்துக் கொள்ள மனப்பக்குவமே காரணமாகிறது.

பால் கீழே சிந்திவிட்டதை எண்ணிக் கவலை கொள்வதால் அதைத் திரும்பப் பெற முடியுமா? நடந்த நிகழ்ச்சிக்காகக் கவலைப்படுவதில் பொருள் இல்லை. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது மரண வேடன் விரித்த அழகான வலை. அந்த வலைக்குள் அகப்பட்ட பறவைகள் நாம். அந்த வலைக்குள்ளிருந்து விடுதலை பெற்றாக வேண்டும்.

------------------------------------------------------------

ஒரு ஜென் கதை

சூபி ஞானியிடம் ஓர் இளைஞன் வந்தான். தான் எத்தனையோ முயற்சிகள் செய்தும் வெற்றி என்பதே கிடைக்கவில்லை. துன்பங்கள்தான் என்னைத் துரத்துகின்றன என்று அழுதுகொண்டே சொன்னான்.

அவனுக்கு அவன் மூலமாகவே பாடம் கற்பிக்க வேண்டும் என்று விரும்பினார் ஞானி. அடுத்த நாள் மாலையில் அவனுடைய வீட்டுக்கு, தான் வருவதாகச் சொன்னார்.

அடுத்தநாள் மாலை. ஞானியை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். மாலை மயங்கி இருள் சூழும் நேரம். இளைஞனை சிறிது வெளியே போகச் சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் சென்று அங்கே சில மாற்றங்களைச் செய்துவிட்டு வெளியே வந்தார்.

பிறகு வெகு நேரம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். இருள் சூழ்ந்துவிட்டது. உள்ளே சென்று விளக்கை ஏற்றி வைக்குமாறு சொன்னார்.

வீட்டிற்குள் சென்றான் இளைஞன். வழக்கமாக வைக்கும் இடத்தில் விளக்கு, தீப்பெட்டிகயைத் தேடிப்பார்த்தான். அவை எதுவும் அங்கே இல்லை. அறைக்குள் அங்கும் இங்கும் அலைந்து தடவித்தடவித் தேடிப்பார்த்தான். ஓரிடத்தில் விளக்கு இருந்தது. இன்னொரு இடத்தில் தீப்பெட்டி இருந்தது. தீக்குச்சியை எடுத்து உரசி விளக்கை ஏற்றினான்.

விளக்கின் வெளிச்சம் அறையெங்கும் பரவியது. அப்போது உள்ளே வந்தார் ஞானி. "விளக்கு ஏற்றுவதற்கு தீப்பெட்டி உரிய இடத்தில் இல்லாதபோது நீ பதட்டப்படாமல், கோபப்படாமல் தேடித் தேடி எடுத்து விளக்கை ஏற்றினாய். அதைப்போலத்தான் நீ உறுதியாகத் தீர்மானிக்கத் தெரிந்து கொண்டால் இருள் போன்ற துன்பங்களும், துயரங்களும் தூரப்போய்விடும். நீ வெற்றி என்னும் இலக்கை விரைவில் அடைவாய். உன் வாழ்க்கை வெளிச்சமாகும்'' என்றார்.

இளைஞனின் இதயத்தில் துயர இருள் நீங்கியது. விளக்கு தந்த வெளிச்சத்தில் புதிய பாதையில் பயணப்பட்டான். வாழ்க்கையின் வெற்றிக்குக் கவலைகள் தடையாக உள்ளன.

-----------------------------------------------------------

கவலைகள் நிழல்கள். நிழலில்லாத உருவம் உலகத்தில் உண்டா? நிழல் வரும், அது நிலையானதல்ல. உருவம் தான் நிஜம்.

கவலையும் அதுபோலத்தான். அதிகமாகக் கவலைப்படுவதில் அர்த்தமில்லை. உலகத்தில் கவலைப்பட்டு யாராவது முன்னேற்றம் அடைந்திருக்கிறார்களா? யாரையாவது சொல்ல முடியுமா?

'என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எது நிகழ்ந்ததோ அது நன்றாகவே நடந்தது'. கீதையின் சாரத்தை கவனத்தில் நிறுத்துங்கள். சவாலாக எடுத்துக்கொண்டால் குறை என்று கருதும் எதையும் சாதகமாக ஆக்கிக்கொள்ள முடியும்.

வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்தக் கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவரும் சொல்ல முடியாது. உங்கள் கைகளில் இருக்கின்ற காலம்தான் உங்களுக்குச் சொந்தமானது.

காலம் என்ற நதி நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கின்றது. நமக்குள் மாற்றம் ஏற்படுகிறபோது பழைய மனிதன் மரித்துப் போகிறான். புதிய மனிதன் ஒருவன் பிறக்கிறான்.

இன்றைய புதிய காலம் திறமைகள் ஆட்சிபுரியும் காலம். எல்லாம் தெரிந்து தெளிவு பெற்றிருந்தாலும் உரிய காலத்தில் செயல்பட்டு செயலை முடிக்கும் திறனைப் பெற்றிருக்க வேண்டும். இதை வெளியில் இருந்து பெற முடியாது. ஒவ்வொருவருக்கும் உள்ளிருந்து வெளியே வர வேண்டும்.

நமது நேரத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. நேரத்தின் பயன்பாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றியின் வாசல்படியைத் தொட்டுவிட்டீர்கள் என்று பொருள்.

இதோ... இந்த இனிய புதிய தொடரின் வழி நீங்களும் வெற்றியின் வாசலைத் தொட்டுவிட்டீர்கள். இனி எங்கும் வெற்றிதான். இனி எங்கும் இன்பமயம்தான். எத்தனை கோடி இன்பம்வைத்தாய் இறைவா என வாழ்க்கைக்கு நன்றி சொல்வீர்கள்.

(திசைகள் இன்னும் விரியும்)
பேராசிரியர் ராமச்சந்திரன். 

No comments: