Wednesday, February 10, 2010

பத்திரிக்கைச் செய்திகள்

பொன் சேகாவுக்கு ஆயுள் தண்டனை? - ராணுவ கோர்ட்டில் விசாரணை

இலங்கை முன்னாள் தளபதி பொன்சேகா மீது ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தவும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் அதிபர் ராஜபக்சே திட்டமிட்டு இருக்கிறார்.

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர், இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா. ராணுவ தளபதி பதவியை விட்டு விலகிய அவர், ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ராஜபக்சேயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரை இலங்கை ராணுவ போலீசார் கைது செய்து, காவலில் வைத்து இருக்கிறார்கள்.


ராணுவ தளபதியாக இருந்து கொண்டே, எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு, இலங்கை அரசை கவிழ்க்க சதி செய்ததாகவும், ராணுவ வீரர்கள் இடையே பிளவு ஏற்படுத்த முயன்றதாகவும், ராணுவத்தில் இருந்து தப்பி வந்த வீரர்களை தன்னுடன் வைத்து இருந்ததாகவும், பொன்சேகா மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பொன்சேகாவை, ராணுவ கோர்ட்டில் நிறுத்தி, விசாரணையை விரைவாக முடிக்கவும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் அதிபர் ராஜபக்சே திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

ராணுவ தளபதி மற்றும் கூட்டு படை தலைமை அதிகாரி என்ற பதவிகளில் பொன்சேகா இருந்தபோது, அரசை கவிழ்க்க சதி செய்தார் என்பதை உறுதிபடுத்தும் வகையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வாக்குமூலம் கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்சேகா கைது ஆன போது, அவர் தனது அலுவலகத்தின் முதல் மாடியில் எதிர்க்கட்சி தலைவர்களுடன், நடக்க இருக்கும் பொது தேர்தல் பற்றி விவாதித்துக்கொண்டு இருந்தார். இந்த கூட்டத்தில் மனோ கணேசன் எம்.பி.யும் கலந்து கொண்டார்.

பொன் சேகா கைது செய்யப்பட்டதை நேரில் பார்த்த மனோ கணேசன், நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் அனைவரும் தேர்தல் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீர் என்று கதவை உடைத்துக்கொண்டு ராணுவ போலீசார் உள்ளே நுழைந்தனர். "என்னை கைது செய்தால், சிவில் போலீஸ் மூலம்தான் கைது செய்ய வேண்டும்'' என்று பொன்சேகா கூறினார். ஆனால் இதை ராணுவ போலீசார் காதில் வாங்கிக்கொள்ள வில்லை.

மாறாக, அவர் மீது பாய்ந்து, கை-கால்லை பிடித்து "தர தர'' என்று இழுத்துச்சென்றனர். ஒரு பயங்கரவாதியை சந்தேகத்தின் பேரில் இழுத்து செல்வது போல அவரை கொண்டு சென்றனர். அப்போது, பொன்சேகா திமிறினார். உடனே ராணுவ போலீஸ்காரர் ஒருவர், பொன்சேகாவின் பிடறியில் கைகளால் அடித்ததை பார்த்தேன்.

ராணுவ போலீசிடம் இருந்து விடுபட பொன்சேகா கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு, ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. கையில் விலங்கிட்டு அவரை வலுக்கட்டாயமாக கொண்டு சென்றதை கண்டிக்கிறோம்.

ராணுவ போலீசார் உள்ளே நுழைந்ததும், முதல் வேலையாக எங்கள் மெய் காப்பாளர்களின் ஆயுதங்களை, பறித்து விட்டனர். பொன்சேகாவை கைது செய்து இழுத்து சென்ற பின்பும், எங்களை அந்த அறையை விட்டு வெளியே செல்ல ராணுவ போலீசார் அனுமதிக்கவில்லை.

எனவே நானும், மற்ற எம்.பி.க்களான ரவூப் ஹக்கீம், நெத்தி சோமவன்ஸ் ஆகியோர் அதே அறையில் 30 நிமிடங்கள் வைக்கப்பட்டு இருந்தோம். அதன்பின்தான் வெளியே செல்ல அனுமதித்தனர்.

இவ்வாறு மனோ கணேசன் கூறினார்.

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்ரமசிங்கே கூறுகையில், "சரத் பொன்சேகாவை கைது செய்தது, சட்டவிரோதமானது., ஜனநாயகத்துக்கு எதிரானது. அவரது கைது ராணுவ சட்டங்கள் படி மட்டும் அல்ல., நாட்டின் பொதுவான சட்டங்கள் படியும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று தெரிவித்தார்.

இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 8-ந் தேதி இரவு, முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவை கைது செய்தோம். நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும், ராணுவ குற்றங்களுக்காகவும், அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவருக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்து காவலில் வைத்து இருக்கிறோம். தேவையான மருத்துவ உதவிகள் அளித்து வருகிறோம். அவரது வக்கீல் மற்றும் குடும்பத்தினர் அவரை சந்திக்க தடை ஏதும் இல்லை'' என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இலங்கை அரசின் மூத்த மந்திரி ராம்புக்வெல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

பொன்சேகாவை கைது செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன. அவர், ராணுவ சட்டம் 58-ன் படி குற்றவாளி ஆகிறார்.

விசாரணை முடியும் வரை அவர் ஜெயிலில்தான் இருப்பார். தேர்தல் விதிகள் அனுமதித்தால், அவர் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்.

ஜெயிலில் இருக்கும் பொன்சேகாவை சந்திக்க அவரது மனைவி அனோமா அனுமதி கேட்டு இருக்கிறார். அதுபற்றி பரிசீலிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கை மந்திரி கூறினார்.

இதற்கிடையில் பொன்சேகா கைது செய்யப்பட்டு இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

இது குறித்து அமெரிக்க அரசின் வெளி உறவுத்துறை பேச்சாளர் பிலிப் கிரவுசி கூறுகையில், "பொன்சேகாவை கைது செய்ததால், ராணுவத்திலும், மக்களிடமும் பிளவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இலங்கை அரசு, முதலில் அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக விதிகளின்படி இலங்கை அரசு செயல்பட வேண்டும். பொன்சேகாவை கைது செய்தது தேவை அற்ற செயல். இலங்கையில் நடந்து வரும் செயல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்'' என்று கூறினார்.



இலங்கை பாராளுமன்றம் 'திடீர்' கலைப்பு

இலங்கை பாராளுமன்றம் நேற்று திடீரென கலைக்கப்பட்டது. முன்னதாகவே தேர்தல் நடத்த திட்டமிட்டு அதிபர் ராஜபக்சே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேயின் பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன. ஆனால் விடுதலைப்புலிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிய அவர் தற்போது அதிபர் தேர்தலை நடத்தினால் எளிதில் வெற்றி பெறலாம் என்று நினைத்தார்.

அதன்படி தனது பதவிக்காலம் முடிவதற்குள்ளாகவே கடந்த மாதம் 26-ந் தேதி அதிபர் தேர்தலை நடத்தினார். இதில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து சரத் பொன்சேகா ராணுவ புரட்சி நடத்தி தன்னையும், தனது சகோதரர்களையும் கொன்று, ஆட்சியை பிடிப்பார் என்று கருதி நேற்று முன்தினம் பொன்சேகாவையும் கைது செய்தார்.

தொடர்ந்து தனக்கு வெற்றிமுகம் இருப்பதாக எண்ணும் ராஜபக்சே பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு முன்னதாகவே அதை கலைத்து விட்டு பொதுத்தேர்தலை சந்திப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினார்கள். அதன்படியே அவரும் நேற்று திடீரென பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக உத்தரவில் கையெழுத்திட்டார். பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் ஏப்ரல் மாதம் முடிகிறது.

இதைத்தொடர்ந்து விரைவில் பாராளுமன்றத்துக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments: